தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) சார்பில் குரூப்4ல், 5,566 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்து தேர்வு, கடந்த ஆகஸ்ட் 25ம் தேதி நடந்தது. இத்தேர்வை மாநிலம் முழுவதும் சுமார் 12 லட்சம் பேர் எழுதினர். கல்வி தகுதி 10ம் வகுப்பு தேர்ச்சி என்ற போதிலும், ஏராளமான பட்டதாரிகளும் தேர்வை எழுதினர். தேர்வு நடைபெற்ற போது, மையத்தை பார்வையிட்ட டிஎன்பிஎஸ்சி தலைவர் நவநீதகிருஷ்ணன் 3 மாதத்தில் தேர்வுக்கான ரிசல்ட் வெளியிடப்படும் என்று கூறினார். குறிப்பாக விடைத்தாள் திருத்தும் பணி 95 சதவீதம் முடிந்துவிட்டதாகவும் அவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தெரிவித்தார். ஆனால், தேர்வு முடிவு வெளியிடப்படுவதற்கான அறிகுறியே தென்படவில்லை.
டிஎன்பிஎஸ்சி குரூப்4 தேர்வு முடிவுகளை, இன்னும் ஒரு வாரத்தில் வெளியிடப்படவில்லை என்றால், மார்ச் முதல் வாரத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கான தேதி அறிவிப்பு வெளியாகி விடும். அந்த நேரத்தில் அதிகாரிகள் தேர்தல் பணியில் முழு கவனத்தை செலுத்த தொடங்கி விடுவார்கள். இதனால் தேர்வு முடிவு வெளியிடுவதில் மேலும் காலதாமதம் ஏற்படும் நிலை ஏற்பட்டு விடும். எனவே விரைவில் தேர்வு முடிவை வெளியிட வேண்டும் என்று தேர்வு எழுதியவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் கூறுகையில், ‘ஒளிவு மறைவின்றி நியாயமான முறையில் தேர்வு முடிவை வெளியிட வேண்டும் என்பதில் டிஎன்பிஎஸ்சி உறுதியாக உள்ளது. பிரச்னை ஏதுவும் ஏற்படாமல் இருக்க தேர்வு எழுதியவர்கள் அனைவரின் மதிப்பெண்களையும் தேர்வாணைய இணைய தளத்தில் வெளியிடவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதுவே காலதாமதம் ஏற்படுவதற்கான காரணம். இந்த பணி அனைத்தும் முடிந்த பின்னர் தேர்வு முடிவு வெளியிடப்படும் என்றார்.
No comments:
Post a Comment