Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Wednesday 29 January 2014

பள்ளி மாணவர்களுக்கு புத்தகத்துக்கு பதில் டேப்லட் கல்வி முறை: பிரிட்டிஷ் கவுன்சில், டிசிசி நிறுவனம் ஏற்பாடு


 பிரிட்டிஷ் கவுன்சில் மற்றும் தனியார் நிறுவனம் இணைந்து பள்ளி மாணவர்களுக்கான ‘டேப்லட் கல்விமுறையை’ அறிமுகப்படுத்தியுள்ளது. பிரிட்டிஷ் கவுன்சில் மற்றும் டிசிசி நிறுவனம் (தி கரிக்குலம் கம்பெனி) இணைந்து பள்ளி மாணவர்களுக்கு, புத்தகத்திற்கு பதில் ‘டேப்லட்டில் கல்வி கற்கும் முறையை’ அறிமுகப்படுத்தியுள்ளது. இது குறித்து விளக்கும் நிகழ்ச்சி சென்னை பிரிட்டிஷ் கவுன்சிலில் நேற்று நடைபெற்றது. இதில், பிரிட்டிஷ் கவுன்சில் தென்னிந்திய இயக்குனர் பால் செல்லர்ஸ், இணை இயக்குனர் நிருபா பெர்னான்டஸ், டிசிசி நிறுவன நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி உஜ்வல் சிங், இணை நிறுவனர் ஜனகா புஷ்பானந்தம், ஸ்ரீ பாலவித்யாலயா பள்ளி தாளாளர் சந்தானலெட்சுமி உள்பட பலர் கலந்து கொண்டனர். 

நிகழ்ச்சியில் பிரிட்டிஷ் கவுன்சில் தென்னிந்திய இயக்குனர் பால் செல்லர்ஸ் பேசுகையில், “ ஆங்கில கல்வி வளர்ச்சியில் பிரிட்டிஷ் கவுன்சில் அதிக கவனம் செலுத்தி வருகிறது. அந்த வகையில், டிடிசி நிறுவனத்துடன் இணைந்து பள்ளி மாணவர்களின் ஆங்கில அறிவை வளர்க்கவும், புத்தக சுமையை குறைக்கவும் இந்த டேப்லட் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில், ஆங்கிலம், அறிவியல், சமூக அறிவியல், கணக்கு போன்ற பாடங்களை படிக்க முடியும். சென்னையில் முதல் முறையாக பெரம்பூரில் உள்ள ஸ்ரீ சாரதா வித்யாலயா பள்ளியில் இந்த டேப்லட் கல்வி முறை தொடங்கப்பட்டுள்ளது“ என்றார். 

டிசிசி நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி உஜ்வல் சிங் பேசுகையில், “ மாணவர்களின் சுமையை குறைப்பதற்கும், கல்வியை எளிதாக்கவும் இந்த டேப்லட் கல்விமுறையை அறிமுகப்படுத்தியுள்ளோம். இந்த டேப்லட்டின் விலை ரூ.7 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரை. பள்ளியில் மாணவர்களுக்கு டேப்லட்டும், ஆசிரியருக்கு மடிக்கணிணியும் வழங்கப்படும். மடிக்கணிணி மூலம் ஆசிரியர் மாணவர்களின் டேப்லட்டை கட்டுப்படுத்தலாம். பள்ளியில் இணைய இணைப்பு வழங்கப்படும். அதில் பள்ளி நிர்வாகம் மற்றும் ஆசிரியர் அனுமதிக்கும் இணைய தளங்களையே பார்க்க முடியும். 

அதே வேளையில் வீட்டிலும் ஆப்-லைன் மூலமாக பாடங்களை படிக்கலாம். சென்னையை சேர்ந்த 50 பள்ளிகள் அடுத்த ஆண்டு முதல் தங்கள் பள்ளிகளில் இந்த டேப்லட் கல்விமுறையை அமல்படுத்த எங்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்“ என்றார். நிகழ்ச்சியின் இறுதியில், டேப்லட்டை பயன்படுத்துவது எப்படி என்பது குறித்து ஸ்ரீ சாரதா வித்யாலயா பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியை ப்ரீத்தி ஆகியோர் செயல்முறை விளக்கம் அளித்தனர்.

No comments:

Post a Comment