Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Thursday, 24 October 2013

வன்முறை வீடியோக்கள்: ஃபேஸ்புக்கின் கொள்கை என்ன?

வன்முறை வீடியோக்களை அனுமதிப்பது தொடர்பான கொள்கை தடுமாற்றத்தால் ஃபேஸ்புக் சர்ச்சைக்கு இலக்காகி உள்ளது.
சமுக வலைத்தளங்களில் பிரபலமானதாக விளங்கும் ஃபேஸ்புக்கில் 115 கோடிக்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் உள்ளனர். தனிப்பட்ட தகவல்களில் துவங்கி புகைப்படங்கள், வீடியோ என பலவிதமான விவரங்களை உறுப்பினர்கள் பகிர்ந்து கொள்கின்றனர்.
ஃபேஸ்புக்கில் தகவல்க‌ளை பகிர பொதுவான கட்டுப்பாடுகள் இருக்கின்றன. துவேஷத்தை தூண்டும் தகவல்கள், அரை நிர்வாண ஆபாச காட்சிகள் மற்றும் வன்முறையைத் தூண்டும்விதமான தகவல்களை ஃபேஸ்புக் அனுமதிப்பதில்லை.
ஆனால் சமீபத்தில் ஃபேஸ்புக்கில் பகிர்ந்து கொள்ளப்பட்ட படுகொலை தொடர்பான வீடியோ காட்சி பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
மெக்சிகோ நாட்டில் படமாக்கப்பட்டதாக கருதப்படும் அந்த வீடியோவில் முகமூடி மனிதர் ஒருவர் பெண்ணின் தலையைக் கொய்வது போல அமைந்திருந்தது. 'சவால்: உங்களில் யாரால் இந்த வீடியோவைப் பார்க்க முடியும்? என்ற தலைப்பில் இந்த வீடியோ வெளியானது.
இந்த வீடியோவைப் பார்த்த பலரும் திடுக்கிட்டுப் போயினர். இந்த வீடியோவால் இளம் மனதுகள் பாதிக்கப்படும் உடன‌டியாக இதை நீக்கவும் என பலரும் வேண்டுகோள் விடுத்தனர்.
ஆனால் ஃபேஸ்புக் தரப்பில் முதலில் தரப்பட்ட பதில் அதிர்ச்சியாக இருந்தது. இது போன்ற வீடியோக்களை பகிர அனுமதிப்பதாக ஃபேஸ்புக் சார்பில் கருத்து தெரிவிக்கப்பட்டது.
'ஃபேஸ்புக்கை உறுப்பினர்கள் தங்கள் அனுபவங்களைப் பகிர பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாக மனித உரிமை மீறல், தீவிரவாத செயல் மற்றும் பிற வன்முறை தொடர்பான சம்பவங்கள் குறித்த க‌ருத்தை தெரிவிக்க பயன்படுத்துகின்றனர்' என்று ஃபேஸ்புக் தரப்பில் கூறப்பட்டது. 'இது போன்ற செயல்களை கண்டிக்கவே மக்கள் இவற்றை பகிர்ந்து கொள்கின்றனர். இவற்றைக் கொண்டாடும் விதமாக பகிர்ந்தால் எங்கள் நடவடிக்கை வேறு விதமாக இருக்கும்' என்றும் தெரிவிக்கப்பட்டதாக பி.பி.சி செய்தி தளம் தெரிவித்தது.
ஃபேஸ்புக்கின் இந்த பதில் சர்ச்சையை ஏற்படுத்தியது. மே மாத வாக்கில் வன்முறை வீடியோக்களுக்கு தற்காலிக தடை விதித்திருந்த நிலையில், இது போன்ற வீடியோக்களை அனுமதிக்க ஃபேஸ்புக் மீண்டும் முடிவு செய்திருப்பதாக கூறப்பட்டு பெரும் விவாதம் எழுந்தது.
எந்த நோக்கில் வன்முறை வீடியோக்கள் பகிர்ந்து கொள்ளப்பட்டாலும் அவை ஏற்படுத்தக்கூடிய பாதிப்புகள் தீவிரமானவை என்று தெரிவிக்கப்பட்டது. இந்த வீடியோக்களை சில நொடிகள் பார்த்தாலும் அவற்றின் பாதிப்பு காலமெல்லாம் இருக்கும் என்று உளவியல் நிபுணர்கள் எச்சரித்தனர்.
இதனிடையே பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன் தனது டிவிட்டர் குறும்பதிவு மூலம் ஃபேஸ்புக்கின் முடிவுக்கு கண்டனம் தெரிவித்திருந்தார். 'எந்தவித எச்சரிக்கையும் இல்லாமல் படுகொலை வீடியோக்களை பார்க்க அனுமதிப்பது பொறுப்பற்ற செயல்' என்று அவர் கூறியிருந்தார்.
இப்படி பரவலாக எழுந்த எதிர்ப்பை அடுத்து, ஃபேஸ்புக் வன்முறை வீடியோ தொடர்பான தனது கொள்கையை மீண்டும் தெளிவுபடுத்தியுள்ளது.
வன்முறை தொடர்பான தகவல்கள் பற்றி புகார் வந்தால், அது பற்றி ஒட்டுமொத்த நோக்கில் ஆராய்ந்து அதை நீக்குவது பற்றி
முடிவெடுக்கப்படும் என்றும், குறிப்பிட்ட அந்த வீடியோவை பகிர்பவரின் நோக்கத்தின் அடிப்படையிலும் இந்த முடிவு மேற்கொள்ளப்படும் என்றும் ஃபேஸ்புக் பதிவு ஒன்று தெரிவிக்கிறது.
ஃபேஸ்புக்கின் வீச்சு மற்றும் தாக்கத்தை கருத்தில் கொண்டு பார்க்கும் போது, வன்முறை வீடியோ தொடர்பாக ஃபேஸ்புக் தெளிவான மற்றும் கறாரான கொள்கை முடிவை மேற்கொள்வதே நல்லது என்று பரவலாக கருதப்படுகிறது.
சைபர்சிம்மன், கட்டுரையாளர் - தொடர்புக்கு enarasimhan@gmail.com
கட்டுரையாளரின் வலைப்பதிவுத் தளம் http://cybersimman.wordpress.com

No comments:

Post a Comment