
நாமக்கல் அருகே மேலப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் மாதிரி சட்டசபை நடத்தி, பள்ளியில் உள்ள பிரச்சினைகளை விவாதிக்கும் மாணவர்கள்
நாமக்கல் அருகே மேலப்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் கல்வி மட்டுமின்றி நடைமுறை வாழ்க்கைக்கு ஏற்ற விஷயங்களில் மாணவ, மாணவியர் திறமையுடன் செயல்பட்டு அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி வருகின்றனர்.
தனியார் பள்ளிகளில் தங்களது குழந்தைகள் கல்வி கற்பதை பெற்றோர் கவுரவமாக கருதுகின்றனர். இந்தச்சூழலில், நாமக்கல் அருகே மேலப்பட்டி என்ற குக்கிராமத்தை சேர்ந்த மக்கள் இதற்கு நேர்மாறாக உள்ளனர்.
இங்குள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் மட்டுமே தங்களது குழந்தைகளை படிக்க வைக்கின்றனர். தங்கள் பள்ளியில் சேர்க்குமாறு அருகே உள்ள தனியார் பள்ளி நிர்வாகம் விருப்பம் தெரிவித்தாலும், பெற்றோர் ஒப்புதல் அளிப்பதில்லை. அப்படி என்ன தான் அந்த ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி யில் உள்ளது என்ற கேள்விக்கு பதிலாக பள்ளி தலைமை யாசிரியர் வே. அண்ணா துரை, உதவி தலைமையாசிரியர் கா.இளங் கோவனும் கூறியது:
மேலப்பட்டி கிராமத்தை சேர்ந்த 27 மாணவர்கள் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் படிக்கின்றனர். கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன் மாணவர்களுக்கு கல்வியுடன் நடைமுறை வாழ்க்கைக்கு சம்பந்தப்பட்ட விஷயங்களையும் கற்றுத்தர வேண்டுமென்ற எண்ணம் ஏற்பட்டது. அதன் முதல் படியாக மாணவர்களிடம் பொது அறிவை வளர்க்கும் விதத்தில் ஆங்கில மற்றும் தமிழ் நாளிதழ் வாங்கத் துவங்கினோம். காலையில் பள்ளிக்கு வந்தவுடன் மாணவர்கள் நாளிதழை படிப்பர். அதன்பலனாக மாத இதழ் துவங்கும் எண்ணம் மாணவர்களுக்கு ஏற்பட்டது.
'குதூகலம்' மாத இதழ்
அதன்படி கடந்த 2009-ல் 'குதூகலம்' என்ற மாத இதழை துவங்கினர். அதற்கு மாணவர்களே பதிப்பாசிரியர், உதவி ஆசிரியர் களாக உள்ளனர். அந்த மாதத்தில் வரும் முக்கிய நிகழ்வுகள், வரலா ற்றுத் தலைவர்கள், அறி வியல் கண்டுபிடிப்பாள ர்களின் பிறந்த நாள், நினைவு தினம், அவர்கள் குறித்த கட்டுரை, மாணவர்களின் சிறுகதை, கவிதைகள் ஆகியவை குதூகலத்தில் இடம் பெறும்.இதழுக்குரிய அனைத்து விஷயங்களையும் மாணவர்களே ஆலோசித்து முடிவு செய்வர்.
அவரவர் எடுத்துக் கொண்ட தொகுப்பை வெள்ளைத்தாளில் எழுதி வழங்குவர். அதை புத்தகம்போல் தைக்கப்படும். முறைப்படி வெளியாகும் மாத இதழ் போல் இப்புத்தகம் இருக்கும். மாணவர்களின் இத்தொகுப்பை அருகே உள்ள பள்ளியினர் மாத சந்தா ரூ.10 செலுத்தி வாங்கி வருகின்ற னர். மாணவர்களின் இதழை பிரதிகள் போட்டு விற்கவும் செய்கின்றனர். அவ்வாறு வசூலாகும் தொகை சேமிக்க படுகிறது. அதற்காக பள்ளியில் வங்கி உள்ளது. மாணவர்களே வங்கி மேலாளர், காசாளர் பணியிடம் தனித்தனியாக உள்ளது.
மாணவர்களின் வங்கி
பள்ளியில் உள்ள அனைத்து மாணவர்களுக்கும் வங்கியில் கணக்கு உள்ளது. வங்கி பாஸ் புத்தகம் போல் மாணவர்கள் பாஸ் புத்தகம் தயாரித்து வைத்துள்ளனர். வங்கியில் மாணவ ர்கள் செலுத்தும் தொகை, மாத இதழ் மூலம் வசூலாகும் தொகை சேமிக்க படுகிறது. மாணவர்கள் செலுத்தும் தொகை அவர்களது பாஸ் புத்தகத்தில் பதிவு செய்யப்படும். அந்த வகையில் பள்ளி வங்கியில் ரூ.154 சேமிப்பு உள்ளது.
மாணவர்களிடையே இது சேமிப்புப் பழக்கத்தை ஏற்படுத்தி யுள்ளது.அதேபோல், பள்ளியில் உள்ள நியாய விலைக்கடையில், பேனா, பென்சில்கள் விற்கப்படுகிறது. இந்தக் கடையையும் மாணவர்களே நடத்துகின்றனர்.
ஆசிரியர்களுக்கு நோட்டீஸ்
நியாய விலை கடைக்கு தேவையான பொருட்கள் அடங்கிய பட்டியலை எங்களிடம் வழங்குவர். அதை நாங்கள் வாங்கி வரவேண்டும். அதற்கு தாமதமானால் பள்ளியில் செயல்படும் மாதிரி சட்டசபையின் முதல்வர் மூலம் எங்களுக்கு நோட்டீஸ் வழங்கப்படும். கேட்பதற்கு ஆச்சர்யமாகத்தான் இருக்கும். ஆம், பள்ளியில் உள்ள மாதிரி சட்டசபைக்கு சபாநாயகர், முதல்வர், கல்வித்துறை, சுகாதாரத் துறை, விளையாட்டுத்துறை, உணவுத்துறை மற்றும் சட்டமன்ற உறுப்பினர் என்பது போன்ற பதவியிடங்கள் உள்ளன.
வாரந்தோறும் மாதிரி சட்டசபை கூடும். கூட்டத்திற்கு சபாநாயகர் தலைமை வகிப்பார். கூட்டத்தில் உறுப்பினர்கள் கேள்வி எழுப்புவர். பள்ளி மற்றும் அவர்கள் நடத்தும் நியாய விலைக்கடை, சத்துணவு, விளையாட்டு சம்மந்தப்பட்ட கேள்விகள் எழுப்பப்படும். அதற்கு சம்மந்தப்பட்ட துறை அமைச்சர் பதில் அளிப்பர். பின், அந்த கோரிக்கை நிறைவேற்றப்படும். ஆசிரியர் தரப்பில் குறையிருந்தாலும், அது விவாதிக்கப்படும். இவை அனைத்தும் மாணவர்களே தயார் செய்வர். ஒரு முறை மட்டும் நாங்கள் சொல்லிக் கொடுத்துள்ளோம்.
இதேபோல், பள்ளியில் தபால் நிலையமும் செயல்படுகிறது. சக மாணவர்களுக்கும், ஆசிரியர்க ளுக்கும் எழுதப்படும் தபால்கள், பெட்டியில் சேகரிக்கப்பட்டு, பின் பட்டுவாடா செய்யப்படும். கடந்த 2009-ல் மாநில அளவில் சிறந்த பள்ளி விருதை தொடக்க கல்வித் துறை எங்களுக்கு வழங்கியது’’ என்றனர்.
தனியார் கான்வென்ட் பள்ளிகளுக்கு நிகராக சவால் விடும் வகையில் இந்தப் பள்ளி மற்ற அரசுப் பள்ளிகளுக்கு முன்னுதாரணமாகத் திகழ்கிறது என்றால் அது மிகையாகாது.
No comments:
Post a Comment