நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கு அடிப்படை கம்ப்யூட்டர் திறனை வளர்க்க கணினி வழி கற்றல் முறைக்காக பள்ளிக்கல்வித்துறை சார்பில் வழங்கப்பட்ட லேப் டாப் மற்றும் கம்ப்யூட்டர்களை இயக்க போதிய பயிற்சி இல்லாததால இத்திட்டம் முடங்கியுள்ளதாக கல்வியாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
அரசு பள்ளி மாணவர்களுக்கு அடிப்படை கம்ப்யூட்டர் அறிவு இல்லாததால் உயர்கல்வி, வேலை வாய்ப்பு உள்ளிட்ட இடங்களில் பின்னடைவை சந்திக்கின்றனர். இதை மேம்படுத்தும் நோக்கில் இலவச லேப்டாப் வினியோகம், ஆசிரியர்களுக்கு தொழில்நுட்ப பயிற்சி, ஒருங்கிணைந்த இணையதள கல்வி, ஸ்மார்ட் கிளாஸ் உட்பட பல்வேறு திட்டங்களை வகுத்து வருவது குறிப்பிடத்தக்கது.
அரசு நடுநிலைப்பள்ளிகளில் வாரத்திற்கு குறைந்தபட்சம் ஐந்து பாடவேளைகளில் பள்ளிகளுக்கு வினியோகிக்கப்பட்ட லேப்டாப் அல்லது கம்ப்யூட்டர் பயன்படுத்தி வகுப்புகளை கையாளவேண்டும் என தொடக்க கல்வித்துறை இயக்குநர் கடந்தாண்டு உத்தரவிட்டுள்ளார்.
மேலும்மாணவர்களுக்கு கற்பித்தல் சம்மந்தப்பட்ட தகவல்களை மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு அனுப்பவும் அறிவுறுத்தப்பட்டது. இதன்படி மாநிலம் முழுவதும் அனைத்து நடுநிலைப்பள்ளிகளுக்கும் லேப்டாப் மற்றும் கம்ப்யூட்டர்கள் விநியோகம் செய்யப்பட்டன. இருப்பினும் உத்தரவு பிறப்பித்து பல மாதங்கள் ஆன நிலையிலும் சில பள்ளிகளை தவிர பெரும்பாலான பள்ளிகளில் லேப்டாப் மூலம் கற்பித்தல் பணி நடப்பதில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
நடுநிலைப்பள்ளிகளில் கணினி ஆசிரியர்கள் இல்லாததும், சக ஆசிரியர்களுக்கு அடிப்படை கம்ப்யூட்டர் அறிவுத்திறன் இல்லாததுமே இதற்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. இதனால் மாணவர்களின் அடிப்படை கம்ப்யூட்டர் அறிவுத்திறனை வளர்க்கும் திட்டம் முடங்கியதாக கல்வியாளர்கள் அதிருப்தி தெரிவித்தனர்.
லேப்டாப் மற்றும் கம்ப்யூட்டர் மாதக்கணக்கில் உபயோகப்படுத்தாமல் மூடி வைத்திருப்பதால் தொழில்நுட்ப கோளாறின் காரணமாக பழுதடைய வாய்ப்புள்ளது. பல லட்சம் ரூபாய் மதிப்பில் துவங்கப்பட்ட திட்டத்திற்கு பயிற்சி அளிக்க ஆசிரியர்கள் இல்லாததால் முடங்கிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
அரசு நடுநிலைப்பள்ளி ஆசிரியர் ஒருவர் கூறுகையில், "பள்ளிக் கல்வித்துறையின் உத்தரவின் பேரில் வாரத்துக்கு குறைந்தது ஐந்து பாடவேளைகளில் குறுந்தகடுகள் துணையோடும் இணையதளங்களில் இருந்து பாடம் சார்ந்த வீடியோக்கள் மற்றும் பவர் பாயிண்ட்டுகளை பதிவிறக்கம் செய்து 3டி, அனிமேஷன் உள்ளிட்ட முறைகளில் லேப்டாப் பயன்படுத்தி ஆசிரியர்கள் பாடம் கற்பிக்கவேண்டும்.
ஆனால், அடிப்படை தெரியாமல் கற்பித்தல் பணி மேற்கொள்வது மிகவும் கடினமாக உள்ளது. இதற்கு முறையாக பயிற்சி அளிப்பதோடு லேப்டாப் மற்றும் கம்ப்யூட்டர்களின் தற்போதைய இயக்க நிலையை தொழில்நுட்ப வல்லுநர்கள் கொண்டு சரிபார்ப்பது அவசியம்" என்றார்.
மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் (பொ) காந்திமதி, "நடுநிலைப்பள்ளிகளில் கணினி சார்ந்த கற்றல் முறைக்கு முக்கியத்துவம் அளிக்க ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தியுள்ளோம். அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் சார்பில் பகுதிநேர கம்ப்யூட்டர் ஆசிரியர்கள் வாயிலாக சில பள்ளிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. தவிர மற்ற ஆசிரியர்களுக்கு நடப்பாண்டில் விரைவில் பயிற்சி அளித்து பள்ளிகளில் ஆய்வு செய்ய திட்டமிட்டுள்ளோம்" என்றார்.
No comments:
Post a Comment