முல்லைப்பெரியாறு அணையில் நீர்வரத்து முற்றிலும் நின்று போனதால், தென் மாவட்டங்களில் விரைவில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது. பெரியாறு அணை நீர்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாததால், அணையின் நீர்மட்டம் குறைந்து வருகிறது. அணைக்கு நீர்வரத்து முற்றிலும் நின்று போனது. கடந்த சில நாட்களாக அணையிலிருந்து தமிழகப்பகுதி விவசாயத்திற்கு திறக்கப்பட்ட தண்ணீர் முற்றிலும் நிறுத்தப்பட்டது. குடிநீருக்கு மட்டுமே தண்ணீர் திறக்கப்பட்டுள்ள நிலையில், லோயர்கேம்பில் உள்ள பெரியாறு நீர்மின் உற்பத்தி நிலையத்தில் மின் உற்பத்தியும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
கடந்த நான்கு ஆண்டுகளுக்குப் பின் தற்போதுதான் பிப்ரவரி முதல் வாரத்தில் அணையின் நீர்மட்டம் 111 அடியாக குறைந்துள்ளது. முந்தைய ஆண்டுகளில் அணை நீர்மட்டம் குறையும் காலத்தில், மழை துவங்கி விடுவதால் அணையின் நீர்மட்டம் குறைய வாய்ப்பில்லாமல் இருந்தது. பெரியாறு அணையின் கிடப்புநீர் (டெட் ஸ்டோரேஜ்) 104 அடியாக இருந்தாலும் 108 அடிக்கு மேலுள்ள தண்ணீரை மட்டுமே குடிநீருக்கு பயன்படுத்த முடியும். இனிமேல் அணையின் நீர்மட்டம் மூன்றடி குறைந்தால், 5 மாவட்ட மக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உள்ளது.
No comments:
Post a Comment