பணிக்காலத்தில் இறந்த கணவரின் ஓய்வூதிய பலனை கேட்டு பெண் தொடர்ந்த வழக்கில், அந்த தொகையை வழங்குவதில் காலதாமதம் செய்த அதிகாரிகளின் பென்சன் பணத்தில் பிடித்தம் செய்ய அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நெல்லை மாவட்டம் சாத்தான்குளத்தில் கடந்த 1997 ஜூன் முதல் அக்டோபர் வரை தேர்வு நிலை செயல் அதிகாரியாக பணியாற்றியவர் முத்துக்குமாரசாமி.
இவர் மீது 1997 அக்டோபர் 16ம் தேதி சில புகார்களின் அடிப்படையில் துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்பட் டது. அவர் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டார். இது தொடர்பான நடைமுறைகள் செயல்பாட்டில் இருக்கும்போது 2000 டிசம்பர் 31ல் முத்துக்குமாரசாமி மரணமடைந்தார். அரசு ஊழியர் ஒருவர் பணிக்காலத்தில் மரணமடைந்தால் அவரது ஈமச்சடங்கு செலவாக 10 ஆயிரம் மற்றும் அவரது மனைவிக்கு பாதுகாப்பு தொகையாக 1 லட்சம் தரவேண்டும்.
ஆனால், இந்த உதவிகள் எதுவும் முத்துக்குமாரசாமியின் மனைவி வசந்தா ராஜலட்சுமிக்கு தரப்படவில்லை. மேலும், துறைரீதியான நடவடிக்கை நிலுவையில் இருந்தாலும் அந்த நடவடிக்கைகள் ரத்து செய்யப்படவேண்டும். ஆனால், இவற்றை சம்மந்தப்பட்ட துறை செய்யத் தவறிவிட்டது.
இதையடுத்து, இந்த தொகையையும், தனது கணவரின் பணிக்கொடை உள்ளிட்ட பணப்பலன்க ளையும் கேட்டு வசந்தா ராஜலட்சுமி உயர் நீதிமன்றத்தில் 2004ல் வழக்கு தொடர்ந்தார். 8 வாரங்களுக்குள் உரிய நடவடிக்கை எடுத்து மனுதாரருக்கு அவரது கணவரின் பணப்பலன்களைத் தர 2006 அக்டோபரில் கோர்ட் உத்தரவிட்டது. ஆனால், தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்ட காலத்தை அதிகாரிகள் கணக்கில் எடுக்கவில்லை. இதையடுத்து, தனக்கு நிவாரணம் கோரி வசந்தா ராஜலட்சுமி மீண்டும் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
வழக்கை நீதிபதி டி.ராஜா விசாரித்து அளித்த உத்தரவு: இறந்த முத்துக்குமாரசாமியின் தற்காலிக பணிநீக்க காலமான 1997 அக்டோபர் 16 முதல் 2000 மார்ச் 7 வரை அவருக்கு 50 சதவீத சம்பளம் தரப்பட்டது. அவரது விடுப்பு ஒப்படைப்பு பணத்தை பெறவும் மனுதாரருக்கு உரிமை உள்ளது. அரசுத் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வணங்களின் அடிப்படையில், முத்துக்குமாரசாமியின் பணிக்கொடை, தற்காலிக பணிநீக்க கால சம்பள நிலுவைத்தொகை, விடுப்பு ஒப்படைப்பு சம்பளம், ஓய்வூதிய சம்பளம் உள்ளிட்ட அனைத்து வகையான பணப்பலன்களும் தரவேண்டும். அந்த தொகைக்கான வட்டியாக 4 லட்சத்து 74,955ல்
50 சதவீத்தை ஊரக வளர்சித்துறை தரவேண்டும்.
இனிமேல் இதுபோன்று காலதாமதம் ஏற்படக்கூடாது என்பதற்காக, இந்த தொகையை தருவதில் காலதாமதம் செய்த அதிகாரிகளிடமிருந்து இந்த தொகையை ( ஓய்வு பெற்றிருந்தால் அவர்களின் ஓய்வூதியத்திலிருந்து) வசூலிக்குமாறு ஊரகவளர்ச்சித் துறை செயலாளருக்கு உத்தரவிடப்படுகிறது. இந்த நடைமுறைகள் அனைத்தும் 8 வாரங்களுக்குள் நிறைவேற்றப்பட வேண்டும். இவ்வாறு நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment