திருச்சி மண்டல அளவில் உதவி தொடக்க கல்வி அலுவலர்கள் ஆய்வுக்கூட்டம் திருச்சியில் அமைச்சர் பழனியப்பன் தலைமையில் நடந்தது.
ஆய்வு கூட்டம்
திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகை, அரியலூர், பெரம்பலூர், கடலூர் ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய உதவி தொடக்க கல்வி அலுவலர்களுக்கான ஆய்வு கூட்டம் திருச்சியில் நடைபெற்றது. அமைச்சர் பழனியப்பன் தலைமை தாங்கி சிறப்பாக செயல்பட்ட 21 தொடக்க, நடுநிலைப்பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு சுழற்கேடயம் வழங்கி பேசியதாவது:-
கல்வித்துறையில் வழங்கப்படும் அனைத்து விலையில்லா திட்டங்களும் மாணவர்களுக்கு சென்றடைய உதவி தொடக்க கல்வி அலுவலர்கள் மற்றும் கல்வி அதிகாரிகள் செயல்பட வேண்டும். பள்ளிகளில் பழுதடைந்த கட்டிடங்கள் சரிசெய்ய மற்றும் பராமரிப்பு பணிகளை மேற்கொள்வதற்கு பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் முறையாக மனு கொடுத்து குழந்தைகளுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில் செயல்பட வேண்டும்.
அறிவுரை
திறமையான மாணவர்களை அனைவரின் முன்னிலையிலும் பாராட்ட வேண்டும். தவறு செய்த மாணவர்களை அனைவரின் முன்னிலையில் கண்டிக்காமல் தனிமையில் அழைத்து பக்குவமாக ஆசிரியர்கள் எடுத்துரைக்க வேண்டும்.
இவ்வாறு பழனியப்பன் பேசினார்.
சதுரங்க போட்டி
முன்னதாக திருச்சி மண்டல அளவிலான சதுரங்க போட்டிகள் திருச்சி உறையூர் எஸ்.எம். பள்ளியில் நடைபெற்றது. இதில் திருச்சி, புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த பள்ளி மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். போட்டிகள் 11 முதல் 19 வயதுக்குட்பட்டவர்கள் வரை ஆண், பெண்களுக்கு தனித்தனியாக நடைபெற்றது. போட்டியை அமைச்சர்கள் பழனியப்பன், பூனாட்சி பார்வையிட்டனர். போட்டியில் வெற்றி பெற்றவர்கள் சென்னையில் நடைபெற உள்ள மாநில அளவிலான போட்டியில் பங்கேற்க உள்ளனர். அதில் வெற்றி பெறுபவர்கள் உலக சதுரங்க போட்டியை காண ஏற்பாடு செய்யப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
நிகழ்ச்சிகளில் அரசு தலைமை கொறடா மனோகரன், பள்ளி கல்வித்துறை முதன்மை செயலாளர் சபீதா, எம்.பி.க்கள் ரத்தினவேல், குமார், எம்.எல்.ஏ.க்கள் பரஞ்சோதி, சந்திரசேகர், இந்திராகாந்தி, அனைவருக்கும் கல்வி இயக்க திட்ட இயக்குநர் பூஜா குல்கர்னி, பள்ளி கல்வித்துறை இயக்குநர் ராமேஸ்வரமுருகன், கலெக்டர் ஜெயஸ்ரீ முரளிதரன், தொடக்க கல்வித்துறை இயக்குநர் இளங்கோவன், தொடக்கல்வித்துறை இணை இயக்குநர் லதா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment