Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Friday, 1 November 2013

மறுகூட்டல், விடைத்தாள் நகல் பெற நவ., 4 முதல் விண்ணப்பிக்கலாம்

 பத்தாம் வகுப்பு தனிதேர்வு மாணவர், மறுகூட்டல் செய்யவும், பிளஸ் 2 தனி தேர்வு மாணவர், விடைத்தாள் நகல் பெறவும், 4ம் தேதி முதல், 8ம் தேதி வரை, தேர்வுத்துறை இணையதளத்தில், பதிவு செய்யலாம்.தேர்வுத்துறை இயக்குனர், தேவராஜன் அறிவிப்பு: பிளஸ் 2 தனி தேர்வர், மறுகூட்டலுக்கும் விண்ணப்பிக்கலாம். www.tndge.in என்ற இணையதளத்தில், 4ம் தேதி முதல், 8ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். 10ம் வகுப்பு தேர்வர், மறுகூட்டல் கட்டணமாக, மொழிப்பாடங்களுக்கு, ஒரு தாளுக்கு, 305 ரூபாய் வீதமும், இதர பாடங்களுக்கு, தலா, 205 ரூபாய் வீதமும், கட்டணம் செலுத்த வேண்டும்.பிளஸ் 2 தேர்வர், விடைத்தாள் நகல் பெற, மொழிப்பாடங்களுக்கு, 550 ரூபாயும், இதர பாடங்களுக்கு, தலா, 275 ரூபாயும், கட்டணமாக செலுத்த வேண்டும்.மறுகூட்டல், விடைத்தாள் நகல் பெறுதல், இரண்டிற்கும், தனித்தனியே விண்ணப்பிக்க வேண்டும். பதிவு செய்ததும், பதிவு சீட்டை, பதிவிறக்கம் செய்ய வேண்டும். இந்த பதிவு சீட்டில் குறிப்பிட்டுள்ள மாவட்ட கல்வி அலுவலகத்தில், 8ம் தேதி, மாலை, 5:00 மணிக்குள், உரிய கட்டணத்தை, பணமாக செலுத்த வேண்டும். உரிய கட்டணத்தை செலுத்துபவர்களுக்கு மட்டும், விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டல் முடிவுகள் அறிவிக்கப்படும். இவ்வாறு, தேவராஜன் தெரிவித்துள்ளார்.

"காலை நேரத்தில் அலகுத்தேர்வு நடத்த வேண்டும்" - மாணவர்கள் கோரிக்கை

"பொதுத்தேர்வு மாணவருக்கு, மாலை நேர ஸ்பெஷல் கிளாஸ் நேரத்தில், அலகுத்தேர்வு நடத்துவதை மாற்றியமைத்து, முதல் வகுப்பு தொடங்கும் காலை நேரத்தில் தேர்வு நடத்த வேண்டும்" என மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பள்ளிக்கல்வித் துறையின், தேர்வுத்துறை இயக்குனரகத்தின் சார்பில், நடப்பு கல்வி ஆண்டுக்காக நடத்தப்படும் எஸ்.எஸ்.எல்.ஸி., மற்றும் ப்ளஸ் 2 பொதுத்தேர்வுக்கான, ஆயத்தப் பணிகள் துவங்கப்பட்டுள்ளது. காலாண்டு தேர்வு முடிவுற்ற நிலையில், அடுத்து டிசம்பர் மாதம் வரும் அரையாண்டு தேர்வு மற்றும் பொதுத் தேர்வுக்காக மாணவர்களை, ஆசிரியர்கள் தயார்படுத்தி வருகின்றனர்.
ஆண்டுதோறும் தேர்வுத்துறை சார்பில், மேல்நிலைக்கல்வி பொதுத் தேர்வு, இடைநிலைக் கல்வி விடுப்புச் சான்றிதழ் பொதுத் தேர்வு, தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வு உள்ளிட்டவை நடத்தப்படுகிறது. தேர்வர்களின் ஆள்மாறாட்டத்தை தடுக்க, தேர்வுக்கு முன்பாக, தேர்வர்களின் பெயர் பட்டியல், தேர்வு மைய அனுமதிச் சான்று, வருகைச் சான்று, பெயர், பிறந்த தேதி, பாலினம், ஜாதி, முகவரி, மதம், மாற்றுத்திறனாளி விவரம், பெற்றோர் பெயர், மொபைல் எண், படிப்பு குரூப், பாடம், உறுதிமொழி சான்றிதழ் ஆகியவை பெறப்பட்டது.
இதற்கிடையே, மாணவர்களை பொதுத் தேர்வுக்கு தயார்படுத்தும் பொருட்டு அலகு தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. ஒவ்வொரு பாடத்திலும் தேர்வு செய்யப்பட்ட இரண்டு பாடங்களுக்கு வினாக்கள் தயாரிக்கப்பட்டு, தேர்வுகள் நடத்தப்படும். பிரிண்ட் செய்யப்பட்ட வினாத்தாள் அனைத்தும் மாவட்ட கல்வி அலுவலகத்தில் இருந்து, பள்ளிகளுக்கு சப்ளை செய்யப்படும்.
ஒன்றரை மணி நேர அலகுத்தேர்வில், ஸ்பெஷல் கிளாஸ் எனப்படும் மாலை 4 மணி முதல் 5.30 மணி வரையிலான நேரத்தில் நடத்தப்படுகிறது. ப்ளஸ் 2 மற்றும் எஸ்.எஸ்.எல்.ஸி., மாணவருக்கு மட்டுமே, இந்த தேர்வு நடத்தப்படுவதால், மற்ற மாணவர்கள் வழக்கம் போல் மாலை 4.30 மணிக்கு வீட்டுக்குச் சென்று விடுகின்றனர்.
"ஸ்பெஷல் கிளாஸ்" நேரத்தில் தேர்வுகள் வைக்கப்படுவதால் முழுமையாக தேர்வில் கவனம் செலுத்தி, தேர்வு எழுத முடிவதில்லை என மாணவர்கள் கூறுகின்றனர். மேலும், மாவட்ட கல்வி அலுவலக அதிகாரிகள் தேர்வை கட்டாயம் நடத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளதால் ஒப்புக்காக தேர்வு நடத்த வேண்டியுள்ளதாக, ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில், நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 158 அரசு, அரசு உதவிபெறும், ஆதிதிராவிடர், உண்டு உறவிட உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில், முதல் அலகு தேர்வு முடிவுற்று இரண்டாம் கட்ட அலகுத்தேர்வு நடந்து கொண்டிருக்கிறது.
ஆறு கட்டமாக நடக்கும் அலகுத் தேர்வு நேரத்தில் மாற்றம் கொண்டு வரவேண்டும் என மாணவர்கள் தரப்பில் கூறப்படுகிறது. அதன்படி, முன்கூட்டியே அட்டவணை வெளியிடப்பட்டு, தேர்வுகள் நடத்தப்பட்டாலும், "ஸ்பெஷல் கிளாஸ்" நேரத்தில் தேர்வு நடத்தப்படுவதால், அலகுத்தேர்வுக்கு படித்த பாடங்களை அவசர அவசரமாக புரட்டிப் பார்க்க வேண்டியுள்ளது.
காலையில் இருந்து வெவ்வேறு பாடங்களை படித்துவிட்டு, மாலையில் அலகுத்தேர்வு நடத்துவதால் படிப்பில் முழு கவனம் செலுத்த முடியாத நிலை உள்ளது. எனவே, "காலையில் முதல் வகுப்பு துவங்கும் நேரத்தில், அலகுத்தேர்வுகள் நடத்தப்பட்டு, மாலையில் வழக்கம்போல், "ஸ்பெஷல் கிளாஸ்" எடுக்கலாம்" என மாணவர்கள் தெரிவிக்கின்றனர்.
"தேர்வுத்துறை அதிகாரிகளின் ஆலோசனைக்குப் பின், மாற்றியமைக்க ஏற்பாடு செய்யப்படும்" என கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஆசிரியர்களின் ஆர்வமின்மையால் அரசு பள்ளிகளில் பாழாகும் கம்ப்யூட்டர்கள்.... பீரோக்களில் பூட்டிவைப்பு

