Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Wednesday, 1 January 2014

அரசு பள்ளி மாணவர்களுக்கு 1.58 கோடி பாட புத்தகங்கள்

 ''அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவ, மாணவியருக்கு, மூன்றாம் பருவத்திற்காக, 1.58 கோடி பாட புத்தகங்கள் அச்சிடப்பட்டு, மாநிலம் முழுவதும் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன,'' என, பாடநூல் கழக நிர்வாக இயக்குனர், மகேஸ்வரன் தெரிவித்து உள்ளார்.
அவரது அறிவிப்பு:




ஒன்று முதல், 9ம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவியருக்கு, மூன்றாம் பருவ பாட புத்தகங்கள் அச்சிடப்பட்டு, அனுப்பப்பட்டுள்ளன. அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளி களில் பயிலும், 89 லட்சம் மாணவர்களுக்கு, 1.58 கோடி புத்தகங்கள் அச்சிடப்பட்டு, மாநிலம் முழுவதும் அனுப்பப்பட்டன. இந்த புத்தகங்கள், பள்ளி களுக்கு, வினியோகம் செய்யும் பணி நடந்து வருகிறது. தனியார் பள்ளிகளில் பயிலும், 46 லட்சம் மாணவ, மாணவியருக்காக, 81.53 லட்சம் புத்தகங்கள் அச்சிடப்பட்டு, மாநிலம் முழுவதும் உள்ள, 22 பாடநூல் கழக குடோன்களுக்கு அனுப்பப்பட்டு உள்ளன. கடந்த, 26ம் தேதியில் இருந்து, தனியார் பள்ளிகளுக்கு, புத்தகங்கள் விற்பனையாகி வருகின்றன. புத்தக விற்பனை குறித்து, ஏதேனும் கருத்து தெரிவிக்க விரும்பினால், mdtntbc07@hotmail.com என்ற, இ - மெயில் முகவரி யில் தெரிவிக்கலாம். இவ்வாறு, மகேஸ்வரன் தெரிவித்து உள்ளார்.

வழக்குகளை விரைந்து முடிக்க பள்ளிக் கல்வித் துறை சுறுசுறுப்பு!

