Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Wednesday, 26 March 2014

இன்றைய கல்வி முறை குறித்து தமிழ் தி ஹிந்து பத்திரிக்கையின் தலையங்கம்

கும்பகோணம் டிகிரி காபியும் சமகாலத்துக் கல்விமுறையும்…
நெடுஞ்சாலைகளில் கும்பகோணம் டிகிரி காபிக் கடைகள் நிரம்பிக்கிடக்கின்றன. ஒவ்வொன்றிலும் எப்போதும் கூட்டம். ஆவி பறக்கும் கொதிநிலையில், பித்தளை டபரா-டம்ளரில் காபி வழங்கப்பெறும். அசல் பித்தளையல்ல, பித்தளை வண்ண முலாம் பூசப்பட்டுள்ள பாத்திரங்கள்.
டபரா-டம்ளரைக் கும்பகோணத்தின் அடையாளமாகக் கருதுகிறார்கள். வாயில் காபியை வைத்ததும் சூட்டின் காரணமாக நாக்கு ருசிக்கும் திறனை இழக்கிறது. அதனால், காபியின் ருசியே தெரியாது சாப்பிட்டுவிட்டு கும்பகோணம் டிகிரி காபி சாப்பிட்டதாக நினைத்துக்கொள்கின்றோம். கும்பகோணத்துக்காரர்களைக் கேட்டால், டிகிரி காபி பாலின் தரத்தால் வருவது என்பார்கள்.

நமது குழந்தைகளுக்கு வழங்கப்படும் கல்வியும் டிகிரி காபியைப் போன்றதே. கட்டிடம், பாடநூல்கள், ஆசிரியர்கள் போன்றவை முலாம் பூசப்பட்ட பாத்திரங்கள். மனப்பாடமுறைக் கல்வி சூடான காபியைப் போன்றது. கல்வி கற்கிறோம் என்ற மாயையை ஏற்படுத்துவதுடன், கல்வியின் ருசியை அறியாமல் செய்துவிடும். நல்ல பால்தான் டிகிரி காபியைத் தரும் என்பதுபோல, சிந்தனையைத் தூண்டும் வகுப்பறைக் கற்பித்தல்தான் தரமான கல்வியைத் தரும் என்பதை மறந்துவிடுகிறோம்.

குறுக்குவழிக் கல்வி

சுயநிதிப் பள்ளிகள் அனுமதிக்கப்பட்டவுடன் பெற்றோரைக் கவர வேண்டிய தேவை ஏற்பட்டது. பொதுத்தேர்வில் பள்ளியின் தேர்ச்சி விகிதமும், தனிப்பட்ட மாணவருடைய மதிப்பெண்களும் தரத்துக்கு அளவுகோல்களாயின . உயர் தேர்ச்சியை அடைந்திட பள்ளிகள் பல குறுக்கு வழிகளைக் கடைப்பிடித்தன.

அவற்றில் பிரதானமானது மனப்பாடக் கல்விமுறை. இதன்படி, பாடங்களைக் கற்பிக்காமலோ அல்லது அரைகுறையாகக் கற்பித்தோ பாடநூலில் உள்ள வினாக்களுக்கு விடைகளை மனப்பாடம் செய்ய மாணவரைப் பழக்கப்படுத்த வேண்டும்.

இந்தப் பள்ளிகளில் 10-ம் வகுப்புப் பாடங்களை 9-ம் வகுப்பிலேயும், 12-ம் வகுப்புப் பாடங்களை 11ம் வகுப்பிலேயும் தொடங்கி, 10, 12-ம் வகுப்புகளில் முழுமையாகத் திருப்புதலுக்கும், தின, வார மற்றும் திடீர் தேர்வுகளுக்கும் பயன்படுத்துகிற நடைமுறையைப் பின்பற்றுகின்றன.

மாணவர்களுக்கு ஓய்வு என்பதே இருக்காது. உறைவிடப் பள்ளிகளில் மிகுந்த கட்டுப் பாடுகள். அச்சத்திலேயே 24 மணி நேரமும் மாணவர்கள் வாழ வேண்டிய நிலை பரிதாபத்துக்குரியது. ஐ.நா. குழந்தைகள் உரிமை சாசனம் வற்புறுத்தும் மகிழ்ச்சி கரமான குழந்தைப் பருவம் மறுக்கப்படுகிறது.