அரசு பள்ளிகளில், மாணவர்கள் பயன்பாட்டிற்காக பல லட்சம் ரூபாய் மதிப்பில் வழங்கிய கம்ப்யூட்டர்கள் லேப்-டாப்கள், ஆசிரியர்களின் ஆர்வமின்மையால் பயன்பாடின்றி முடங்கி உள்ளது.
பள்ளி மாணவர்கள் கல்வியை எளிமையாகவும், இனிமையாகவும் கற்றுக்கொள்ள மத்திய, மாநில அரசுகள், பல்வேறு வளர்ச்சி திட்டங்களை நடைமுறைப்படுத்துகிறது. ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான துவக்க மற்றும் நடுநிலை பள்ளிகளுக்கு அனைவருக்கும் கல்வி திட்டம் (எஸ்.எஸ்.ஏ.,), 9ம் வகுப்பு முதல் 10ம் வகுப்புகளுக்கு, அனைவருக்கும் இடைநிலை கல்வி (ஆர்.எம்.எஸ்.,) திட்டம் மூலம் பள்ளி வளர்ச்சிக்காக நிதி உதவி, உபகரணங்கள் வழங்குகிறது.
ஒவ்வொரு ஊராட்சி ஒன்றிய பள்ளிகளிலும், அரசு உயர்நிலைப் பள்ளிகளுக்கும் மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப 4 முதல் 6 கம்ப்யூட்டர்கள், பிரின்டர்கள், லேப் டாப், யு.பி.எஸ்., பாட சம்மந்தமான சி.டி.,க்கள் வழங்கப்பட்டுள்ளன. பாடங்களை கேட்பதை விட, கம்ப்யூட்டரில் பார்த்தால் மாணவர்கள் மனதில் ஆழமாக பதியும்.
புதிய சிந்தனைகள் தோன்றும் என்ற அடிப்படையில், வகுப்பறைகள் கம்ப்யூட்டர் மயமாகி வருகின்றன. இது தவிர ஒன்றியம் வாரியாக ஒரு பள்ளியை "ஸ்மார்ட் கிளாஸ்" ஆக மாற்ற பள்ளி ஒன்றுக்கு தலா ரூ.1.90 லட்சம் வழங்கப்படுகிறது.
கம்ப்யூட்டர்களை கையாள்வதற்கு ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சியையும் அரசு அளித்துள்ளது. மாணவர்களுக்கு வாரத்தில் இரு நாட்கள், இரு பாட வேளையில் கம்ப்யூட்டர் பயிற்சி அளிக்க வேண்டும் எனவும் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
இவ்வளவு வசதிகளையும் அரசு, கல்வித் துறைக்கு செய்து கொடுத்தும் ஒருசில அரசு பள்ளிகள், கம்ப்யூட்டர்களை மாணவர்கள் பயன்பாட்டிற்கு கொடுக்காமல் பாதுகாப்பு என்ற பெயரில் பீரோகள், தலைமை ஆசிரியர்கள் அறையில் முடக்கி வைத்துள்ளன. நான்கு ஆண்டுகளாக வழங்கப்பட்ட கம்ப்யூட்டர், யு.பி.எஸ்., பிரின்டர் போன்ற விலை உயர்ந்த பொருட்களை, பயன்படுத்தபடாததால் பேட்டரி சார்ஜ் இறங்கியும் மென்பொருட்கள் தூசி படித்து பழுதாகி பயன்பாடின்றி உள்ளது.
"மாணவர்கள், கம்ப்யூட்டர்களை பழுதாக்கி, சேதப்படுத்தி விட்டால் சம்மந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர்தான் பொறுப்பேற்க வேண்டும். எனவே, அரசு வழங்கிய பொருளை பாதுகாக்கிறோம்" என கூறி திட்ட பயனை மாணவர்கள் அனுபவிக்க விடாமல் முடக்கி வைக்கின்றனர். அதே நேரத்தில் 50 சதவீத பள்ளிகளில், கம்ப்யூட்டர்களை மாணவர்கள் பயன்படுத்திடவும் லேப் டாப் மூலம் கற்பித்தல் செய்கின்றனர்.
கம்ப்யூட்டர்கள் முடக்கப்பட்ட பள்ளிகளை கண்டறிந்து அதை மாணவர்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சிவகாசி மைக்கேல், "மாணவர்களின் கல்வித்தரத்தை உயர்த்த, மத்திய, மாநில அரசுகள், ஆரம்ப பள்ளி முதல் கம்ப்யூட்டர் கல்வியினை வழங்க நடவடிக்கை எடுக்கின்றன. அதற்கான நிதி ஒதுக்கி, கம்ப்யூட்டர்களையும் வழங்குகிறது. தனியார் பள்ளிகளில் கிடைக்காத கூடுதல் வசதிகள், அரசு பள்ளிகளுக்கு கிடைத்துள்ளது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி, மாணவர்களுக்கு கம்ப்யூட்டர் கல்வி வழங்க, ஆசிரியர்கள் ஆர்வம் காட்ட வேண்டும்.
பல லட்சம் ரூபாய் மதிப்பிலான கம்ப்யூட்டர்கள் பழுதாகி விடாமல், அதை பயன்பாட்டுக்கு கொண்டு வந்து, மாணவர்களுக்கு பயனுள்ளதாக மாற்ற, கல்வித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.
காரியாபட்டி அழகர்சாமி,  "அரசு பள்ளிகளில், ஏழை எளிய மாணவர்கள் படித்து வருகின்றனர். இவர்களும் மற்ற மாணவர்களைப் போல் அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்க வேண்டும் என்ற நோக்கத்திற்காக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வரிசையில், மாணவர்களுக்கு கம்ப்யூட்டர் மிகவும் அவசியமான ஒன்றாக உள்ளது.
அரசு பள்ளி மாணவர்களுக்கு கம்ப்யூட்டர் பயிற்சி அளிக்க, கம்ப்யூட்டர் வழங்கப்பட்டது. பெரும்பாலான பள்ளிகளில், ஆசிரியர்கள் இல்லாததால் கம்ப்யூட்டர் காட்சிப் பொருளாகவே உள்ளன. பயனுள்ள திட்டமாக இருந்தும், அரசு நிதி வீணாகி வருகிறது. இதுபோன்ற பள்ளிகளில், ஆசிரியர்களை நியமித்து கம்ப்யூட்டர் பயன்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.
வத்திராயிருப்பு பாண்டியன், "கம்ப்யூட்டர் கல்வியை பயிற்றுவிக்க, பள்ளிகளில் ஆசிரியர் கிடையாது. கம்ப்யூட்டர் கல்விக்கென தனியே ஒவ்வொரு பள்ளிக்கும் ஆசிரியர் நியமித்து, கம்ப்யூட்டர் மூலமாக பாடம் நடத்தி, மாணவர்களை செய்யச் சொன்னால் மட்டுமே, அரசின் நோக்கம் நிறைவேறும்" என்றார்.
ஸ்ரீவில்லிபுத்தூர் சுரேஷ் ரத்தினகுமார், "மாணவர்களுக்கு கற்பிக்க வழங்கப்பட்ட கம்ப்யூட்டர்கள், பல பள்ளிகளில் செயல்படுத்தப்படாமல், முடங்கியே கிடக்கிறது. அங்குள்ள ஆசிரியர்களுக்கு, கம்ப்யூட்டர் குறித்து போதிய பயிற்சி இல்லாமல் உள்ளது. மேலும் பல அரசு பள்ளிகளில், ஆசிரியர்கள் இல்லாத நிலையும் உள்ளது.
அரசின் திட்டமே வீணடிக்கப்பட்டு, நிதியும் பாழடிக்கப்பட்டு வருகிறது. இதை தவிர்க்க, ஆசிரியர்களுக்கு போதிய பயிற்சி வழங்கி, மாணவர்களுக்கு கம்ப்யூட்டர் மூலம் கற்பிக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.
விருதுநகர் அனைவருக்கும் கல்வி திட்டம் கூடுதல் முதன்மை கல்வி அலுவலர் சுவாமிநாதன், "ஒவ்வொரு அரசு பள்ளியிலும், குறைந்தபட்சம் ஒரு ஆசிரியருக்கு, கம்ப்யூட்டர் பயிற்சி வழங்கி, பாடம் நடத்த வலியுறுத்துகிறோம். இதை மாவட்ட அளவில், குழு அமைத்து கண்காணிக்கிறோம்.
வகுப்பறையில் கம்ப்யூட்டர் பயன்பாடு குறித்து, உதவி கல்வி அலுவலர், சூப்பர்வைசர்களிடம் அறிக்கை பெறுகிறோம். கம்ப்யூட்டர் பழுது ஆவதுபற்றி தலைமை ஆசிரியர்கள் கவலைப்பட வேண்டாம். ஏனென்றால் அதை பராமரிக்க, ஒவ்வொரு பள்ளிக்கும் வழங்கப்படும் பராமரிப்பு மானியத்தில், பழுதினை சரி செய்து கொள்ளலாம்.
இதற்கு கிராம கல்வி குழு, பெற்றோர் சங்கம் ஒத்துழைப்பு வழங்குகின்றன. அனைத்து பள்ளிகளிலும், கம்ப்யூட்டர் பயன்பாடு இருக்க வேண்டும். குறிப்பிட்டு புகார் வந்தால், உடன் நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