மலை போல் குவிந்து வரும் வழக்குகளின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தவும், இருக்கும் வழக்குகளை, விரைந்து முடிப்பதற்கு ஏதுவாகவும், மண்டல வாரியாக, "லீகல் செல்' அமைக்க, பள்ளி கல்வித்துறை, திட்டமிட்டு உள்ளது. சம்பளம், பதவி உயர்வு, நிலுவை தொகை, சம்பள உயர்வு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக, அரசு துறைகள், உடனுக்குடன் நடவடிக்கை எடுக்காத போது, பாதிக்கப்படும் ஊழியர்கள், கோர்ட்டை அணுகுகின்றனர். இதுபோன்ற வழக்குகள், அனைத்து துறைகளிலும் இருக்கிறது என்றாலும், பள்ளி கல்வித்துறையில், மிக அதிகம். ஒரு கோடி மாணவர், 5.5 லட்சம் ஆசிரியர், ஆசிரியர் அல்லாத பணியாளர் பல லட்சம் என, பெரிய துறையாக, பள்ளி கல்வித்துறை இருப்பதால், பிரச்னைகளும் அதிகம். தொடக்க கல்வித்துறை, பள்ளி கல்வித்துறை, தேர்வுத்துறை, ஆசிரியர் தேர்வு வாரியம் என, பல துறைகள், பள்ளிகல்வி அமைச்சகத்தின் கீழ், இயங்கி வருகின்றன. 
பல்வேறு பிரச்னைகள் காரணமாக, ஆசிரியரும், ஆசிரியர் அல்லாத பணியாளர்களும், கோர்ட்டில் வழக்கு தொடர்கின்றனர். தற்போதைய நிலவரப்படி, தொடக்க கல்வித்துறையில், 1,000 வழக்குகளும், பள்ளி கல்வித்துறையில், 4,000 வழக்குகளும், நிலுவையில் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த வழக்கு விவகாரங்களை கையாள்வதே, பள்ளி கல்வித்துறைக்கு, பெரும் தலைவலியாக இருக்கிறது. அதிகாரிகளில், பலர், தினமும், கோர்ட்டுக்கு செல்வதே, முக்கிய வேலையாக இருக்கிறது. இதனால், அதிகாரிகளை, அலுவலகத்தில் பார்க்க முடியாமல், துறை ஊழியர்கள், திண்டாடுகின்றனர். வழக்குகளை, விரைந்து முடிக்க வேண்டும் என்பதற்காக, உயர் அதிகாரிகள், மாதத்திற்கு, 15 முறையாவது, ஆய்வு கூட்டங்களை நடத்துகின்றனர். இதற்காக, மாநிலம் முழுவதிலும் இருந்து, அதிகாரிகள், முக்கிய ஊழியர்கள், சென்னைக்கு வருகின்றனர். ஆனாலும், வழக்குகள் எண்ணிக்கை குறைந்தபாடில்லை. இந்நிலையில், மண்டல வாரியாக, "லீகல் செல்' அமைப்பை ஏற்படுத்தி, வழக்குகளை விரைந்து முடிக்க, பள்ளி கல்வித்துறை, திட்டமிட்டு உள்ளது. இதற்கென தனி அலுவலர், பணியாளரை நியமனம் செய்ய வேண்டும் எனில், அரசின் அனுமதியை பெற வேண்டும். மேலும், அதிக செலவும் ஏற்படும். இதனால், அரசின் அனுமதி கிடைப்பதில் சிக்கல் ஏற்படும் என்பதை உணர்ந்து, புதிய திட்டத்தை செயல்படுத்த, கல்வித்துறை, ஆலோசித்து வருகிறது. அதன்படி, கல்வித்துறையில் பணிபுரியும் ஆசிரியர், ஆசிரியர் அல்லாத பணியாளர்களில், சட்டம் படித்தவர் யார், யார் என்ற விவரங்களை சேகரிக்க, கல்வித்துறை, முடிவு செய்துள்ளது. இந்த பட்டியலை, மாவட்ட வாரியாக, விரைவில் பெற்று, அவர்களை, மாவட்ட தலைநகரங்களுக்கு, இடமாற்றம் செய்து, வழக்கு விவகாரங்களை கையாளும் பணியை, கல்வித்துறை, வழங்க உள்ளது. 

மேலும், மாவட்டங்களில் நடக்கும் குறை தீர்ப்பு கூட்டங்களை, பெயரளவிற்கு நடத்தாமல், முழு ஈடுபாட்டுடன் நடத்தி, முடிந்த அளவிற்கு, பிரச்னைகளை, உடனுக்குடன் தீர்க்க வேண்டும் எனவும், மாவட்ட அதிகாரிகளை, உயர் அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர். இது போன்ற நடவடிக்கைகள் மூலம், வரும் ஆண்டுகளில், வழக்குகள் எண்ணிக்கையை கட்டுப்படுத்த முடியும் என, கல்வித்துறை கருதுகிறது.


இது குறித்து, பள்ளி கல்வித்துறை, நிர்வாக அலுவலர் சங்கத்தின், மாநில அமைப்பு செயலர், சீனிவாசன் கூறியதாவது: முதன்மை கல்வி அலுவலகங்களில், இளநிலை உதவியாளரை, வழக்குகளுக்கு, பதில் மனுவை தயாரிக்க, அதிகாரிகள் உத்தரவிடுகின்றனர். இளநிலை உதவியாளர் பணி, 10ம் வகுப்பு நிலையில் ஆனது. இவர் எப்படி, வழக்கை புரிந்து, பதில் மனுவை தயாரிக்க முடியும்? இதனால், பல வழக்குகளுக்கு, பதில் மனுவை தாக்கல் செய்யாமல், அமைதியாக இருந்துவிடுகின்றனர். இது, ஒரு கட்டத்தில், கோர்ட் அவமதிப்பு வழக்கில், கோர்ட் கண்டனத்திற்கு, ஆளாக நேரிடுகிறது. அப்போது தான், உயர் அதிகாரிகளுக்கும், விஷயம் தெரிய வருகிறது. கோர்ட்டுகளில், என்ன வழக்கு வருகிறது, எந்த நிலையில் உள்ளது, பதில் மனு, எப்போது தாக்கல் செய்ய வேண்டும் என்ற விவரங்களை தெரிந்து, உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க வசதியாக, மாவட்ட வாரியாக, சட்ட அலுவலரை நியமனம் செய்ய வேண்டும் என, நாங்கள் கோரிக்கை வைத்தோம். சட்ட அலுவலரை நியமனம் செய்யாவிட்டாலும், சட்டம் தெரிந்த ஆசிரியர், அலுவலரைக் கொண்டு, மண்டல வாரியாக, "லீகல் செல்' அமைக்க, கல்வித்துறை, நடவடிக்கை எடுத்து வருவது, வரவேற்கத்தக்கது.

மாற்றுத்திறனாளி பி.எட்.,பட்டதாரிகளுக்கு சிறப்பு ஆசிரியர் தகுதித்தேர்வு பயிற்சி மையங்கள்: மாவட்ட வாரியாக அமைக்க உத்தரவு

பணியில் இல்லாத மாற்றுத்திறனாளி பி.எட்.,பட்டதாரிகளுக்கு, சிறப்பு ஆசிரியர் தகுதி தேர்விற்கான பயிற்சியளிக்க, அனைத்து மாவட்டங்களிலும் மையம் அமைக்கும்படி, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.
அவரது உத்தரவு: பி.எட்., முடித்து பணியில் இல்லாத மாற்றுத்திறனாளிகளுக்கு, எதிளில் பணி கிடைக்க ஏதுவாக, தனியாக ஒரு சிறப்பு ஆசிரியர் தகுதித்தேர்வு (டி.இ.டி.), ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்படும். இத்தேர்விற்கு விண்ணப்பிக்கும் பார்வையற்றவர்களுக்கு, மாவட்டங்களில் உள்ள, மாவட்ட ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவனம் வாயிலாக, சிறப்பு பயிற்சி வழங்க, பள்ளிக்கல்வித்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என, முதல்வர் ஜெ.,தலைமையில் நடந்த, மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை குறித்த ஆலோசனைக்கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.

அதன்படி, அனைத்து மாவட்டங்களிலும், நகரின் மையப்பகுதியில் எளிதில் அணுகும் வண்ணம் மையத்தை, மாவட்ட ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவனம் முதல்வர்கள், தேர்ந்தெடுக்க வேண்டும். அங்கு, பார்வையற்றோர் பயன்படுத்த ஏதுவாக, குடிநீர், கழிப்பறை வசதி இருக்க வேண்டும். தலா 50 நபர்களைக் கொண்டு பயிற்சி நடத்துவதற்குரிய 2 அறைகள் இருக்க வேண்டும். ஈரோடு, விழுப்பும், வேலூர், கோவை, சேலம், மதுரை, நெல்லை போன்ற பெரிய மாவட்டங்களில், 3 அறைகள் (150 பேர்) இருக்குமாறு மையத்தை தேர்ந்தெடுக்கலாம். மையத்தை தேர்வு செய்வதற்கும், பயிற்சி நடத்துவதற்கும் முதன்மைக்கல்வி அலுவலர்கள் ஒத்துழைக்க வேண்டும். அம்மையத்தின் பெயரை முதல்வர்கள், ஜன.,6 க்குள், மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்திற்கு, 73730 03351 என்ற மொபைல் எண்ணில், உதவி பேராசிரியரைத்தொடர்பு கொண்டு தெரிவிக்க வேண்டும். பயிற்சி காலம் 40 நாட்கள். பயிற்சிக்குரிய கால அட்டவணை அனுப்பி வைக்கப்படும். பயிற்சிக்குரிய கருத்தாளர்களை தேர்ந்தெடுப்பது நிறுவன முதல்வர்களின் பொறுப்பு. பயிற்சி நடத்துவதற்கான செலவின விபரங்கள் அனுப்பி வைக்கப்படும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது. இதன் நகல், அனைத்து மாவட்ட ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவன முதல்வர்கள், முதன்மைக்கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

