உறவினர்கள், தெரிந்தவர்கள் என்ற போர்வையில் பழகும் நபர்கள் மூலமாகவே அதிகளவு பாலியல் கொடுமைகள் நடக்கிறது" என போலீஸார் மாணவியருக்கு அறிவுறுத்தினர்.
ஓமலூர் போலீஸ் மற்றும் அனைத்து மகளிர் போலீஸ் சார்பில் "பாலியல் கொடுமையிலிருந்து குழந்தைகளை பாதுகாப்பது" குறித்த விழிப்புணர்வு முகாம் ஓமலூர் பாத்திமா மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது.
பாத்திமா மகளிர் மேல்நிலைப்பள்ளி முதல்வர் அந்தோணியம்மாள் தலைமை வகித்தார். ஓமலூர், போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், ஓமலூர் அனைத்து மகளிர் இன்ஸ்பெக்டர் ஜெயபாரதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான அரசு சாரா நிறுவனங்களை சேர்ந்த சிவா, மஞ்சுளா, சத்தியா மற்றும் ஓமலூர், அரசு மருத்துவமனை நர்ஸ்கள் கவுசல்யா, அம்பிகா, அப்துல்பேகம் ஆகியோர் சிறப்பாளர்களாக கலந்து கொண்டனர்.
பாலியல் கொடுமையிலிருந்து குழந்தைகள் தங்களை பாதுகாத்து கொள்வது குறித்து போலீஸார் பேசிய விவரம்: உறவினர்கள் மற்றும் ஆண்களிடம் பள்ளி குழந்தைகள் எச்சரிக்கையுடன் பழக வேண்டும். ஏனென்றால் உறவினர்கள், தெரிந்தவர்கள் என்ற போர்வையில் பழகும் நபர்கள் மூலமாகத்தான் அதிகளவில் பாலியல் வன்கொடுமைகள் நடந்து வருகிறது.
எனவே குழந்தைகள் மற்றும் பெற்றோர்கள் அத்தகைய நபர்களை அடையாளம் கண்டு ஒதுக்க வேண்டும். தவறான நோக்கத்தில் பழகும் நபர்களை அவர்களின் நடவடிக்கையின் மூலம் கண்டுபிடித்து அவர்களுடன் பழகுவதை தவிர்க்க வேண்டும். அவர்கள் பற்றி பெற்றோர்களுக்கு தெரிவிக்க வேண்டும்.
பெண் குழந்தைகள் இளமை காலத்தை கல்வி கற்பதற்காக மட்டுமே பயன்படுத்துவதில் குறியாக இருந்து தங்களின் லட்சியங்களை நிறைவேற்றுவதில் முனைப்புடன் செயல்பட வேண்டும். மாறி வரும் உலகில் மொபைல் ஃபோன், இன்டர்நெட், ஃபேஸ்புக் உள்ளிட்டவைகளை அறவே மாணவியர் ஒதுக்க வேண்டும். அதில் தொடர்பு ஏற்படுத்திக்கொண்டு நேரத்தையும், வாழ்க்கையையும் வீணாக்கி கொள்ளக்கூடாது. இவ்வாறு அவர்கள் பேசினர்.
No comments:
Post a Comment