Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Tuesday, 1 October 2013

டிஆர்பி தேர்வில் பிழையான வினாத்தாள்: தமிழ்ப் பாடத்துக்கு மறுதேர்வு நடத்த உயர்நீதிமன்றம் உத்தரவு

முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான போட்டித் தேர்வில் எழுத்துப் பிழைகளுடன் கேள்வித்தாள் இருந்த தமிழ்ப் பாடத்துக்கு, மறுதேர்வு நடத்த சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
ஆசிரியர் தேர்வு வாரியம் (டிஆர்பி) ஜூலை 21 இல் முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் நியமனத்துக்கான போட்டித் தேர்வை நடத்தியது. இதில் தமிழ்ப் பாடத்துக்கான பி வரிசை வினாத்தாளில் 47 வினாக்கள் எழுத்துப் பிழைகளுடன் இருந்தன. பிழையான கேள்விகளுக்கு முழு மதிப்பெண்கள் வழங்க வேண்டும் அல்லது மறுதேர்வு நடத்த உத்தரவிட வேண்டும் என மதுரை கோ.புதூரைச் சேர்ந்த விஜயலெட்சுமி வழக்குத் தொடர்ந்தார்.நீதிபதி எஸ்.நாகமுத்து முன்னிலையில் விசாரிக்கப்பட்ட இவ்வழக்கின் விசாரணைக்கு டிஆர்பி தலைவர் விபுநய்யர், உறுப்பினர்கள் அறிவொளி, தங்கமாரி ஆகியோர் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர். மேற்படி பி வரிசை வினாத்தாளில் 40 கேள்விகள் எழுத்துப் பிழைகளுடன் இருப்பதாகவும், அக் கேள்விகளை நீக்கிவிட்டு 110 மதிப்பெண்களுக்கு மதிப்பீடு செய்வதாக தெரிவித்தனர். இதை ஏற்க மறுத்த நீதிபதி, மறுதேர்வு நடத்துவது குறித்து அரசின் கருத்தை அறிந்து தெரிவிக்குமாறு உத்தரவிட்டிருந்தார்.
இந்த வழக்கு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தபோது, அரசின் தலைமை வழக்குரைஞர் சோமையாஜி ஆஜராகி வாதிட்டார். பி வரிசை வினாத்தாளில் பிழையான 40 கேள்விகளை நீக்கிவிட்டு, அவ்வினாத்தாளில் தேர்வெழுதியவர்களுக்கு 110 மதிப்பெண்களுக்கு மதிப்பீடு செய்வது அல்லது பிழையான 40 கேள்விகளுக்கும் முழு மதி்ப்பெண்கள் வழங்குவது அல்லது தமிழ்ப் பாடத்துக்கான அனைத்து வரிசை வினாத்தாளில் எழுதியவர்களுக்கும் ஒரே மாதிரியாக 110 மதிப்பெண்களுக்கு மதிப்பீடு செய்வது இவற்றில் ஏதாவதொரு பரிந்துரையை அரசு ஏற்கத் தயாராக உள்ளது என்றார்.
இதைத் தொடர்ந்து, தமிழ்ப் பாடத்துக்கு மறுதேர்வு நடத்த நீதிபதி நாகமுத்து  உத்தரவு பிறப்பித்தார். அதன் விவரம்:
ஆசிரியர் தேர்வு வாரியம் பிழையான கேள்வித்தாள்களுடன் தேர்வை நடத்தியுள்ளது, ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இதேபோன்று சென்னை உயர்நீதிமன்றத்தின் முதன்மை அமர்வு முன்பு விசாரிக்கப்பட்ட வழக்கு ஒன்றில், வரும் காலங்களில் தேர்வுகளில் பிழைகள் வராமல் பார்த்துக் கொள்வதாக டிஆர்பி உறுதி அளித்தது. ஆனால், அதை பின்பற்றவில்லை. தேர்வு வாரியத்தின் இத்தகைய நடவடிக்கை தான் மறுதேர்வுக்கான உத்தரவை பிறப்பிக்க வேண்டிய நிர்பந்தத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
தமிழ்ப் பாடத் தேர்வை எழுதிய 32 ஆயிரம் பேரில், 8 ஆயிரம் பேருக்கு பிழையான கேள்வித்தாள் வழங்கப்பட்டிருக்கிறது. அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள 3 பரிந்துரைகளுமே ஏற்புடையதாக இல்லை. அனைத்து தேர்வர்களுக்கும் சமமாக வழங்கப்பட்ட தீர்வாக இது அமையாது. மறுதேர்வு நடத்துவது தேர்வு வாரியத்துக்கு பல்வேறு சிரமங்கள் ஏற்படும் என்பதை நீதிமன்றம் உணர்ந்துள்ளது.
மறுதேர்வு இல்லையெனில், நன்றாகத் தேர்வெழுதியவர்களுக்கு அநீதி இழைப்பதாக அமைந்துவிடும். இதனால், தமிழ்ப் பாடத்துக்கு மறுதேர்வு நடத்துவதுதான் ஒரே தீர்வு.ஆகவே, ஆசிரியர் தேர்வு வாரியம் ஜூலை 21 இல் தமிழ் பாடத்துக்கு நடத்தப்பட்ட தேர்வு ரத்து செய்யப்படுகிறது. எவ்வளவு சீக்கிரம் முடியுமோ, மறுதேர்வை நடத்த வேண்டும். மறுதேர்வுக்கு புதிதாக விண்ணப்பம் பெறத் தேவையில்லை. அதோடு, ஏற்கெனவே வழங்கிய நுழைச்சீட்டையே பயன்படுத்திக் கொள்ளலாம் என நீதிபதி எஸ்.நாகமுத்து உத்தரவிட்டார்.

No comments:

Post a Comment