பொறுப்பாளர் நியமனத்தில் வருது மாற்றம்: தேர்வுத்துறை 'ரொம்ப ஸ்டிரிக்ட்'

 பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வின் போது, தேர்வு மையங்களில் முக்கிய பொறுப்புகளுக்கு பணிபுரிய வேண்டிய ஆசிரியர்களை, இனி, இயக்குனரே தேர்வு செய்வார். தேர்வுத் துறையில், புதிய விடைத்தாள் அறிமுகம், வினாத்தாள் வினியோகத்தில் மாற்றம், 400 மாணவர்களுக்கு ஓர் தேர்வு மையம் என, புதிய மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. தற்போது மேலும் ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் தேர்வு மைங்களுக்கான துறை அலுவலர்கள், தலைமை தேர்வாளர்கள், கூர்ந்தாய்வாளர்கள், உதவித் தேர்வாளர்கள், அறைக் கண்காணிப்பாளர்கள் என, முக்கிய பொறுப்புக்களுக்கான ஆசிரியர்களை, அந்தந்த மாவட்ட கல்வி அலுவலர்கள் தேர்வு செய்வர். இந்த ஆண்டு முதல், இந்நடைமுறை மாற்றப்பட்டுள்ளது. இதன்படி, பிளஸ் 2 தேர்வுக்கு, பணிமூப்பு அடிப்படையில் முதுகலை பட்டதாரி ஆசிரியர்களும்; பத்தாம் வகுப்பிற்கு பட்டதாரி ஆசிரியர் பட்டியலும் தயாரித்து, நேரடியாக இயக்குனருக்கு அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது. இதேபோல், தலைமை தேர்வாளர்கள், கூர்ந்தாய்வாளர்கள், உதவித் தேர்வாளர்கள், அறைக் கண்காணிப்பாளர்கள், பறக்கும் படையில் இடம் பெறுவோர் பட்டியலை, இயக்குனரே முடிவு செய்வார்.
இதுகுறித்து, கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: பொதுத் தேர்வுகளில், தேர்வு மையங்களை ஒட்டுமொத்தமாக கண்காணிப்பது, வினாத்தாள் வினியோகம் உட்பட பணிகளை, துறை அலுவலர்கள் மேற்கொள்வர். இவர்கள் உட்பட முக்கிய பொறுப்புக்கான ஆசிரியர்களை, இனி, இயக்குனர்தான் தேர்வு செய்வார். இதனால், ஒரு சில கல்வி அதிகாரிகளுக்கும் பள்ளி நிர்வாகங்களுக்கும் இடையே நீடிக்கும் 'இணக்கமான உறவு' முடிவுக்கு வரும். விதிமீறல் தவிர்க்கப்படும். இவ்வாறு கூறினர்.