பள்ளிகளுக்கு இன்று விடுமுறையா?


தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இன்று மத்திய அரசு விடுமுறை அறிவித்துள்ளது. இதையடுத்து, தமிழகத்தில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறையா என்பதில் மாணவர்கள் குழப்பம் அடைந்துள்ளனர். தீபாவளி பண்டிகை சனிக்கிழமை கொண்டாடப்படுகிறது. இதையடுத்து தமிழகத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல தனியார் நிறுவனங்களும் 2ம் தேதி விடுமுறை அறிவித்துள்ளன. 

ஆனால், அமாவாசை இணைந்து வரும் 3ம் தேதிதான் தீபாவளி என்று வட மாநில காலண்டர்களில் உள்ளது. அதன்படி மத்திய அரசு நிறுவனங்கள், மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் பள்ளிகளுக்கு விடுமுறை என்று அறிவித் துள்ளது. 3ம் தேதி ஞாயிற்றுக் கிழமை என்பதால் முன்னதாக இன்று வெள்ளி மற்றும் சனிக்கிழமை என 2 நாட்களுக்கு சேர்த்து விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதை பின்பற்றி தமிழகத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறையா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. 

கல்வி துறை அதிகாரிகள் கூறியதாவது: தீபாவளி பண்டிகை நாளான 2ம் தேதி அரசு விடுமுறை அறிவித்துள்ளது. அந்த நாளில் பள்ளிகள் இயங்காது. இந்நிலையில், ஆண்டுக்கு 3 நாட்கள் உள்ளூர் விடுமுறை அறிவித்து கொள்ள அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அதிகாரம் உள்ளது. அதனால் உள்ளூர் விழாவை கருத்தில் கொண்டு  வெள்ளிக்கிழமை விடுமுறை அறிவிப்பது அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்களே எடுக்க வேண்டிய முடிவு. அரசோ, பள்ளி கல்வி துறையோ நவம்பர் 1ம் தேதி விடுமுறை அறிவிக்கவில்லை. எனவே 1ம் தேதி பள்ளிகள் இயங்கும் என் றனர். 

இந்நிலையில், வெளியூர் செல்வது, தீபாவளி பண்டிகைக்கான ஏற்பாடுகளை செய்வது, பண்டிகை பொருட்களை வாங்குவது போன்ற வேலைகள் பெற்றோருக்கு இருப்பதை கருத்தில் கொண்டு,  சில அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள் 1ம் தேதியும் சேர்த்து விடுமுறை அறிவித்துள்ளனர். இந்த விடுமுறை உள்ளூர் விடுமுறையாக கருதப்பட்டு, பிறகு வேறு ஒரு நாளில் இந்த விடுப்பு ஈடு செய்யப்படும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். அதேபோல தனியார் பள்ளிகளை நடத்துவோர் மேற்கண்ட காரணங்களை கருத்தில் கொண்டு இன்று விடுமுறை அறிவித்துள்ளன.

கடந்த ஆகஸ்டு மாதம் நடந்த ஆசிரியர் தகுதி தேர்வு முடிவை வெளியிட தடை விதிக்க மறுப்பு ஐகோர்ட்டு உத்தரவு

