Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Friday, 25 October 2013

ஒரு பணியிலிருந்து இன்னொரு பணிக்கு மாறும்போது மனதில் கொள்ள வேண்டியவை:

நமது வாழ்க்கையின் மிகப்பெரிய ஆதாரம் பணம். அந்த பணத்திற்காகவே மக்கள் பணிபுரிகிறார்கள். அந்த வகையில், முடிந்தளவு அதிக சம்பளம் வாங்குவதே பலரின் குறிக்கோளாக இருக்கிறது. பணி திருப்தி மற்றும் வாழ்க்கை திருப்தி என்பது பலருக்கும் இரண்டாம்பட்சம்தான்.ஒரு நிறுவனத்தில் பணியாற்றிவரும் ஒருவர், தான் பணியாற்றிவரும் நிறுவனத்தில் வாங்கும் ஊதியத்தைவிட, வேறு நிறுவனம் ரூ.5000 முதல் ரூ.10,000 வரை அதிகமாக கொடுக்க முன்வந்தால், வேறு எதைப்பற்றியும் யோசிக்காமல், உடனேயே அப்பணிக்கு மாறிவிட துடிக்கின்றனர். மாறியும் விடுகின்றனர். ஆனால், வெறுமனே சம்பளம் என்பதற்கு பின்னால், யோசிக்க வேண்டிய பல அம்சங்கள் இருக்கின்றன.
எங்கோ ஓரிடத்தில்!
உங்களுக்கு பணி வாய்ப்பை அளிக்கும் புதிய நிறுவனம், உங்களுக்கு கார்பரேட் அலுவலகத்தில் பணி என்று சொல்லிவிட்டு, பின்னர், உங்களை அதன் ஏதோவொரு தூரத்திலுள்ள கிளைக்கோ அல்லது பிளான்டிற்கோ அனுப்பிவிடும்.அந்த இடங்களில், சரியான பள்ளிக்கூட வசதிகளோ, போக்குவரத்து வசதிகளோ மற்றும் இதர அடிப்படை வசதிகளோ முறையாக இருக்காது. எனவே, சம்பந்தப்பட்டவரது குழந்தைகளும், குடும்ப உறுப்பினர்களும் நெருக்கடிக்கு ஆளாவார்கள்.
மொழி, கலாச்சார பிரச்சினை
மேலும், பெரிய நிறுவனமாக இருந்தால், அதன் கிளைகள் வெளி மாநிலங்களிலும் இருக்கலாம். எனவே, அங்கே நீங்கள் மாற்றப்பட்டால், மொழி பிரச்சினையில் திண்டாட வேண்டிய நிலை ஏற்படும். நீங்கள் மட்டுமல்ல, உங்கள் குடும்பமும்தான்.மொழிப் பிரச்சினை மட்டுமின்றி, மாநிலம் மாறிச் செல்லுகையில், கலாச்சார பிரச்சினைகளும் மிக அதிகம். அங்கேயுள்ள உணவுப் பழக்கம் உங்களுக்கு ஒத்துவராமல் போகலாம் மற்றும் அதைப் பழகிக்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் எழும். மேலும், அங்கேயுள்ள காலநிலையும் உங்களுக்கு பெரிய பிரச்சினையை ஏற்படுத்தும் வாய்ப்புள்ளது.
பணி திருப்தி
முந்தையப் பணி உங்களுக்கு திருப்தியானதாகவும், சிக்கல்கள் குறைவானதாகவும் இருந்திருக்கும். ஆனால், அதிக சம்பளம் என்ற ஒரே காரணத்திற்காக வேறு பணிக்கு மாறியிருப்பீர்கள். ஆனால், அந்தப் பணி உங்களுக்கு திருப்தியானதாக அமையாமல் போகலாம்.இதன் காரணமாக நமது சந்தோஷம் காணாமல் போய், ஏன் இங்கு வந்தோம் என்று வருந்துமளவுக்கு தள்ளப்படுவோம். எனவே, ஊதியம் மட்டுமே ஒருவருக்கு பணி திருப்தியை கொடுத்துவிடாது.
முன்னேற்றமின்மை
நாம் மாற நினைக்கும் பணியில், சம்பளம் கூடுதலாக கிடைக்கலாம். ஆனால், அதில் எதிர்கால முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் எந்தளவு இருக்கின்றன என்பதை கட்டாயம் நாம் பார்க்க வேண்டும். இல்லையெனில், இன்று சில ஆயிரங்களுக்காக ஆசைப்பட்டு நாம் அவசரப்பட்டு பணி மாறினால், நாளை கவுரவமான பதவி உயர்வையும், வேறு பல சலுகைகளையும் இழக்க நேரிடும்.
மீண்டும் பழைய இடத்திற்கே...
     
ஒருவர், அதிக சம்பளம் கிடைக்கிறது என்று அவசரப்பட்டு, வேறு நிறுவனங்களுக்கு மாறுகிறார். அந்த நிகழ்வின்போது, பழைய நிறுவனம் அவரை தக்கவைக்க முயற்சிக்கிறது. முடியாதபோது, அவரின் அதுவரையிலான சேவையைப் பாராட்டி, அவருக்கு சிறப்பான வழியனுப்பு விழா நடத்தப்பட்டு அனுப்பி வைக்கப்படுகிறார்.ஆனால், புதிதாக போன இடத்தில் ஒத்துவராமல், அவர் மீண்டும் பழைய நிறுவனத்திற்கே வந்து, அதே வேலையை தருமாறு கேட்கும் தர்மசங்கடமான சூழல் சில சமயங்களில் எழுகிறது. ஆனால், அவரது பணியிடம் வேறு ஒருவரால் நிரப்பப்பட்டிருக்கும். எனவே, அவருக்கு வேறுவொரு முக்கியமற்ற பணி ஒதுக்கப்படலாம்.அப்போது, தனது பழைய மரியாதை மற்றும் முக்கியத்துவம் ஆகியவற்றை இழந்து, அவர் பரிதாபகரமான நிலையில், பழைய நிறுவனத்தில், தர்மசங்கடமான சூழலில் இருக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும். மேலும், வேறுசிலரோ, பழைய நிறுவனத்திற்கு திரும்ப மனம் இடம்கொடுக்காமல், புதிதாக சேர்ந்த இடத்திலிருந்து ராஜினாமா செய்துவிட்டு, வேறு பொருத்தமான பணிக்காக அலைந்து கொண்டிருப்பார்கள் அல்லது வேறு சரியான பணி கிடைக்காமல், அடிக்கடி மாறிக்கொண்டே இருப்பார்கள்.

எனவே, ஒரு பணியிலிருந்து இன்னொரு பணிக்கு மாறுவதற்கு முன்னதாக, வெறுமனே சம்பளத்தை மட்டும் கணக்கில் வைக்காமல், பணி திருப்தி, பணிச் சூழல், நிறுவனத்தின் தன்மை, சக பணியாளர்கள், பணிபுரியும் இடம், பணி மாறுதலுக்கான வாய்ப்புகள், குடும்பச் சூழல் மற்றும் எதிர்கால வளர்ச்சி ஆகிய அனைத்து அம்சங்களையும் கணக்கில் கொண்டு முடிவெடுப்பதே புத்திசாலித்தனம்.

No comments:

Post a Comment