ஜலகண்டாபுரம், பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், 600 மாணவியருக்கு ஒரே ஆசிரியர் பாடம் நடத்துவதால், கல்வித்தரம் குறையும் அபாயம் உள்ளதாக, பெற்றோர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
சேலம் மாவட்டம், ஜலகண்டாபுரம், அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், 1,850க்கும் மேற்பட்ட மாணவியர் படித்து வருகின்றனர்.இப்பள்ளி, நடந்து முடிந்த ப்ளஸ் 2 தேர்வில், 89 சதவீதம், எஸ்.எஸ்.எல்.ஸி., தேர்வில், 94 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்தது.தற்போது, ப்ளஸ் ஒன் மற்றும் ப்ளஸ் 2 வகுப்புகளில், 600க்கும் மேற்பட்ட மாணவியர் படித்து வருகின்றனர். இவர்களுக்கு, ஒரே ஆங்கில ஆசிரியர் தான் பாடம் நடத்தி வருகிறார்.
மாணவியரின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால், அதிகப்படியான மாணவியரை, ஒரே இடத்துக்கு வரவழைத்து பாடம் நடத்துகிறார்.இதனால், அனைத்து மாணவியரும் சரியாக புரிந்து கொள்ள முடியாத நிலைஏற்பட்டுள்ளது.சரியான காலத்திற்குள் பாடங்களை நடத்தி முடிக்க வேண்டும் என்பதால், ஆசிரியர்களும் அவசரமாக நடத்தி முடிக்கின்றனர். இதனால், மாணவியரின் கல்வித்தரம் பாதிக்கப்படும் என்று, பெற்றோர்அச்சம் தெரிவித்துள்ளனர்.வகுப்பறை பற்றாக்குறை இருப்பதால், மாணவியரை சுழற்சி முறையில் வராண்டாவில் அமர வைத்து, ஆசிரியர்கள் பாடம் நடத்தி வருகின்றனர்.
சாதனை படைத்து வரும் இப்பள்ளிக்கு, கூடுதல் வகுப்பறைகளை கட்டித்தரவும், மேல்நிலை வகுப்புகளுக்கு கூடுதலாக ஆசிரியரை நியமிக்கவும், சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென, மாணவியரின் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் ஓபுளி செட்டியார் கூறியதாவது: ஆசிரியர்கள் மற்றும் வகுப்பறை பற்றாக்குறை குறித்து,தொகுதி, எம்.எல்.ஏ.,வும், நெடுஞ்சாலைத்துறை அமைச்சருமான இடைப்பாடி பழனிசாமியிடம் மனு கொடுத்துள்ளோம். உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment