அரசு வாக்குறுதி அளித்துவிட்டு அதை நிறைவேற்றாமல் இருப்பது சரியல்ல என்று, சுப்ரீம் கோர்ட்டு கருத்து தெரிவித்து உள்ளது.
வாக்குறுதி மீறல்
கேரள மாநிலத்தில் புதிதாக தொடங்கப்பட்ட சில தொழில் நிறுவனங்களுக்கு கடந்த 1990-ம் ஆண்டு மாநில அரசு சில வாக்குறுதிகளை அளித்து உத்தரவு பிறப்பித்து இருந்தது. அதன்படி அந்த நிறுவனங்களுக்கு தொடர்ந்து 5 ஆண்டுகளுக்கு மின்வெட்டு இல்லாமல் மின்சாரம் வழங்கப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டு இருந்தது.
அந்த உறுதிமொழியை மாநில அரசு நிறைவேற்றாததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த கேரள ஐகோர்ட்டு தொழில் நிறுவனங்களின் கோரிக்கையை நிராகரித்துவிட்டது. அதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஏ.ஆர்.தவே, ஏ.கே.சிக்ரி ஆகியோரை கொண்ட சுப்ரீம் கோர்ட் அமர்வு, ஐகோர்ட்டு தீர்ப்பை ரத்து செய்தது.
மாநில அரசின் கடமை
நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் அரசு வாக்குறுதி அளித்துவிட்டு அதை நிறைவேற்றாமல் இருப்பது நியாயமற்றது; நெறிமுறைகளுக்கு முரணானது என்று குறிப்பிட்டு உள்ளனர். அவர்கள் மேலும் கூறியதாவது- “அரசு ஒரு வாக்குறுதியை அளிப்பதற்கு முன்னால் அதை நிறைவேற்ற முடியுமா? அதன் சாதக, பாதகங்கள் என்ன என்பது குறித்து தெளிவாக ஆராய்ந்து பார்த்து முடிவு எடுத்து இருக்க வேண்டும். அது தொடர்பான அம்சங்களை ஆராய்ந்து பார்க்காமல் வாக்குறுதி எதையும் அளிக்கக்கூடாது.
அப்படி வாக்குறுதி அளித்துவிட்டு பின்னர் அதை நிறைவேற்றாமல் இருப்பது விதிமுறை மீறல் மட்டுமின்றி, தார்மீக நெறிமுறைகளுக்கும் எதிரானது. குறிப்பிட்ட இந்த வழக்கில், ஏற்கனவே அளித்த வாக்குறுதியின் பயனை சம்பந்தப்பட்ட தொழில் நிறுவனங்களுக்கு வழங்க வேண்டியது மாநில அரசின் கடமையாகும்”.
இவ்வாறு நீதிபதிகள் கூறினார்கள்.
No comments:
Post a Comment