தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பிளஸ்–2 பொதுத் தேர்வு கடந்த 3–ந் தேதி தொடங்கியது.
8 லட்சம் பேர் எழுதிய இந்த தேர்வு இன்று முடிந்தது. இதைத் தொடர்ந்து எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வு நாளை (26–ந் தேதி) தொடங்கி ஏப்ரல் 9–ந் தேதி வரை நடைபெறுகிறது.
பத்தாம் வகுப்பு தேர்வை 11 லட்சம் மாணவ–மாணவிகள் எழுதுகின்றனர். இதற்கான ஏற்பாடுகளை அரசு தேர்வுத்துறை செய்துள்ளது. வழக்கமாக 10–ம் வகுப்பு தேர்வு 9.45 மணிக்கு தொடங்கி பகல் 12.30 மணிக்கு முடியும். இந்த ஆண்டு அரை மணி நேரம் முன்கூட்டியே 10–ம் வகுப்பு தேர்வு தொடங்குகிறது.
வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் தேர்வு தொடங்கும் நேரத்தை முன் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. மாணவ–மாணவிகள் கோடை வெயிலின் பிடியில் இருந்து தப்பிக்கும் வகையில் தேர்வு நேரத்தை மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
வழக்கமாக காலை 10 மணிக்கு தொடங்கி 12.30 மணிக்கு முடியும். நாளை தொடங்கும் எஸ்.எஸ்.எல்.சி தேர்வு காலை 9.15 மணிக்கு தொடங்குகிறது. வினாத்தாள்களை படிப்பதற்கு 10 நிமிடங்கள் (9.25 ) வரை வழங்கப்படுகிறது.
அதன் பின்னர் விடைத்தாளில் பதிவு எண் விவரங்களை பூர்த்தி செய்து சரிபார்த்து கொள்ள 5 நிமிடங்கள் (9.30) வரை அவகாசம் கொடுக்கப்படுகிறது. 9.30 மணிக்கு தேர்வு தொடங்கி 12 மணிக்கு முடிகிறது.
தேர்வு முடிந்து மாணவ– மாணவிகள் ஒரு மணிக்குள் அவரவர் வீடுகளுக்கு செல்ல ஏதுவாக தேர்வு நேரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
தேர்வு அரை மணி நேரம் முன்னதாக தொடங்குவதால் மாணவர்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை. இது தேர்வர்களுக்கு பயன் உள்ளதாகத்தான் இருக்கும். வெயிலின் தாக்கம் அதிகமாவதற்குள் பள்ளி குழந்தைகள் தேர்வுகளை எழுத உதவியாக இருக்கும் என்று கல்வி அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
சென்னை மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு தேர்வை 61 ஆயிரத்து 9 பேர் எழுதுகின்றனர். பள்ளிகள் மூலம் 57,171 மாணவ–மாணவிகள் எழுதுகின்றனர். இதில் 27,994 மாணவர்களும், 29,177 மாணவிகளும் அடங்குவர்.
தனித் தேர்வர்கள் 3196 பேரும், தட்கல் மூலம் 645 பேரும் பரீட்சை எழுதுகின்றனர்.
208 மையங்களில் இத்தேர்வு நடைபெறுகிறது. 20 இடங்களில் வினாத்தாள் கட்டு காப்பகத்தில் இருந்து தினமும் போலீஸ் பாதுகாப்புடன் வினாத்தாள் பள்ளிகளுக்கு வினியோகம் செய்யப்படுகிறது.
தேர்வு மையத்தில் முறை கேடுகளில் ஈடுபடும் மாணவர்களை கண்காணிக்க 416 பேர் கொண்ட பறக்கும்படை அமைக்கப்பட்டுள்ளது. முதன்மை கண்காணிப்பாளர் 208 பேர் மற்றும் துறை அலுவலர்கள் 208 பேர் வீதம் தேர்வு மையங்கள் கண்காணிக்கப்படுகிறது.
சென்னை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ராஜேந்திரன் தலைமையில் அனைத்து தேர்வு மையங்களும் தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது.
No comments:
Post a Comment