உயர் தேர்ச்சி

இம்முறையைத் தடுத்து நிறுத்த வேண்டிய கல்வித் துறையே பொதுத்தேர்வுகளில் நல்ல தேர்ச்சி பெற இதுவே சரியான முறை என்று ஏற்றுக்கொண்டு, அதனைப் பள்ளிகளில் செயல்படுத்த முயல்வதை என்னவென்று சொல்வது? பத்து, பன்னிரண்டாம் வகுப்பு ஆசிரியர்களுக்கு உயர் தேர்ச்சி காட்டிட தனிப்பயிற்சி அளிக்க இயக்குனர் ஆணையிட்டுள்ளார்.
கல்வித் துறையே, மாநிலம் முழுவதற்கும் பொதுவாகப் பருவத் தேர்வுகள் நடத்துவதும், வினா வங்கி என்ற பெயரில் வினாத் தொகுப்புகளை வெளியிட்டு விற்பனை செய்வதும் பொதுத்தேர்வுகளில் உயர் தேர்ச்சி அடைந்திட வேண்டுமென்றே. இவை அனைத்தும் மனப்பாட முறைக் கல்வியை வளர்க்கவே உதவும். இதன் விளைவு, பொறியியல் மருத்துவம் போன்ற தொழிற்படிப்புகளில் சேரும் மாணவர்கள் முதலாம் ஆண்டிலேயே தேர்ச்சி பெறத் தவறுகின்றனர்.

முன்கூட்டியே...

தனியார் பள்ளிகளைப் போல ஒன்பது, பதினொன்றாம் வகுப்புகளிலேயே பொதுத்தேர்வுக்குரிய பாடங்களை முன்கூட்டிக் கற்பிக்காவிட்டாலும் அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் டிசம்பர், ஜனவரி மாதங்களுக்குள் பாடங்களை முடித்துவிட்டு, மீதிக் காலத்தை மீள்தேர்வுகளுக்குப் பயன்படுத்துமாறு பள்ளிக்கல்வி இயக்ககம் அறிவுறுத்தியுள்ளது.
இதனால், பாடங்களை விரைந்து கற்பிக்க ஆசிரியர்கள் நிர்ப்பந்தப்படுத்தப்படுகின்றனர். 200 வேலை நாட்களில் கற்பிக்க வேண்டியவற்றை 150-160 நாட்களில் நடத்த வேண்டுமென்றால், கற்பித்தலும் குறைபடும் மாணவர்களுடைய கற்றலும் வெகுவாகப் பாதிக்கப்படும். பாடத்திட்டங்கள் வகுக்கும்போது, ஒவ்வொரு பாடப் பகுதியையும் நன்கு கற்பிக்கவும் மாணவர் புரிந்துகொள்ளுதலை உறுதிப்படுத்தவும் தேவையான பிரிவேளைகள் ஒதுக்கப்படும்.

ஒரு பாடப் பகுதிக்கு 10 பிரிவேளைகள் தேவையென்றால், ஆசிரியர் விடுப்பு, அந்தப் பகுதியில் ஒரு அலகுத் தேர்வு ஆகியவற்றையும் கணக்கில் கொண்டு 12 பிரிவேளைகள் ஒதுக்கப்படும். 10 பிரிவேளைகளில் கற்க வேண்டியதை 5, 6 பிரிவேளைகளில் முடிக்க முற்பட்டால், கற்றல் நடைபெறாது. அஜீரணம்தான் ஏற்படும். கற்றல் இல்லாமலேயே தேர்வுகளை எதிர் கொள்ள வேண்டுமென்றால், மனப்பாட முறைக்கு மாணவர்கள் தள்ளப்படுவார்கள். பள்ளியில் முழுமை யாகக் கற்க இயலாததால் காலையும் மாலையும் தனி வகுப்புகளுக்குச் செல்ல வேண்டிய அவசியமும் ஏற்படு கிறது. அதற்கான வசதி இல்லாதவர்கள் அரைகுறை அறிவோடு தேர்வுகளை மட்டுமின்றி வாழ்க்கையையே எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

பெரும் சவால்

பொதுத்தேர்வுக்குரிய வகுப்புகளை எடுக்கும் ஆசிரியர்கள் படும் துன்பம் அளவிட முடியாதது. ஒரு ஆசிரியர் வேடிக்கையாக, ஆனால் வேதனையுடன், “மாணவர்கள் கீழ் வகுப்புகளிலிருந்து அறியாமையைத் தொடர்வட்டி விகிதத்தில் சேர்த்துக்கொண்டு வருகின்றார் கள். அடிப்படைகள்கூடத் தெரியாத அவர்களைத் தேர்வுக்கு ஆயத்தப்படுத்துதல் பெரும் சவாலாக இருக்கிறது” என்று கூறினார்.

