விடைத்தாள் திருத்தும் பணியை புறக்கணித்து ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
விடைத்தாள் திருத்தும் பணி
தமிழகம் முழுவதும் பிளஸ்–2 தேர்வுகள் முடிந்து விடைத்தாள் திருத்தும் பணி நடைபெற்று வருகிறது. அதன்படி வேலூர் கிருஷ்ணசாமி மேல்நிலைப்பள்ளியில் விடைத்தாள் திருத்தும் பணி நடந்து வருகிறது.
இந்த நிலையில் வணிகவியல் விடைத்தாள்களை தொழிற்பாட பிரிவுகளை நடத்தும் ஆசிரியர்களை வைத்து திருத்தும்படி மாவட்ட கல்வி நிர்வாகம் அறிவித்துள்ளதாக தெரிகிறது. இதனை அறிந்த தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் சங்கத்தினர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
ஆர்ப்பாட்டம்
மேலும் சங்கத் தலைவர் பாஸ்கரன் தலைமையில் 25–க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் திடீரென பள்ளியின் உள்ளே விடைத்தாள் திருத்தும் பணியை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் கூறுகையில் ‘வழக்கமாக வணிகவியல் விடைத்தாள்களை முதுநிலை ஆசிரியர்கள் தான் திருத்துவார்கள். ஆனால் முதல் முறையாக இந்த ஆண்டு தொழிற்பாட பரிவு ஆசிரியர்களை வைத்து விடைத்தாள்கள் திருத்தப்படுகிறது. இது நடைமுறைக்கு உகந்ததல்ல. இதனால் மாணவர்கள் மதிப்பெண்கள் குறைய வாய்ப்புள்ளது. மேலும் அவர்களின் எதிர்காலம் பாதிக்க கூடிய வாய்பும் உள்ளது. எனவே வணிகவியல் ஆசிரியர்கள் தான் அந்த பாடத்திற்கான விடைத்தாள்களை திருத்த வேண்டும் ‘ என்றனர்.
பேச்சுவார்த்தை
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுப்பிரமணி, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அவர்களிடம் ‘ தமிழக கல்வி இயக்குநர் கூறியபடி தான் விடைத்தாள் திருத்தும் பணி நடைபெற்று வருகிறது. இதே நடைமுறை தான் தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகிறது. இனிவரும் காலங்களிலும் இதே நடைமுறைகள் தான் பின்பற்ற உள்ளதாக தெரிகிறது. மேலும் இதுகுறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்‘ என்றார். அதன்பின் விடைத்தாள் திருத்தும் பணிக்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட ஆசிரியர்கள் திரும்பினர்.
இச்சம்பவத்தால் பள்ளி வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
No comments:
Post a Comment