Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Tuesday, 21 January 2014

பிளஸ் 2, 10 ஆம் வகுப்பு தேர்வுகளில் 95% தேர்ச்சிக்கு இலக்கு: பள்ளிக் கல்வித் துறைச் செயலாளர் சபிதா

பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வுகளில் தேர்ச்சி விகிதத்தை 95 சதவீதமாக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வித் துறைச் செயலாளர் டி.சபிதா கூறினார்.
 தென் இந்திய அளவிலான 27-ஆவது அறிவியல் கண்காட்சி சென்னை சேத்துப்பட்டில் உள்ள எம்.சி.சி. மேல்நிலைப் பள்ளியில் திங்கள்கிழமை தொடங்கியது. பள்ளிக் கல்வி அமைச்சர் கே.சி.வீரமணி இந்தக் கண்காட்சியைத் தொடங்கி வைத்தார்.
 கண்காட்சி தொடக்க நிகழ்ச்சியில் டி.சபிதா பேசியது:
 இந்த ஆண்டு பத்தாம் வகுப்புத் தேர்வை சுமார் 11 லட்சம் மாணவர்களும், பிளஸ் 2 தேர்வை 9 லட்சம் மாணவர்களும் எழுத உள்ளனர். கடந்த ஆண்டை விட 50 ஆயிரம் மாணவர்கள் இந்த ஆண்டு கூடுதலாக தேர்வு எழுதுகிறார்கள்.
 கடந்த ஆண்டு இந்த இரண்டு வகுப்புகளிலும் 89 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர். இந்தத் தேர்ச்சி விகிதத்தை இந்த ஆண்டு 95 சதவீதமாக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.  அரசுப் பள்ளிகளில் 70 சதவீதத்துக்கும் குறைவான தேர்ச்சி பெற்ற பள்ளிகளின் தலைமையாசிரியர்களுக்கு மட்டும் தனி ஆலோசனை கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. இந்தப் பள்ளிகளில் 100 சதவீத தேர்ச்சியை எட்டுவதற்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன.
 17 ஆயிரம் அறிவியல் ஆசிரியர்கள்: பள்ளிக் கல்வித் துறையில் கடந்த இரண்டரை ஆண்டுகளில் 63 ஆயிரம் 125  ஆசிரியர்களை நியமிக்க ஒப்புதல் வழங்கப்பட்டது. இதில் 51 ஆயிரம் 757 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
 நியமிக்கப்பட்டவர்களில் 17 ஆயிரம் பேர் அறிவியல் பாட ஆசிரியர்கள். தொடக்க, நடுநிலை மற்றும் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் இவர்கள் மாணவர்களுக்கு அறிவியலைக் கற்றுத் தருகின்றனர்.  அதோடு, அறிவியல் ஆய்வகங்களில் பணியாற்றுவதற்காக 4,393 ஆய்வக உதவியாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். இதனால் மாணவர்களுக்கு அறிவியல் பரிசோதனைகளை பள்ளி ஆய்வகங்களிலேயே மேற்கொள்வதற்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது, என்றார் அவர்.
 விஸ்வேஸ்வரய்யா தொழில் மற்றும் தொழில்நுட்ப அருங்காட்சியக இயக்குநர் கே.ஜி.குமார்:  இந்தக் கண்காட்சியில் தமிழகம், கேரளத்திலிருந்து தலா 49 புதிய அறிவியல் கண்டுபிடிப்புகளும், ஆந்திரத்திலிருந்து 46 கண்டுபிடிப்புகளும், கர்நாடகத்திலிருந்து 43, புதுச்சேரியிலிருந்து 39 கண்டுபிடிப்புகளும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
 இந்த ஆண்டுதான் முதல் முறையாக கண்காட்சியில் காட்சிப்படுத்தப்படும் கண்டுபிடிப்புகளின் எண்ணிக்கை 200-ஐ தாண்டியுள்ளது என்றார் அவர்.  அனைவருக்கும் கல்வித் திட்ட இயக்குநர் பூஜா குல்கர்னி, தமிழ்நாட்டுப் பாடநூல்  மற்றும் கல்விப் பணிகள் கழக நிர்வாக இயக்குநர் சி.என்.மகேஸ்வரன், பள்ளிக் கல்வி இயக்குநர் வி.சி.ராமேஸ்வர முருகன், அரசுத் தேர்வுகள் இயக்குநர் கே.தேவராஜன்,  தொடக்கக் கல்வி இயக்குநர் ஆர்.இளங்கோவன் உள்ளிட்டோர் இதில் பேசினர்.
 இந்த விழாவில் வாய் பேசாத மற்றும் கேட்கும் திறனற்ற குழந்தைகளின் நடனமும் பார்வையற்ற குழந்தைகளின் பாடல்களும் அனைவரையும் கவர்ந்தது.

No comments:

Post a Comment