ஆசிரியர் தகுதி தேர்வின் முடிவினை வெளியிட தடை விதிக்க முடியாது என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சென்னை ஐகோர்ட்டில், வக்கீல் எம்.பழனிமுத்து தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:-
இடஒதுக்கீடு
தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் வெளியிட்ட அறிவிக்கையின் அடிப்படையில், தமிழகத்தில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, ஆசிரியர் தேர்வு வாரியம் தகுதி தேர்வு நடத்தி வருகிறது.
இந்த தகுதி தேர்வு, இடஒதுக்கீடு முறையை பின்பற்றாமல் நடத்தப்படுகிறது. ஆனால் ஆந்திரா உள்ளிட்ட 14 மாநிலங்களில், ஆசிரியர் தகுதி தேர்வில் இடஒதுக்கீடு பின்பற்றப்படுகிறது.
எனவே தமிழகத்திலும் இடஒதுக்கீட்டு முறையை பின்பற்றும்படி தமிழக அரசுக்கு உத்தரவிடவேண்டும். இவ்வாறு அதில் கூறியிருந்தார்.
தடை விதிக்க வேண்டும்
இந்த வழக்கிற்கு பதில் மனு தாக்கல் செய்த ஆசிரியர் தேர்வு வாரியம், ‘தகுதியான, திறமையான ஆசிரியர்களை தேர்வு செய்யவேண்டும் என்பதற்காக தகுதி தேர்வில் இடஒதுக்கீட்டு முறையை பின்பற்றப்படவில்லை. இதுகுறித்து தமிழக அரசு கொள்கை முடிவு எடுத்துள்ளது’ என்று கூறியிருந்தது.
இந்த நிலையில் இந்த வழக்கு தலைமை நீதிபதி ராஜேஷ்குமார் அக்ரவால், நீதிபதி எம்.சத்தியநாராயணன் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது, மனுதாரர் பழனிமுத்து ஆஜராகி, ‘கடந்த ஆகஸ்டு மாதம் நடந்து முடிந்த ஆசிரியர் தகுதி தேர்வின் விடைத்தாள்களை திருத்தும் பணி முடிந்துவிட்டது. தேர்வின் முடிவினை, ஆசிரியர் தேர்வு வாரியம் விரைவில் அறிவிக்க உள்ளது. இதற்கு தடை விதிக்க வேண்டும்’ என்று வாதம் செய்தார்.
இறுதி தீர்ப்பு
இதை ஏற்க மறுத்த நீதிபதிகள், ‘இந்த மனுக்கள் மீதான விசாரணையை நவம்பர் 18-ந்தேதிக்கு தள்ளிவைக்கிறோம். அதேநேரம், ஆசிரியர் தகுதி தேர்வு முடிவுகள், அதைத்தொடர்ந்து நடைபெறும் பணி நியமனம் ஆகியவை இந்த வழக்கின் இறுதி தீர்ப்புக்கு கட்டுப்பட்டது’ என்று உத்தரவிட்டனர்.

தொலைபேசி கட்டணத்தை மொபைல், ஐ-பாட் மூலம் செலுத்தலாம் பி.எஸ்.என்.எல். அறிவிப்பு

தொலைபேசி பில் கட்டணம் செலுத்த இனி மக்கள் வரிசையில் நிற்க வேண்டிய அவசியம் இல்லை. மொபைல் அல்லது ஐ-பாட் மூலமாகவே இனி கட்டணத்தை செலுத்தலாம் என்று பி.எஸ்.என்.எல். நிர்வாகம் அறிவித்திருக்கிறது.
இதுகுறித்து பி.எஸ்.என்.எல். நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
மொபைல் போன் மூலம்
தொலைபேசி பில் கட்டணம் செலுத்த இனி கம்யூட்டர் உதவியை நாட வேண்டியதில்லை.
வரிசையில் நின்று கட்டுவதோ தேவையில்லை. ஸ்மார்ட் மொபைல் அல்லது ஐ-பாட் ஆகியவை பயன்பாட்டில் இருந்தாலே போதுமானது.
இவற்றின் மூலமாக தங்களது தொலைபேசி கட்டணத்தை செலுத்தும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
முதலில் ‘‘மை பி.எஸ்.என்.எல். ஆப்’ எனும் அப்ளிகேஷன் சாப்ட்வேரை ஸ்மார்ட் மொபைல் கொண்டோ அல்லது ஐ-பாடில் டவுன்லோடு (பதிவிறக்கம்) செய்துகொள்ள வேண்டும். இதனை ‘‘ஆன்ட்ராய்டு அப் ஸ்டோர்ஸ்’’ அல்லது ‘‘விண்டோஸ் அப் ஸ்டோர்ஸ்’’ எனும் இணைய தளங்களிலிருந்து டவுன்லோடு செய்து கொள்ளலாம்.
எஸ்.எம்.எஸ். மூலம் தகவல்
இந்த வசதியின் மூலம் வாடிக்கையாளர்கள் தங்கள் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்க் மற்றும் பி.எஸ்.என்.எல்.-பிராண்ட் ட்ரஸ்ட் கார்டு மூலமாகவும் தங்களது பில் தொகையை செலுத்தலாம்.
இதில் மொபைல் போன் ரீ-சார்ஜ் செய்யும் வசதி மற்றும் சிறப்பு கட்டண வவுச்சர்களை ஆக்டிவேட் செய்யும் வசதியும் உள்ளன. பணம் செலுத்திய பின்னர் அதற்கான விவரம் எஸ்.எம்.எஸ். மூலம் வாடிக்கையாளர்களின் மொபைலுக்கு அனுப்பி வைக்கப்படும்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

ஒரு குடும்பத்துக்கு ஒரு சமையல் எரிவாயு இணைப்பு: இண்டேன் நிறுவனம் நடவடிக்கை சரியே ஐகோர்ட்டு உத்தரவு

ஒரு குடும்பத்துக்கு ஒரு சமையல் எரிவாயு இணைப்பு மட்டுமே வழங்கப்படும் என்று இண்டேன் நிறுவனம் எடுத்த முடிவு சரியானதுதான் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

