பயனற்ற நிலையில், கடந்த பல ஆண்டுகளாக வீணாகி வரும், அரசு நிலத்தை பள்ளிக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று பெற்றோர்கள் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.
ஈரோடு மாநகராட்சி, 21வது வார்டுக்கு உட்பட்ட குமலன்குட்டையில், அரசு மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. 600 மாணவர்கள், 400 மாணவிகள், 40க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணி செய்கின்றனர். குறிப்பாக திண்டல், வீரப்பம்பாளையம், நாராயணவலசு, பழையபாளையம் பகுதியை சேர்ந்த ஏழை, எளிய மற்றும் நடுத்தர குடும்பத்தை சேர்ந்த குழந்தைகள் இங்கு கல்வி பயில்கின்றன.
அரசு பள்ளிக்கு அருகில், பல தனியார் பள்ளிகள் இருந்தும், கல்வி தரம் சிறப்பாக உள்ளதால், இங்கு படிக்க மாணவ, மாணவிகள் ஆர்வம் காட்டுகின்றனர். இப்பள்ளியில், அரசு விதிப்படி தேவையான அளவு விளையாட்டு மைதானம், கட்டிடம், கழிவறை வசதிகள் இல்லை. மாணவிகள் பயன்படுத்துவதற்கு, ஒரே ஒரு கழிவறை மட்டுமே உள்ளது.
ஒரே நேரத்தில் இடைவெளி விடும்போது, மாணவிகள் இதனை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.
மாணவர்களுக்கு கழிவறை கிடையாது. ரோட்டோரத்தை தான் கழிவறையாக பயன்படுத்தி வருகின்றனர். திறந்த வெளியை கழிவறையாக பய ன்படுத்த கூடாது, என பிரசாரம் செய்து வரும் நிலையில், மாணவ, மாணவிகள் கழிவறை இன்றி தவிப்பது, ஆ ண்டு பலவாக தொடர்கிறது.
இப்பள்ளியை ஒட்டி பயனற்ற அரசு நிலம் உள்ளது. இங்கு முட்புதர்கள், செடி, கொடிகள் வளர்ந்துள்ளன. செடி, கொடிகளில் தஞ்சமடையும் பாம்பு, தேள் உள்ளிட்ட விஷ ஜந்துகள் அடிக்கடி வகுப்பறைக்கு வந்து செல்வது வாடிக்கை. பாம்பு வந்து விடுமோ என்ற பயத்திலேயே, வகுப்பறைக்குள் நாள் முழுவதும், மாணவ, மாணவிகள் நிம்மதியின்றி கல்வி கற்கின்றனர்.
தவிர, பள்ளியை ஒட்டி சிப்காட்டுக்கு சொந்தமான, ஒரு ஏக்கர் நிலமும் உள்ளது. பல ஆண்டுகளாக, இந்நிலம் பயன்பாடின்றி, இங்கும் பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் காணப்படுகிறது.
பயனற்று கிடக்கும் இந்நிலங்களை பள்ளிக்கு வழங்கலாம். இடவசதி இன்றி, அரசின் இலவச சைக்கிள் உள்ளிட்ட மாணவ, மாணவிகள் பயன்படுத்தும் சைக்கிள்கள் ரோட்டோரத்தில் நிறுத்தி வைக்கப்படுகிறது. பல மணி நேரம் கழித்து வரும் போது, சைக்கிள் காணாமல் போவது தொடர்கிறது. வகுப்பறைக்குள் செல்லும் மாணவ, மாணவிகள் அவ்வப்போது, ரோட்டுக்கு வந்து சைக்கிளை உறுதி, செய்து செல்ல வேண்டி இருக்கிறது.
பெற்றோர்கள் கூறியதாவது: பள்ளி மாணவ, மாணவிகள் நலனுக்கு, தமிழக முதல்வர் இலவச லேப்டாப், சைக்கிள், புத்தகம், சீருடை, உணவு, காலணி, பஸ் பாஸ் உள்ளிட்டவற்றை வழங்கி வருகிறார். ஆனால் பயனற்று கிடக்கும், அரசு நிலத்தை, பள்ளி மேம்பாட்டுக்கு வழங்க வேண்டும், என்று வலியுறுத்தி, மாவட்ட நிர்வாகத்திடம் பல முறை மனு கொடுத்துள்ளோம்.
இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. வகுப்பறைக்குள், விஷ ஜந்துகள் வந்து செல்கிறது. இதனால் குழந்தைகளை எவ்வாறு பள்ளிக்கு அனுப்புவது, என்று தெரியவில்லை. மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து, உயிர் பாதுகாப்பு வழங்கி, காலி இடத்தை பள்ளிக்கு வழங்க வேண்டும், என்றனர்.
No comments:
Post a Comment