கும்பகோணம் பள்ளித் தீ விபத்து தொடர்பாக தமிழக அரசின் தலைமைச் செயலர் மோகன் வர்கீஸ் சுங்கத்துக்கு நேரில் ஆஜராகுமாறு நோட்டீஸ் அனுப்ப சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கும்பகோணத்தில் உள்ள
ஸ்ரீ கிருஷ்ணா தொடக்கப் பள்ளி - சரஸ்வதி தொடக்கப் பள்ளியில் கடந்த 2004-ஆம் ஆண்டு ஜூலை மாதம் தீ விபத்து நடந்தது. அதில், 94 குழந்தைகள் இறந்தனர். 18 குழந்தைகள் பலத்த தீக்காயம் அடைந்தனர்.
அதிகாரிகளின் கவனக் குறைவால்தான் இந்த விபத்து நடந்தது என்பதால் அதிக இழப்பீடு வழங்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் என இறந்த குழந்தைகளின் பெற்றோர்கள் உயர் நீதிமன்றத்தில் கடந்த 2012-ஆம் ஆண்டு வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி இறந்த குழந்தைகளின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்குவது தொடர்பாக நீதிபதி பி.சண்முகம் தலைமையில் ஒரு நபர் குழுவை அமைக்க உத்தரவிட்டார். அந்தக் குழு ஆறு மாதங்களுக்குள் இழப்பீடு வழங்குவது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் தனி நீதிபதி உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், நீதிபதி பி.சண்முகம் தலைமையில் ஒரு நபர் குழு அமைத்தது சரிதான். இந்த உத்தரவின் நகல் கிடைத்த நாள் முதல், நான்கு மாதங்களுக்குள் ஒரு நபர் குழு அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டது.
ஆனால், உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை தமிழக அரசு நிறைவேற்றவில்லை. எனவே, தமிழக அரசின் தலைமைச் செயலர், பள்ளிக் கல்வித் துறை செயலர் ஆகியோர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தீ விபத்தில் பலியான குழந்தைகளின் பெற்றோர்கள் சார்பில் கே.இன்பராஜ் உயர்நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, புதிய குழு அமைக்க வேண்டும் என்ற உயர்நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து இந்த மனு நீதிபதிகள் என்.பால்வசந்தகுமார், நீதிபதி கே.ரவிச்சந்திரபாபு ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், தலைமைச் செயலர் மோகன் வர்கீஸ் சுங்கத்தும் பள்ளிக் கல்வித் துறைச் செயலர் டி.சபிதாவும் செப்டம்பர் 1-ஆம் தேதி நேரில் ஆஜராகுமாறு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.
No comments:
Post a Comment