இரண்டு இணைப்புகள்

நாகப்பட்டினம் மாவட்டம், திட்டச்சேரியைச்சேர்ந்தவர் ஆர்.முத்துகிருஷ்ணன். இவர், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில், ‘எனக்கு வழங்கப்பட்ட சமையல் எரியவாயு சிலிண்டர் வழங்குவதை இண்டேன் நிறுவனம் கடந்த 2011-ம் ஆண்டு முதல் நிறுத்திவிட்டது. எனவே எனக்கு சிலிண்டர் வழங்க உத்தரவிட வேண்டும்’ என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கில் இண்டேன் எரிவாயு நிறுவனம் தாக்கல் செய்த பதில் மனுவில், ‘முத்துகிருஷ்ணன் சென்னையில் ஒரு எரிவாயு இணைப்பு பெற்றுள்ளார். அவரது பெயரில் நாகப்பட்டினத்தில் மற்றொரு இணைப்பு பெற்றுள்ளது எங்களுக்கு தெரியவந்தது. அதனால், 2011-ம் ஆண்டு முதல் நாகப்பட்டினத்தில் உள்ள முகவரியில் வழங்கப்பட்ட இணைப்பு ரத்து செய்யப்பட்டது. ஒரு குடும்பத்துக்கு ஒரு எரிவாயு இணைப்புதான் வழங்க முடியும்’ என்று கூறியிருந்தது.

ஒரே வீட்டில்

இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, வழக்கை தள்ளுபடி செய்து கடந்த மார்ச் மாதம் உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து ஐகோர்ட்டில் முத்துகிருஷ்ணன் அப்பீல் செய்தார்.

அதில், ‘ஒரே வீட்டில் இரண்டு எரிவாயு இணைப்பு பெறுவதுதான் இண்டேன் நிறுவன விதிகளின்படி தவறு. ஆனால், நான் சென்னை, நாகப்பட்டினம் ஆகிய 2 வீடுகளில்தான் இணைப்பு பெற்றுள்ளேன்’ என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கை தலைமை நீதிபதி ராஜேஷ்குமார் அக்ரவால், நீதிபதி எம்.சத்தியநாராயணன் ஆகியோர் விசாரித்தனர்.

குடும்பம்

பின்னர் நீதிபதிகள் அளித்த தீர்ப்பில், ‘கணவன், மனைவி, அவர்களது குழந்தைகள், பெற்றோர் ஆகியோரை கொண்டதுதான் ஒரு குடும்பம் என்றும் இந்த குடும்பத்துக்குத்தான் சமையல் எரிவாயு இணைப்பு வழங்க முடியும் என்று திரவ பெட்ரோலியம் எரிவாயு (எல்.பி.ஜி.) சட்ட விதிகளில் கூறப்பட்டுள்ளது. எனவே மனுதாரரின் இணைப்பை ரத்து செய்தது சரிதான்’ என்று உத்தரவிட்டுள்ளனர்.

திருச்சி மாவட்டத்தில் ஒரு லட்சம் வளர் இளம்பெண்களுக்கு வாழ்க்கை முறை கல்வி கலெக்டர் ஜெயஸ்ரீ முரளிதரன் தகவல்

திருச்சி மாவட்டத்தில் ஒரு லட்சம் வளர் இளம்பெண்களுக்கு வாழ்க்கை கல்வி கற்றுக்கொடுக்கப்பட்டு வருவதாக கலெக்டர் ஜெயஸ்ரீ முரளிதரன் தெரிவித்தார்.

ஐம்பெரும் விழா

திருச்சி மாவட்டத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்தின் சார்பில் உலக தாய்ப்பால் வாரவிழா, தேசிய ஊட்டச்சத்து வாரவிழா, உலக கை கழுவும் தினம், உலக அயோடின் தினம் மற்றும் உலக உணவு தினம் ஆகிய ஐம்பெரும் விழா கி.ஆ.பெ.விசுவநாதம் அரசு மருத்துவக் கல்லூரி கூட்ட அரங்கில் நேற்று நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் ஜெயஸ்ரீ முரளிதரன் தலைமை தாங்கினார்.

இவ்விழாவில் ஆரோக்கியமான குழந்தைகள், மாறுவேடப் போட்டியில் கலந்து கொண்ட அங்கன்வாடி குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கி கலெக்டர் ஜெயஸ்ரீ முரளிதரன் பேசியதாவது:-

தாய்ப்பால் கொடுக்கும் பழக்கம் பெண்களிடையே குறைந்து வருகிறது. தாய்ப்பால் குழந்தையின் உரிமையாகும். எல்லாவிதமான சத்துக்களும் தாய்ப்பாலில் உள்ளது. மேலைநாடுகளில் பெண்களிடையே குழந்தை பிறந்த 6 மாத காலம் வரை தாய்ப்பால் கொடுக்க வேண்டும் என்ற விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. மூளை மற்றும் உடல் உறுப்புகள் வளர்ச்சிக்கு தாய்ப்பாலுக்கு இணையாக எதுவுமில்லை. இக்காலத்தில் நகர்ப்புறப் பெண்களிடையே சர்வசாதாரணமாக மார்பக புற்றுநோய் உண்டாகிறது. இதற்கு முக்கிய காரணம் வாழ்க்கை முறை மாற்றமும், தாய்ப்பால் கொடுக்காததும் ஆகும். தாய்ப்பால் அளிப்பதால் தாயின் ஆரோக்கியமும், குழந்தையின் ஆரோக்கியமும் நன்றாக இருக்கும்.