ஒன்றாம் வகுப்பிலிருந்து தரமான கல்வியை ஒவ்வொரு மாணவருக்கும் உறுதிசெய்வதன் மூலமே, மனப்பாடமுறைக் கல்வியி லிருந்து மாணவர்களை விடுவிக்க முடியும். அதனை உறுதிசெய்வது ஆண்டாய்வு. ஆனால், கல்வித் துறை தனது முதற்பணியான பள்ளி ஆண்டாய்வை முறையாக நடத்துவதைக் கைவிட்டுப் பல ஆண்டுகளாகிவிட்டன. 10, 12 -ம் வகுப்புகள் மட்டும்தான் பள்ளிக்கல்வி, அவற்றைக் கவனித்தால் போதும் என்ற மாயையிலிருந்து கல்வித் துறை விடுபட வேண்டும்.

அப்போதுதான், மாணவர்களுக்கு அர்த்த முள்ள முழுமையான கல்வி கிடைக்கும். அறிவுமிக்க ஒரு சமுதாயத்தையும் நம்மால் உருவாக்க இயலும்.

குழு முறையில் கற்றல்

கோத்தாரிக் கல்விக் குழு, பேரா. யஷ்பாலின் ‘சுமையின்றிக் கற்றல்’ குழு ஆகியவை பள்ளிக் கல்வியில் தேவைப்படும் சீரிய மாற்றங்களை விரிவாகவும் தெளிவாகவும் எடுத்துரைத்துள்ளன. தமிழ்நாட்டில் பாடச்சுமைக் குறைப்புக் குழு, சமச்சீர் கல்விக் குழு ஆகியவையும் பல நடைமுறைச் சாத்தியமுள்ள பரிந்துரை களை அளித்துள்ளன. ஆனால், அவை காற்றில் விடப்பட்டது மாத்திரமின்றி, நேரெதிர் முடிவுகளும் எடுக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்படுகின்றன.

மாணவர்களுக்காகப் பள்ளியா, பள்ளிக்காக மாணவரா என்ற வினா எழுகிறது. மாணவர்களுடைய வயது, புரிந்துகொள்ளும் தன்மை ஆகியவை கருத்தில் கொள்ளப்படாமல், உயர் கல்வியின் தேவைகளை முன்வைத்தே பாடத்திட்டங்கள் தயாரிக்கப்படுகின்றன. பெரும்பான்மையோர் உயர் கல்விக்குச் செல்லும் வாய்ப்பை இதுவே குறைக்கிறது என்பது ஒரு முரண்நகை. போட்டி முறையில் கற்றல் என்பதைவிட, குழுமுறையில் கற்றல் என்பதை ஊக்குவிக்கும் வகையில், கல்விமுறை அமைக்கப்பட வேண்டும்.

வகுப்பறை என்பது விவாத அரங்காக மாற வேண்டும். மாணவர் பங்கேற்புடன் வகுப்பறை மாறும்போதுதான் உண்மையான கல்வியை மாணவர்கள் பெற முடியும் என்பதைப் பல ஆய்வுகளும் வலியுறுத்தியுள்ளன.

பள்ளிக் கல்வியில் சீரிய மாற்றங்களைக் கொண்டு வராமல் முன்னேற்றப் பாதையில் செல்ல இயலாது. பளபளக்கும் டபரா-டம்ளர்களைப் பார்த்து டிகிரி காபி என நம்புவதுபோல், அர்த்தமற்ற கல்வி மூலம் அடுத்தடுத்த தலைமுறைகளை நாம் இழந்துவிடக் கூடாது.

-ச. சீ. இராசகோபாலன், கல்வி ஆர்வலர், 
முன்னாள் மாநிலத் தலைவர், 
தலைமை ஆசிரியர் சங்கம். 
தொடர்புக்கு: rajagopalan31@gmail.com

No comments:

Post a Comment