கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ், தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்கள் சேர்ப்பது தொடர்பான அரசாணையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கிற்கு ஒரு வாரத்துக்குள் பதில் மனு தாக்கல் செய்யவேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சென்னை ஐகோர்ட்டில், விருகம்பாக்கத்தை சேர்ந்த ஏ.நாராயணன் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:–
குறைவான கால அவகாசம்
மத்திய அரசு, கடந்த 2009–ம் ஆண்டு கட்டாய கல்வி உரிமை சட்டத்தை கொண்டு வந்தது. இந்த சட்டத்தின்படி, அனைத்து தனியார் பள்ளிகளிலும், 25 சதவீத இடங்கள் ஏழை மாணவர்களுக்கு ஒதுக்க வேண்டும்.
இதன்படி, தனியார் பள்ளிகளில் மாணவர்கள் விண்ணப்பம் செய்வது குறித்து கடந்த 2013–ம் ஆண்டு ஏப்ரல் 1–ந் தேதி தமிழக அரசு ஒரு அரசாணையை வெளியிட்டது. அதில், ஒவ்வொரு ஆண்டும் மே 3–ந் தேதியில் இருந்து 9 –ந் தேதிக்குள் (7 நாட்களுக்குள்) விண்ணப்பத்தை சம்பந்தப்பட்ட பள்ளிகளில் வழங்கி விட வேண்டும் என்று கூறியிருந்தது.
இந்த 7 நாட்கள் கால அவகாசம் என்பது மிகவும் குறைவானதாகும். இதில், சனி மற்றும் ஞாயிற்றுகிழமைகளை கழித்தால், 5 நாட்கள் மட்டுமே மீதம் இருக்கும்.
பதிலளிக்க வில்லை
இந்த 5 நாட்களில், பள்ளிக்கூடத்தில் இருந்து விண்ணப்பத்தை பெற்று, அவற்றை பூர்த்தி செய்து, திருப்பிக் கொடுப்பது என்பது மிகவும் கடினமானது என்பதால், இந்த கால அவகாசத்தை அதிகரிக்க வேண்டும் என்று கடந்த ஆண்டு இந்த ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தேன்.
அந்த வழக்கிற்கு பதிலளிக்கும்படி, தமிழக அரசுக்கு இந்த ஐகோர்ட்டு உத்தரவிட்டும், இதுவரை பதில் மனு தாக்கல் செய்யப்படவில்லை.
கர்நாடகம் உள்ளிட்ட பிற மாநிலங்களில், இந்த 25 சதவீத இடங்களுக்கு, விண்ணப்பம் செய்ய ஒரு மாதத்துக்கு மேல் கால அவகாசம் வழங்கப்படுகிறது. தமிழக அரசு குறுகிய கால அவகாசம் வழங்கியுள்ளதால், கடந்த ஆண்டு தகுதிகள் இருந்தும் பல மாணவர்கள், இந்த இடஒதுக்கீட்டின் கீழ் பள்ளியில் சேர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இறுதி வாய்ப்பு
இந்த 25 சதவீத இடங்களை வேறு மாணவர்களை கொண்டு பள்ளிகள் நிரப்பிக் கொண்டது. எனவே இந்த வழக்கு முடியும் வரை, ஏழை மாணவர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள 25 சதவீத இடங்களை, தனியார் பள்ளிகள் நிரப்புவதற்கு தடை விதிக்க வேண்டும். நான் தொடர்ந்த வழக்கிற்கு பதில் மனு தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.
இந்த மனு தலைமை நீதிபதி சத்தீஷ்குமார் அக்னிகோத்ரி, நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், மனுதாரர் கடந்த ஆண்டு தொடர்ந்த வழக்கிற்குள், தமிழக அரசு ஒரு வாரத்துக்குள் பதில் மனுவை தாக்கல் செய்யவேண்டும். இதுவே தமிழக அரசுக்கு வழங்கப்படும் இறுதி வாய்ப்பாகும் என்று கூறி வழக்கை அடுத்த வாரத்துக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டனர்.
No comments:
Post a Comment