அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கே அரசு பள்ளியின் மீது நம்பிக்கையில்லையா? இது போன்ற கேள்விகள் பெருமளவில் பரவலாகக் கேட்கப்படுகிறது.. பத்தாம் வகுப்புத் தேர்வில் மாநில
அளவில் சிறப்பிடம் பிடித்தவர்களில் 99 சதவீதத்தினர் தனியார் பள்ளியில் பயின்றவர்கள். அவர்களின் பெரும்பாலானோரின் பெற்றோர், அரசு பள்ளி ஆசிரியர்கள்! அரசுப் பள்ளி ஆசிரியர்கள் மீதான இதுபோன்ற குற்றச்சாட்டுகள் இன்று நேற்றல்ல, காலம் காலமாய் நிகழ்ந்து வருவது. அரசுப் பள்ளி ஆசிரியர்கள் தங்கள் குழந்தைகளை தனியார் பள்ளிகளில் படிக்க வைக்கின்றனர் என்பதே மக்களின் பொதுவான குற்றச்சாட்டு. அரசுப் பள்ளிகளின் மீது அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கே நம்பிக்கையில்லை!" என்பதே இந்த விமர்சனத்தின் சாரம்.
அரசாங்க மருத்துவர்கள் தங்கள் குழந்தைகளை மேலான சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைகளில் அனுமதிப்பதில்லையா? அதனால் அவர்களுக்கு அரசு மருத்துவர்களின் மீதும், அவர்களின் திறமையின் மீதும் நம்பிக்கையில்லை என்று அர்த்தமா? அரசாங்க மருத்துவமனைகளில் தகுந்த வசதிகள் இல்லாதபோது தனியார் மருத்துவமனையை நாடுவதில் தவறென்ன இருக்க முடியும்? அல்லது, அரசு பணிகளில் அமர்ந்திருக்கும் பல லட்சம் மக்கள் தங்கள் பல்வேறு தேவைகளுக்காக தனியார் அமைப்புக்களை நாடுவதில்லையா? அதுபோலவே, அரசுப் பள்ளி ஆசிரியர்கள் தனியார் பள்ளிகளை நாடுவதும்! ஒரு நாளில் குறைந்தபட்சம் அரைமணி நேரம் பயணிக்கக் கூடிய பேருந்துகளில் கூட வீடியோ ,ஆடியோ குளிர்சாதன வசதி என்று ஆயிரம் வசதிகளை எதிர்ப்பார்க்கும் மக்கள், அரசு பேருந்துகள் காலியாகவே இருந்தாலும் அதை தவிர்த்து தனியார் பேருந்துகளில் முண்டியடித்து பயணிப்பதில்லையா? அதற்காக, நாம் மக்களை குறை கூறுகிறோமா? அரைமணி நேர பயணத்திற்கே ஆயிரம் வசதிகள் எதிர்ப்பார்க்கும் நாம், தங்கள் குழந்தைகள் ஆண்டுமுழுவதும் பயிலக்கூடிய பள்ளிகள் அடிப்படை கட்டமைப்புகளுடனும் மேலான வசதிகளுடனும் இருக்கவேண்டும் என்ற அரசுப் பள்ளி ஆசிரியர்களின் எதிர்பார்ப்பை மட்டும் ஏன் குறை கூற முற்படுகிறோம்? நம் குழந்தைகள் வீட்டில் அனுபவிக்கும் வசதிகளை பள்ளியிலும் அனுபவிக்க வேண்டும்;சுத்தமான குடிநீரும் கழிப்பறை வசதிகளும் கொண்ட தூய்மையான ஆரோக்கியமான சூழலில் தங்கள் பிள்ளைகள் கல்வி கற்க வேண்டும் என்பது எல்லா விதமான பெற்றோரின் எதிர்ப்பார்ப்பும் தானே? இதில் அரசுப் பள்ளி ஆசிரியர், மற்ற பெற்றோர் என்ற பாகுபாடு ஏன்? அரசுப் பள்ளிகளில் தரமான கற்பித்தல் நடைபெறுவதில்லை என்பதும், தனியார் பள்ளிகளில் நல்ல தேர்ச்சி வருகின்றது என்பதும் ஒரு மாயை. ஒரு வீட்டில் இருக்கும் இரு குழந்தைகளில் ஒரு குழந்தை நன்றாக உணவு உட்கொள்பவனாகவும், அடுத்த குழந்தை சாப்பிடவே மறுப்பவனாகவும் இருக்கின்றனர். இரண்டு குழந்தைகளுக்கும் ஒரே மாதிரி உணவுதான்; ஒரே மாதிரி சுவைதான்; ஆனால், ஒரு குழந்தை மட்டும் சாப்பிட மறுக்கும்போது, அதற்காக நாம் அந்தத் தாயின் சமையலை குறை கூறவியலுமா? தனியார் பள்ளிகளில் பயிலும் குழந்தைகள் அந்த முதல் குழந்தையை போல. அவர்களை யார் வேண்டுமானாலும் பயிற்றுவிக்க முடியும்? ஆனால், அரசு பள்ளிகளில் பயிலும் குழந்தைகள் இரண்டாவது குழந்தையைப் போல. இவர்களை பயிற்றுவிப்பவர்கள்தான் திறமைசாலிகள். அந்த வகையில் பார்த்தால் கிராமப்புறப் பின்புலத்தில் இருந்து எந்தவித அடிப்படை வசதிகளும் பெற்றோரின் வழிக் காட்டுதலும் இன்றி இரண்டாவது பிள்ளையைப் போல ஆர்வமின்றி படிக்க வரும் ஏழைக் குழந்தைகளை சிரமப்பட்டு படிக்கவைத்து தேர்ச்சி பெற அயராது உழைப்பவர்கள் அரசுப் பள்ளி