வளர் இளம்பெண்களுக்கு கல்வி

தமிழக அரசு வளர் இளம்பெண்களுக்கு வாழ்க்கைமுறைக் கல்வி கற்றுக்கொடுக்க அதிக நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. திருச்சி மாவட்டத்தில் ஒரு லட்சம் வளர் இளம் பெண்களுக்கு வாழ்க்கைக் கல்வி அளிக்கப்பட்டு வருகிறது. இக்கல்வியில் மாதவிடாய் காலத்தில் சுகாதாரத்தை பேணுவது குறித்தும், பால்வினை நோய், எச்.ஐ.வி. பாதுகாப்பு, ஒழுக்கம், கட்டுப்பாடு குறித்த விழிப்புணர்வு அளிக்கப்படுகிறது. இதுதவிர, விலையில்லா சானிடரி நாப்கின் மற்றும் ரத்த சோகையை தடுக்க இரும்புச்சத்து மாத்திரைகள் வழங்கப்படுகிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த விழாவில் அனைத்து அங்கன்வாடி மையங்களிலும் தோட்டங்கள் அமைக்கச் செடிகள் மற்றும் காய்கறி விதைகளும் வழங்கப்பட்டது. ஊட்டச்சத்து பற்றாக்குறை உள்ள 10 குழந்தைகளை தத்தெடுத்து 3 மாதகாலத்தில் அவர்களை ஆரோக்கியமான குழந்தைகளுக்கு இணையாக வளர தேவையான ஊட்டச்சத்து மற்றும் உடல் நல உதவிகள் வழங்கிய என்.ஐ.டி. பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது. 2011-12, 2012-13 ஆண்டு முடிய சிறப்பாகப் பணியாற்றிய அங்கன்வாடி பணியாளர்களுக்கும், தாமாக முன்வந்து அங்கன்வாடி மையங்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து கொடுத்த தன்னார்வலர்கள் 16 நபர்களுக்கும் பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்பட்டது.

மருத்துவக்கல்லூரி முதல்வர் டாக்டர் வள்ளிநாயகம், துணை முதல்வர் டாக்டர் எம்.ஏ. அலீம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தீபாவளி சிறப்பு நிகழ்ச்சிகள்

எரிவாயு மானியம் பெற ...

சத்துணவு அமைப்பாளர் பணிக்கான நேர்முகத்தேர்வில் குளறுபடி நடந்துள்ளதாக வழக்கு பணியிடத்தை நிரப்ப ஐகோர்ட்டு தடை

சத்துணவு அமைப்பாளர் பணிக்கான நேர்முக தேர்வில் குளறுபடி நடந்துள்ளதாக தொடர்ந்த வழக்கில் பணியிடத்தை நிரப்ப தடை விதித்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சத்துணவு அமைப்பாளர்
புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி அருகே உள்ள பொத்தையன்குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் சுமதி. இவர், மதுரை ஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறி இருந்ததாவது:–
புதுக்கோட்டை மாவட்டத்தில் காலியாக உள்ள சத்துணவு அமைப்பாளர் பணியிடங்களை நிரப்ப 10.10.2013 அன்று புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அறிவிப்பு வெளியிட்டார். அதன்படி மணமேல்குடி பஞ்சாயத்து யூனியன் நெம்மேலிவயல் தொடக்கப்பள்ளி சத்துணவு அமைப்பாளர் பணிக்கு நான் விண்ணப்பித்து இருந்தேன். இந்த நிலையில் அந்த பணிக்காக கடந்த 28–ந் தேதி நேர்முகத்தேர்வு நடந்துள்ளது. ஆனால், எனக்கு நேர்முக தேர்வுக்கான கடிதம் அனுப்பப்படவில்லை.
மீண்டும் நேர்முகத்தேர்வு
இதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்ட போது, நான் நிலையூர் தொடக்கப்பள்ளி சத்துணவு அமைப்பாளர் பணிக்கு விண்ணப்பித்துள்ளதாகவும், இதன்காரணமாகவே எனக்கு நேர்முகத் தேர்வுக்கான கடிதம் அனுப்பப்படவில்லை என்றும் தெரிவித்தனர்.
நான் அனுப்பிய விண்ணப்பத்தை வாங்கி பார்த்த போது, அதில் நெம்மேலிவயல் என்று நான் எழுதி இருந்ததை நிலையூர் என்று மாற்றி இருப்பது தெரியவந்தது. எனவே, மீண்டும் நேர்முக தேர்வு நடத்தி நேர்முக தேர்வில் நான் கலந்து கொள்ள வாய்ப்பு அளிக்க உத்தரவிட வேண்டும். அதுவரை நெம்மேலிவயல் பஞ்சாயத்து யூனியன் தொடக்கப்பள்ளியில் சத்துணவு அமைப்பாளர் பணியிடத்தை நிரப்ப தடை விதிக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டு இருந்தது.
நிரப்பக்கூடாது
இந்த மனு நீதிபதி டி.ராஜா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வக்கீல் எம்.சுரேஷ் ஆஜராகி வாதாடினார். மனுவை விசாரித்த நீதிபதி, இந்த வழக்கில் இறுதி தீர்ப்பு பிறப்பிக்கப்படும் வரை நெம்மேலிவயல் பஞ்சாயத்து யூனியன் தொடக்கப்பள்ளி சத்துணவு அமைப்பாளர் பணியிடத்தை நிரப்பக்கூடாது என்று உத்தரவிட்டார்.
மேலும், இந்த வழக்கு சம்பந்தமாக புதுக்கோட்டை கலெக்டர், மணமேல்குடி வட்டார வளர்ச்சி அதிகாரி ஆகியோர் பதில் அளிக்க நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டார்.

