எந்த ஆண்டும் இல்லாத அளவிற்கு, இந்த ஆண்டு, பிளஸ் 2 தேர்ச்சி சதவீத புள்ளியும், 10ம் வகுப்பு தேர்ச்சி சதவீத புள்ளியும், 90ஐ தாண்டி, சாதனை படைத்துள்ளது. மாணவர்கள், மதிப்பெண்களை வாரி குவித்துள்ளனர். நேற்று வெளியான பத்தாம் வகுப்பு தேர்வு முடிவில், 465 பேர், மாநில அளவில், முதல் மூன்று இடங்களை பிடித்துள்ளனர். அறிவியலில், 69 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர், 100க்கு, 100 மதிப்பெண் பெற்றுள்ளனர். சமூக அறிவியல், 'சென்டமும்' 26 ஆயிரத்திற்கும் அதிகமாக வந்துள்ளது.
தேர்ச்சி சதவீத புள்ளி அதிகரிப்பும், மாணவர்கள், அதிகளவில், மதிப்பெண் குவித்திருப்பதும், பலரின் புருவங்களையும் உயர்த்த வைத்துள்ளது. இந்த மதிப்பெண் குவிப்பால், தமிழகத்தின் கல்வித்தரம் மேம்பட்டுள்ளதாக, கல்வித்துறை வட்டாரம் கருதுகிறது.
இது குறித்து, கல்வியாளர், எஸ்.எஸ்.ராஜகோபாலன் கூறியதாவது: ஆசிரியரும், மாணவர்களும் கடினமாக உழைத்துள்ளனர். இதனால், தேர்ச்சி சதவீதம் அதிகரித்துள்ளது. மதிப்பெண்ணும், அதிகமாக வாங்கி உள்ளனர். ஆனாலும், கல்வித்தரம் மேம்பாடு அடைந்துள்ளது என்பதற்கு, இதை ஒரு காரணமாக கருத முடியாது. பாட புத்தகத்தில் உள்ள பகுதியில் இருந்து தான், கேள்வி கேட்கின்றனர். அதனால், பாட புத்தகத்தை, அப்படியே, மாணவர்கள், மனப்பாடம் செய்து, தேர்வை எழுதுகின்றனர். இதனால், மதிப்பெண் அதிகரிக்கும்; தேர்ச்சி சதவீதம் அதிகரிக்கத்தான் செய்யும். உண்மையான கல்வித்தர மேம்பாட்டுக்கு, தேர்வு முறையை மாற்ற வேண்டும். 20 சதவீத கேள்விகளை, பாட புத்தகத்திற்கு வெளியே இருந்து கேட்க வேண்டும். இந்த கேள்விகள், மாணவர்களின் சிந்தனையை தூண்டுவதாக இருக்க வேண்டும். இந்த கேள்விகள், பாட பொருள் சார்ந்ததாக இருக்கலாம். ஆனால், கேள்வி மட்டும், அதை சார்ந்து, மாணவர்கள் சிந்தித்து எழுதும் வகையில் இருக்க வேண்டும். இதுபோன்ற ஒரு முறை வந்தால், ஆசிரியர்கள், விரிவாக, பல கோணங்களில், பல விஷயங்களை, மாணவர்களுக்கு கற்றுத் தருவர். மாணவர்களும், புதிய முறையில் சிந்தித்து, தேர்வெழுதும் திறனை பெறுவர். தற்போது, அதற்கு வாய்ப்பு இல்லை. . இவ்வாறு, ராஜகோபாலன் கூறினார்.
No comments:
Post a Comment