Tuesday, 31 December 2013

அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்


போலி சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்த அண்ணாமலைப் பல்கலைக்கழக தனிஅதிகாரி பணிநீக்கம்

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பிஇ படித்ததாக போலி சான்றிதழ் கொடுத்து தனிஅதிகாரியாக பணியில் சேர்ந்த செந்தில்குமார் (26) என்பவரது பணிநியமன உத்தரவு ரத்து செய்யப்பட்டு பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
கடலூர் மாவட்டம் திட்டக்குடியைச் சேர்ந்த செந்தில்குமார். இவர் கடந்த 2004-2008ல் அண்ணா பல்கலைக்கழகத்தில் பிஇ எலக்டிரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன் பட்டப்படிப்பு படித்ததாக போலி சான்றிதழ் பெற்றுள்ளார். பின்னர் 2011-ம் ஆண்டு அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பிஇ போலி சான்றிதழை கொடுத்து திருவண்ணாமலை படிப்பு மையத்தில் தனி அதிகாரியாக பணியில் சேர்ந்துள்ளார்.
தற்போது பல்கலைக்கழகம் அரசு கட்டுப்பாட்டின் கீழ் வந்த பின்னர் நிர்வாகி ஷிவ்தாஸ்மீனா உத்தரவின் பேரில் அனைத்து ஆசிரியர்கள், ஊழியர்கள் சான்றிதழ்கள் உறுதித்தன்மை சான்று பெறும் பணியில் நடைபெற்று வருகிறது. இதில் மேற்கண்ட செந்தில்குமாரின் சான்றிதழ் போலியானது என தெரியவந்ததை அடுத்து பல்கலைக்கழக பதிவாளர் என்.பஞ்சநதம் அவரது பணி நியமன உத்தரவை ரத்து செய்து, பணி நீக்கம் செய்து ஆணை பிறப்பித்துள்ளார்.

ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கும் மருத்துவ காப்பீட்டுத் திட்டம்

தமிழகத்தில் ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
அரசாணை விவரம்:-  பேரவையில் 2013-14-ஆம் ஆண்டு பட்ஜெட் தாக்கல் செய்தபோது, அரசு ஊழியர்களுக்காக தனியாக உடல்நல காப்பீட்டு திட்டம் செயல்படுத்தப்படும் என்று நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தார். இந்த திட்டத்தை ஓய்வூதியதாரர் மற்றும் அவரது வாழ்க்கைத்துணை அல்லது குடும்ப ஓய்வூதியதாரர் ஆகியோருக்கும் விரிவுபடுத்த அரசு முடிவு செய்துள்ளது. இந்தப் புதிய காப்பீட்டு திட்டம் தொடங்கப்பட்டு 4 ஆண்டுகள் வரை ரூ.2 லட்சம் அளவுக்கு ஓய்வூதியதாரர் மற்றும் அவரது வாழ்க்கைத் துணை அல்லது குடும்ப ஓய்வூதியதாரர் பயனடையலாம். ஒரு குடும்பத்தில் இரண்டு அரசு ஊழியர் இருந்தால், அதில் ஒருவர் மட்டும் இந்த திட்டத்துக்கான பிரிமியம் செலுத்தினால் போதுமானது. இந்தத் திட்டம், அரசு கருவூலம் மற்றும் கணக்கு ஆணையர் அலுவலகம் மூலம் அமலாக்கப்படும். காப்பீட்டு நிறுவனத்தை தேர்வு செய்த பிறகு, இந்த திட்டத்தில் ஓய்வூதியதாரரின் பங்களிப்பு எவ்வளவு என்பது குறித்து முடிவு செய்யப்படும் என அரசாணையில் கூறப்பட்டுள்ளது.

அரசாணையைக் காண Pls Click Here

ஆசிரியர்கள் நியமனம்: கேள்வித்தாள் வெளியானதால் தேர்வு ரத்து

டெல்லியில் உள்ள மாநகராட்சி பள்ளிகளில் 1 லட்சம் ஆசிரியர்களை நியமிப்பதற்கான எழுத்துத்தேர்வு நேற்று நடைபெற்றது. இதில் லட்சக்கணக்கான பேர் கலந்து கொண்டு தேர்வு எழுதினார்கள். ஆனால் தேர்வுக்கு முன்பே, கேள்வித்தாள் ரகசியமாக வெளியானது தெரிய வந்தது.
இதைத்தொடர்ந்து, ஆசிரியர் நியமன தேர்வை ரத்து செய்து டெல்லி மாநில கல்வி மந்திரி மனிஷ் சிசோடியா உத்தரவிட்டார். மறு தேர்வு இன்னும் ஒரு மாதத்தில் நடைபெறும் என்று தெரிகிறது.

