பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. முதல் மூன்று இடங்களை எப்போதும் இல்லாத அளவுக்கு 465 பேர் பிடித்துள்ளனர். முதல் 3 இடங்களையும் பிடித்த மாணவர்கள் எடுத்துள்ள மதிப்பெண்களை கவனிக்கும் போது ஒன்று முதல் 3 மதிப்பெண் தான் வித்தியாசம். எனினும், தமிழ் மொழியை தவிர்த்து பிற மொழியை எடுத்து படித்த மாணவர்கள் 3 பேர் 500க்கு 500 எடுத்துள்ளனர். இதுவும் சாத்தியமாகியுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் தேர்ச்சி வீதம் அதிகரித்து வருவதாக தேர்வுத்துறையின் பட்டியல் காட்டுகிறது. 2011ல் 85.30 சதவீதம், 2012ல் 86.20 சதவீதம். கடந்த ஆண்டு 89 சதவீத தேர்ச்சி. இந்த ஆண்டு 90.7 சதவீதம் தேர்ச்சி. தேர்ச்சி வீதம் அதிகரிக்கும் அதே நேரத்தில் தேர்வு எழுதும் மாணவர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் குறைவதை கவனிக்க வேண்டும். கடந்த ஆண்டு பத்தாம் வகுப்பில் 10 லட்சத்து 51 ஆயிரம் பேர் எழுதினர். இந்த ஆண்டு 10 லட்சத்து 20 ஆயிரம் பேர் எழுதியுள்ளனர்.
2012ம் ஆண்டு கணக்கு, அறிவியல் பாடத்தில் சென்டம் எடுத்தவர்கள் எண்ணிக்கை நான்கு டிஜிட்டில் இருந்தது. கடந்த ஆண்டு 5 டிஜிட்டாக உயர்ந்தது. கடந்த ஆண்டில் 30 ஆயிரம் பேர் கணக்கிலும், அறிவியலில் 38 ஆயிரம் பேரும் சென்டம் எடுத்தனர். இந்த ஆண்டு கணக்கு பாடத்தில் சென்டம் 18 ஆயிரமாக குறைந்துள்ளது. அறிவியல் 69 ஆயிரம் என உயர்ந்துள்ளது. பத்தாம் வகுப்பு முடித்து பிளஸ்1 வகுப்பில் சேரும் மாணவர்கள் பிளஸ் 2 வகுப்புக்கான பாடத்தை படிக்க வேண்டும். 2 ஆண்டுகளுக்கு அதுதான் பாடம். இதனால் பிளஸ் 2 தேர்வில் அதிக அளவில் மதிப்பெண் எடுப்பது, சென்டம் எடுப்பது எல்லாம் நடக்கிறது. அதேபோல மொழிப்பாடங்களில் அதிக அளவில் சென்டம் எடுக்கிறார்களா? ஆங்கிலத்தில் சென்டம் எடுக்கிறார்களா? என்பதை பார்ப்பதே இல்லை.
பள்ளிப் படிப்பை முடித்து வெளியில் செல்லும் மாணவர்கள் மதிப்பெண்களை தாண்டி ஆழ்ந்த அறிவுடன் இருப்பது குறைவுதான். மருத்துவம், பொறியியல் படிப்புக்கு செல்லும் மாணவர்களுக்கு அங்குதான் பிரச்னை தொடங்குகிறது. தாங்கள் எடுத்த மதிப்பெண்ணுக்கு ஏற்ற படிப்பு, கல்லூரியை தேர்வு செய்யும் போது, அங்கும் போட்டி நிலவுகிறது. இதனால் போதிய மதிப்பெண் இருந்தும் விரும்பிய கல்லூரி கிடைக்காமல் பல மாணவர்கள் வெறுத்துப் போய்விடுகின்றனர். மருத்துவ படிப்பில் குறைந்த இடங்களே இருப்பதால் பிளஸ் 2 வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த பலபேர் ஆண்டுதோறும் வேறு வழியில்லாமல் வேறு படிப்புகளை தேர்வு செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.
பொறியியல் படிப்பின் நிலை வேறு. விரும்பிய கல்லூரி கிடைக்காமல் போவதால் ஆண்டுதோறும் ஆயிரம் கணக்கில் இடங்கள் காலி ஏற்படுகிறது. கல்லூரி படிப்பில் பெரும்பாலும் ஆங்கில வழிக் கல்வி என்பதால் மாணவர்கள் திணற வேண்டியுள்ளது. கணிசமான மாணவர்கள், பள்ளி படிப்புக்கும் கல்லூரி படிப்புக்கும் பெரும் வித்தியாசம் இருப்பதை உணர்ந்து தவிக்கின்றனர். இது மட்டுமின்றி, அவர்களின் ஆங்கில அறிவு போதாத நிலையில் வேலை வாய்ப்புக்கும் சிக்கல் ஏற்படுகிறது. இதற்கெல்லாம் பள்ளிப் படிப்பின் அடிப்படை சரியில்லை என்று பல்கலைக் கழகங்கள் கூறுகின்றன. பல்க லைக்கழக வளாக வேலை வாய்ப்பு முகாம்களில் கலந்து கொள்ளும் மாணவர்களில் மிகக் குறைந்த அளவிலேயே நிறுவனங்களால் தேர்வு செய்யப்படுகின்றனர். சாதனையை மகிழும் நாம், இப்படி சில வருத்தப்பட வேண்டிய விஷயங்களை யோசிக்கத்தான் வேண்டும். அந்த வகையில் மாற்றம் வரும் நாள் எந்நாளோ?
No comments:
Post a Comment