பிளஸ்–2 வகுப்புக்கு பாடத்திட்டம் மாற்றம் புதிய பாடப்புத்தகம் தயாரிக்கும் பணியில் 500 ஆசிரியர்கள்

பிளஸ்–2 வகுப்புக்கு பாடத்திட்டம் மாற்றப்பட்டுள்ளது. அந்த பாடத்திட்டத்தின் படி புதிய பாடப்புத்தகங்களை 500 ஆசிரியர்கள் கொண்ட குழுவினர் எழுத உள்ளனர்.
பிளஸ்–2 புதிய பாடத்திட்டம்
தமிழ்நாட்டில் அரசு மேல்நிலைப்பள்ளிகள், மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளிகளில் படிக்கும் அனைத்து மாணவ–மாணவிகளுக்கும் ஒரே பாடத்திட்டத்தில் ஒரே விதமான பாடப்புத்தகங்கள்தான் வழக்கத்தில் உள்ளன.
5 வருடங்களுக்கு ஒரு முறை பாடத்திட்டம் மாற்றப்படுவது வழக்கம். அதன்படி
இந்த காலத்திற்கு ஏற்றவகையில் புதிய தொழில்நுட்பத்தில், மாணவர்களுக்கு வேலைவாய்ப்புக்கு உறுதுணையாக இருக்கும் வகையில் புதிய பாடத்திட்டத்தை தயாரிக்க தமிழக அரசு முடிவு செய்தது. இதைத்தொடர்ந்து புதிய பாடத்திட்டம் தயாரிக்கப்பட்டது. தற்போது புதிய பாடத்திட்டம் தயாராக உள்ளது.
500 ஆசிரியர்கள் கொண்ட குழுவினர்
அதைத்தொடர்ந்து புதிய பாடத்திட்டத்திற்கு ஏற்றபடி பாடப்புத்தகங்கள் எழுத நிபுணர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். சென்னை ஐ.ஐ.டி. பேராசிரியர்கள், அண்ணாபல்கலைக்கழக பேராசிரியர்கள், சென்னை பல்கலைக்கழக பேராசிரியர்கள், கல்லூரி பேராசிரியர்கள், மேல்நிலைப்பள்ளி முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் சேர்த்து மொத்தம் 500 பேர் சேர்ந்து குழுவாக இந்த புத்தகங்களை எழுத உள்ளனர்.
தமிழ், ஆங்கிலம், கணிதம், தாவரவியல், விலங்கியல், வேதியியல், இயற்பியல், வணிகவியல், பொருளாதாரம், நர்சிங், விவசாயம் உள்ளிட்ட பாடங்களை அந்தந்த துறையில் நிபுணத்துவம் பெற்றவர்கள் எழுதுகின்றனர்.
2015–ம் ஆண்டு அமல்
இந்த பாடப்புத்தகம் இறுதி செய்யப்பட்டு பின்னர் அச்சடிக்கப்பட்டு மாணவர்களுக்கு கொடுக்கப்படும். மாணவர்களுக்கு பிளஸ்–1 புத்தகங்கள் 2015–2016ம் ஆண்டும், பிளஸ்–2 பாடப்புத்தகம் 2016–2017ம் ஆண்டும் அமல்படுத்தப்பட உள்ளது.

எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்–2 அக்டோபர் மாத தேர்வு முடிவு: மறு கூட்டலுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

பெயிலானவர்களுக்கும், பள்ளிக்கூடங்களில் படிக்காமல் தனியாக படித்தவர்களுக்கும் சேர்த்து அக்டோபர் மாதங்களில் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்–2 தேர்வு நடத்தப்படுவது உண்டு. அதன்படி செப்டம்பர் மாதம் நடைபெற்ற தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன.
விடைத்தாள் நகல் கோரியும், மறு கூட்டல் கோரி ஒவ்வொரு பாடத்திற்கும் தனித்தனியாக ஆன்லைனில் (www.tndge.in) 4–ந்தேதி முதல் விண்ணப்பிக்கவேண்டும்.
ஆன்லைனில் பதிவிறக்கம் செய்தபின்பு பதிவிறக்கம் செய்யப்பட்ட பதிவு சீட்டை கொண்டு பதிவு சீட்டில் குறிப்பிட்டுள்ள மாவட்ட கல்வி அலுவலர் அலுவலகத்தில் 8–ந்தேதி மாலை 5 மணிக்குள் பதிவு சீட்டில் குறிப்பிட்டுள்ள கட்டணத்தை நேரில் பணமாக செலுத்தவேண்டும்.
இந்த தகவலை அரசு தேர்வுகள் இயக்குனர் கு.தேவராஜன் தெரிவித்துள்ளார்.

இன்றைய (01.11.2013) தினமணியின் முக்கிய செய்திகள்



இன்றைய (01.11.2013) தினமலரின் முக்கிய செய்திகள்