'இலவச மற்றும் கட்டாயக் கல்வி சட்டத்தின் (ஆர்.டி.இ.,) கீழ், மாணவர்களை சேர்க்காத, 1,937 தனியார் பள்ளிகளுக்கு, செப்., முதல் வாரத்தில், 'நோட்டீஸ்' அனுப்பி, விசாரணைக்குப் பின், கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என, கல்வித் துறை வட்டாரம், நேற்று தெரிவித்தது.
நடப்பு கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை, இம்மாத இறுதியுடன் முடிகிறது. ஆர்.டி.இ., சட்டத்தின்படி, தனியார் பள்ளிகள், மாணவர் சேர்க்கை நடக்கும் வகுப்புகளில், 25 சதவீத இடங்களை, ஏழை, எளிய, பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு வழங்க வேண்டும்.தமிழகத்தில், 11,462 தனியார் பள்ளிகள் உள்ளன. இவற்றில், ஆர்.டி.இ., இட ஒதுக்கீட்டின் படி, ஒரு லட்சத்திற்கும் அதிகமான இடங்கள் உள்ளன. ஆனால், கடந்த வார இறுதியில் எடுத்த கணக்குபடி, 89,382 இடங்களை மட்டுமே, தனியார் பள்ளிகள் வழங்கி உள்ளன. தொடக்கக் கல்வித் துறை கீழ், 7,130 பள்ளிகள் இருந்தபோதும், 5,441 பள்ளிகள் மட்டுமே, ஆர்.டி.இ., பிரிவின் கீழ், மாணவர் சேர்க்கையை நடத்தி உள்ளன. 1,689 பள்ளிகள், 'சீட்' தரவில்லை. மெட்ரிக் பள்ளி இயக்குனரகத்தின் கீழ் உள்ள, 3,890 பள்ளிகளில், 3,642 பள்ளிகள் மட்டுமே, ஆர்.டி.இ., இடஒதுக்கீட்டின் படி, 'சீட்' அளித்துள்ளன. 248 பள்ளிகள், 'சீட்' வழங்க மறுத்துள்ளன. இரு துறைகளையும் சேர்த்து, 1,937 பள்ளிகள், 'சீட்' வழங்க மறுத்து உள்ளன. இந்த பள்ளிகள் மீது, விரைவில், துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.
இதுகுறித்து, கல்வித் துறை வட்டாரம் கூறுகையில், 'ஆர்.டி.இ., 'அட்மிஷன்' தராத பள்ளிகளுக்கு, செப்., முதல் வாரத்தில், 'நோட்டீஸ்' அனுப்பி, விளக்கம் அளிக்க உத்தரவிடப்படும். அவர்கள் அளிக்கும் விளக்கத்தின் அடிப்படையில், சம்பந்தபட்ட பள்ளிகள் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என, தெரிவித்தது.
No comments:
Post a Comment