ஆசிரியர்களே! தேர்வு முடிவுகள் வந்த சில நாட்களுக்கு மட்டுமே அரசு பள்ளிகள் மீது தங்கள் பார்வையை வீசும் ஊடகமும், கருத்தாளர்களும் சாதாரண நாட்களில் பள்ளியை எட்டிப் பார்ப்பது உண்டா? காலையில் பள்ளி நுழைவு வாயிலிலேயே சிகரெட் துண்டுகளை கடந்து,வகுப்பறையின் எதிரில் அவசர கோலத்தில் வீசப்பட்டு கிடக்கும் கால்சட்டைகளையும், கேட்பாரற்று கிடக்கும் மலிவு விலை கால்கொலுசையும், கழுத்து சங்கிலியையும், அவற்றை புரிந்தும் புரியாமலும் பார்க்கும் பிள்ளைகளையும் கடந்து வகுப்பறைக்குள் நுழைநதால், ஜன்னல் வழியே வீசப்பட்டு நொறுங்கிக் கிடக்கும் மதுபாட்டில்களின் சிதறல்களை சுத்தம் செய்வது யார் என்ற பட்டிமன்றதிலுமே மூன்றாம் பாடவேளை வரை கடந்துவிடுகிறதே அதையா வது அறிந்ததுண்டா? வகுப்பறையில் மொபைல் பயன்படுத்துவது தவறு என்பதற்காக பாடம் நடத்திக் கொண்டிருக்கையில், அதனை கவனிக்காமல் மாணவன் பார்த்துக்கொண்டிருந்த அலைபேசியை வாங்கி அதிர்ச்சியிலும் அருவெறுப்பிலும் உறைந்து போகும் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்கள், தொடர்ந்து அவ்வகுப்பில் பாடம் கற்பிக்க இயலாமல் தடுமாறிக் கொண்டிருக்கின்றனரே... அவர்களின் நிலையையாவது இவர்கள் அறிவாரா? பிள்ளைகளை கடிந்து ஒரு வார்த்தை பேசக்கூடாது, தண்டிக்கக் கூடாது, மீறினால் சிறைவாசம் என்று ஆசிரியர்களுக்கு ஆயிரம் கட்டுப்பாடுகளை விதிக்கும் அரசு மாணவர்களுக்கு அளித்திருக்கும் கட்டுப்பாடில்லா சுதந்திரம் அவர்களை தறிக்கெட்டு அலையவிட்டு இருப்ப தையாவது அறிவார்களா? கண்ட இடங்களில் எச்சில் துப்புவது,பள்ளியிலேயே - அடித்துவிட்டு ஆசிரியர் மீதே இடிப்பது,செவிகளை பொத்திக்கொள்ளும் அளவுக்கு அருவெறுக்கத்தக்க வார்த்தைகளை பயன்படுத்துவது என்று சமுதாயத்தின் அத்தனை அவலங்களையும் ஒருங்கே கொண்டதாய் பெரும்பாலான அரசுப் பள்ளிகள் திகழும்போது, தினம் தினம் அவற்றிலேயே உழலும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் எப்படி தங்கள் பிள்ளைகளை அப்பள்ளிகளில் சேர்ப்பர்? அரசு கொடுக்கும் இலவசங்களை பெற மட்டும் பள்ளிகளுக்கு அவசரமாய் வருகைத் தரும் பெற்றோர்கள் இவற்றை கட்டுப்படுத்த ஏன் முயல்வதில்லை? பெற்றோர் - ஆசிரியர் கூட்டத்திற்கு எத்தனை பெற்றோர் தவறாமல் வருகைபுரிகின்றனர்? இப்படிக் கட்டமைப்பு வசதியிலும் ஒழுக்கத்திலும் மோசமாகவே பெரும்பாலான அரசுப் பள்ளிகள் இருக்கும் சூழலில், எந்த அரசுப் பள்ளி ஆசிரியப் பெற்றோர் மனமுவந்து அரசுப் பள்ளிகளை நாடுவர்? பெரும்பாலான தனியார் பள்ளிகளில் மாணவர்களின் மனனம் செய்யும் திறன் மட்டுமே வளர்க்கப்படுகிறது. மாணவர்கள் அறிவுச்சிறை (intellectual imprisonment)- க்குள் தள்ளப்படுகின்றனர். அரசுப் பள்ளிகளில் மட்டுமே மாணவர்களின் இயல்பான முழு ஆளுமைத்திறன் வளர்ச்சி சாத்தியப்படுகிறது. பகல் கொள்ளையர்களாய் தனியார் பள்ளிகளின் கல்வித் தந்தையர் செயல்படுகின்றனர் என்பதை எல்லாம் அறிந்தும், வேறு வழியின்றியே தங்கள் குழந்தைகளை தனியார் பள்ளிகளில் சேர்க்கின்றனர். அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் அனைவரும் அரசு தேர்வாணையம் மூலமாகவோ அல்லது ஆசிரியர் தகுதி தேர்வு எழுதி வென்றவர்களாகவோ மட்டுமே இருகின்றனர். அவர்களிடம் திறமைக்கும் அறிவுக்கும் அனுபவத்திற்கும் குறைவில்லை. ஆகவே, அரசுப் பள்ளிகளின் மீது அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கே நம்பிக்கையில்லை என்று இனியும் பொதுவாய் கூறுவதை மக்கள் தவிர்க்க வேண்டும். அதற்குப் பதிலாக, அரசுப் பள்ளிகளை மேம்படுத்துவதற்குத் தன்னால் ஆன பங்களிப்பை அளிக்க முயற்சிக்க வேண்டும்.
No comments:
Post a Comment