திருச்சி மாநகராட்சியால் நடத்தப்படும் அனைத்து பள்ளிகளிலும் சூரிய சக்தி மூலம் மின்சாரம் தயாரிக்கும் வசதி

திருச்சி மாநகராட்சியால் நடத்தப்படும் அனைத்து பள்ளிகளிலும் சூரிய சக்தி மின்சார தயாரிப்பு வசதிகளை அமைக்கவேண்டும் என கல்வி நிலைக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கல்விக்குழு கூட்டம்
திருச்சி மாநகராட்சியின் கல்வி நிலைக்குழு கூட்டம் நேற்று மாநகராட்சி மைய அலுவலகத்தில் நடைபெற்றது. கல்வி குழு தலைவர் என்.எஸ். பூபேந்திரன் தலைமை தாங்கினார். நகரப்பொறியாளர் சந்திரன் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:–
மாநகராட்சியால் நடத்தப்படும் 79 பள்ளிகளிலும் சூரிய சக்தி மூலம் மின்சாரம் தயாரிக்கும் வசதிகளை (சோலார் பேனல்) அமைப்பது, அனைத்து பள்ளிகளிலும் தேவையான தீயணைப்பு கருவிகள்பொருத்த நடவடிக்கை எடுப்பது, இடவசதிக்கேற்ப அனைத்து பள்ளிகளிலும் பசுமைத்தளம் அமைப்பது, அனைத்து பள்ளிகளிலும் உள்ள கழிவறைகளை பராமரிக்கும் பணியை தனியாரிடம் ஒப்படைப்பது, பள்ளிகளுக்கு பகல் மற்றும் இரவு நேர காவலர்களை தனித்தனியாக நியமிப்பது, புதிய தளவாட பொருட்கள் வாங்குவது, தேவையான அளவு விளையாட்டு கருவிகளை வாங்குவது, நவீன கரும்பலகைகள் அமைப்பது, ரூ.8¾ கோடியில் வளர்ச்சி பணிகளை மேற்கொள்வது.
மேற்கண்டவை உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கும் உடல்நல காப்பீடு அரசாணை வெளியீடு

தமிழ்நாடு நிதித்துறை செயலாளர் முதன்மைச்செயலாளர் கே.சண்முகம் வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:–
தமிழ்நாடு சட்டசபையில் 2013–14–ம் ஆண்டு பட்ஜெட் தாக்கல் செய்தபோது, அரசு ஊழியர்களுக்காக தனியாக உடல்நல காப்பீட்டு திட்டம் செயல்படுத்தப்படும் என்று நிதியமைச்சர் அறிவித்தார். இந்த திட்டத்தை ஓய்வூதியதாரர் மற்றும் அவரது வாழ்க்கைத்துணை அல்லது குடும்ப ஓய்வூதியதாரர் ஆகியோருக்கும் விரிவுபடுத்த அரசு முடிவு செய்துள்ளது.
இதற்கான சில புதிய வரைமுறைகளை அரசு வகுத்தளிக்கிறது. அதன்படி, இந்த புதிய காப்பீட்டு திட்டம் தொடங்கப்பட்டு 4 ஆண்டுகள் வரை ரூ.2 லட்சம் அளவுக்கு ஓய்வூதியதாரர் மற்றும் அவரது வாழ்க்கைத்துணை அல்லது குடும்ப ஓய்வூதியதாரர் பயனடையலாம். ஒரு குடும்பத்தில் இரண்டு அரசு ஊழியர் இருந்தால், அதில் ஒருவர் மட்டும் இந்த திட்டத்துக்கான பிரிமியம் செலுத்தினால் போதுமானது.
இந்த திட்டம், அரசு கருவூலம் மற்றும் அக்கவுண்ட் ஆணையர் அலுவலகம் மூலம் அமலாக்கப்படும். காப்பீட்டு நிறுவனத்தை தேர்வு செய்த பிறகு, இந்த திட்டத்தில் ஓய்வூதியதாரரின் பங்களிப்பு எவ்வளவு என்பது குறித்து முடிவு செய்யப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மூன்றாம் பருவப் புத்தகங்கள்: தனியார் பள்ளிகளுக்கு விற்பனை

