என் கவனத்தை திசை திருப்பவே, கல்வித்தகுதி தொடர்பான சர்ச்சையை, காங்கிரசார் எழுப்பியுள்ளனர். எனக்கான அமைச்சர் பொறுப்பை, நான் எப்படி கவனிக்கிறேன் என்பதைப் பார்த்து, அந்தப் பதவிக்கு நான் தகுதியானவளா, இல்லையா என்பதை, மக்கள் தீர்மானிக்க வேண்டும்,'' என, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர், ஸ்மிருதி இரானி கூறினார்.
மனிதவளத்துறை:
'மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை கட்டுப்பாட்டில் தான், கல்வி இலாகா வருகிறது. அப்படிப்பட்ட நிலையில், பட்டப்படிப்பை கூட முடிக்காத, ஸ்மிருதி இரானி யை, அந்தத் துறையின் அமைச்சராக நியமித்துள்ளது வேடிக்கையாக உள்ளது. இது தான் மோடி அமைச்சரவை' என, காங்கிரஸ் மூத்த தலைவர், அஜய் மேக்கன் கிண்டலடித்திருந்தார். இதற்கு, மத்திய அரசு தரப்பிலும், பா.ஜ., தரப்பிலும் பதிலடி கொடுக்கப்பட்டது. மற்றொரு மத்திய அமைச்சரான உமாபாரதி, காங்கிரஸ் தலைவர் சோனியாவின் கல்வித்தகுதி குறித்தும் கேள்வி எழுப்பி இருந்தார்.
இந்நிலையில், தன் கல்வித்தகுதி தொடர்பாக எழுந்துள்ள சர்ச்சைகளுக்கு, அமைச்சர் ஸ்மிருதி இரானி நேற்று பதில் அளித்தார்.
அவர் கூறியதாவது:
எனக்கு கொடுக்கப்பட்ட அமைச்சக பணியிலிருந்து, என் கவனத்தை திசை திருப்பவே, கல்வித்தகுதி தொடர்பான சர்ச்சையை, காங்கிரசார் எழுப்பி உள்ளனர். என் திறமையை மதிப்பிட்டே, பா.ஜ., மேலிடம், மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை பொறுப்பை வழங்கி உள்ளது. எனக்கு கொடுக்கப்பட்ட பொறுப்பை, நான் எப்படி கவனிக்கிறேன் என்பதைப் பார்த்து, இந்தப் பதவிக்கு நான் தகுதியானவளா, இல்லையா என்பதை மக்கள் தீர்மானிக்க வேண்டும். இதற்கு மேல், நான் எதையும் சொல்ல விரும்பவில்லை. இவ்வாறு, ஸ்மிருதி இரானி கூறினார்.
No comments:
Post a Comment