சேலம் மாவட்டத்தில் இந்தாண்டு 38 ஆயிரத்து 325 மாணவ–மாணவிகள் பிளஸ்–2 தேர்வு எழுதுகின்றனர். இதையொட்டி பள்ளி தலைமை ஆசிரியர்களுடன் கல்வித்துறை அதிகாரிகள் நேற்று ஆலோசனை கூட்டம் நடத்தினர்.
பிளஸ்–2 தேர்வு
தமிழ்நாட்டில் இந்தாண்டு பிளஸ்–2 தேர்வு மார்ச் மாதம் 3–ந் தேதி தொடங்கி மார்ச் 25–ந் தேதி முடிவடைகிறது. இந்த தேர்வை சுமார் 8 லட்சத்து 26 ஆயிரம் பேர் எழுதுகிறார்கள். தமிழகம் முழுவதும் பிளஸ்–2 தேர்வை எவ்வித முறைகேடுகள் இல்லாமல் சிறப்பான முறையில் நடத்தி முடிக்க தேர்வுத்துறை மூலம் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சேலம் மாவட்டத்தை பொறுத்தவரையில் இந்தாண்டு சுமார் 38 ஆயிரத்து 325 மாணவ–மாணவிகள் பிளஸ்–2 தேர்வு எழுதுகின்றனர். இவர்கள் தேர்வு எழுத வசதியாக மாவட்டம் முழுவதும் 90 மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
முன்னேற்பாடு பணிகள்
இந்த மையங்களில் மாணவ–மாணவிகளுக்கு தேவையான குடிநீர், காற்றோட்டமான வகுப்பறை, மின்சாரம் தடைபட்டால் அதற்கு மாற்றாக ஜெனரேட்டர் வைப்பது போன்ற முன்னேற்பாடு பணிகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என்று அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் அறிவுரை வழங்கி உள்ளனர்.
இதனிடையே, பிளஸ்–2 மாணவ–மாணவிகளுக்கான செய்முறை தேர்வு அடுத்த மாதம் 2–வது வாரத்தில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆலோசனை கூட்டம்
இந்தநிலையில், சேலம் மாவட்டத்தில் பிளஸ்–2 தேர்வுகளை சிறப்பான முறையில் நடத்துவது? பள்ளிகளில் எத்தனை மாணவ–மாணவிகள் தேர்வு எழுதுகிறார்கள்? செய்முறை தேர்வுகளை எத்தனை நாட்களுக்குள் நடத்தி முடிப்பது? என்பது குறித்தும் அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் சூரமங்கலம் செயின்ட் ஜோசப் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடத்தப்பட்டது. இதில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஈஸ்வரன் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் மாவட்ட கல்வி அலுவலர்கள் ராமலிங்கம் (சேலம்), திலகம் (சங்ககிரி), மெட்ரிக் பள்ளிகளின் ஆய்வாளர் வெங்கடாசலபதி ஆகியோர் கலந்து கொண்டு தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுரை வழங்கினர்.
இது குறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஈஸ்வரன் கூறுகையில், சேலம் மாவட்டத்தில் இந்தாண்டு சுமார் 38 ஆயிரத்து 325 மாணவ–மாணவிகள் பிளஸ்–2 தேர்வு எழுதுகிறார்கள். 90 மையங்களில் தேர்வுகள் நடைபெறுகிறது. இதற்காக அரசு மற்றும் அரசு உதவிபெறும், தனியார், மெட்ரிக் மேல்நிலைப்பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுடன் இன்று (அதாவது நேற்று) ஆலோசனை நடத்தப்பட்டது. இதில் பிளஸ்–2 தேர்வுகளை எவ்வித முறைகேடுகள் இல்லாமல் நடத்த வேண்டும் என்று ஆலோசனை கூறப்பட்டது. செய்முறை தேர்வுகள் எப்போது நடத்துவது என்பது குறித்து இதுவரை அறிவிப்பு ஏதும் வரவில்லை, என்றார்.
No comments:
Post a Comment