தனியார் பள்ளி மாணவர்களுக்கான மூன்றாம் பருவப் புத்தகங்கள் தமிழ்நாட்டுப் பாடநூல் கழக வட்டார அலுவலகங்களில் விற்பனை செய்யப்படுவதாக அந்த கழகத்தின் நிர்வாக இயக்குநர் சி.என்.மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை மூன்றாம் பருவத்துக்கான வகுப்புகள் ஜனவரி 3-ஆம் தேதி தொடங்க உள்ளன. வகுப்பு தொடங்கும் முதல் நாளிலேயே அனைத்து மாணவர்களுக்கும் புத்தகங்களை வழங்குவதற்காக பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்தப் பணிகள் தொடர்பாக அவர் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
முப்பருவ முறையின் கீழ் மூன்றாம் பருவத்துக்காக 2.3 கோடி புத்தகங்கள் அச்சிடப்பட்டுள்ளன.
இதில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்காக 1.58 கோடி புத்தகங்கள் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர், தொடக்கக் கல்வி அலுவலர் அலுவலகங்கள் வழியாக இலவசமாக வழங்கப்பட உள்ளன.
இதற்காக சம்பந்தப்பட்ட அலுவலகங்களுக்குப் புத்தகங்கள் அனுப்பப்பட்டு வருகின்றன.
தனியார் பள்ளி மாணவர்களுக்கான 81 லட்சம் பிரதிகள் தமிழ்நாட்டுப் பாடநூல் கழகத்தின் 22 வட்டார அலுவலகங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன.
மெட்ரிக் பள்ளி ஆய்வாளர்கள், உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள் (மழலையர் பள்ளி) ஆகியோர் மூலம் தனியார் பள்ளிகளுக்கான புத்தக விற்பனை நடைபெற்று வருகிறது என அவர் தெரிவித்துள்ளார்.

பள்ளி மாணவர்கள் இயக்கிய குறும்படம் "யூகம்' வெளியீடு

பள்ளி மாணவர்கள் குறைந்த செலவில் இயக்கிய "யூகம்' குறும்படம் ஞாயிற்றுக்கிழமை திரையிடப்பட்டது.
சென்னை ஏவிஎம் ஸ்டூடியோ மினி திரையரங்கில் திரையிடப்பட்ட "யூகம்' குறும்பட நிகழ்ச்சியை "சுட்டகதை' திரைப்பட இயக்குநர் சுபு, எடிட்டர் லெனின் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
பின்னர் "யூகம்' குறும்பட இயக்குனர் அஜித் பாலாஜி செய்தியாளர்களிடம் கூறியதாவது :
சின்மயா வித்யாலயா பள்ளி மாணவர்கள் 14 பேர் ஒன்றாக இணைந்து "யூகம்' குறும்படத்தை இயக்கி உள்ளோம். தெலுங்கில் வெளியான "ஷேடோ' என்ற குறும்படத்தின் கதைக் கருவை கொண்டு 14 நிமிடங்கள் ஓடக்கூடிய இப்படத்தை உருவாக்கினோம்.
இந்தப் படத்தை குறைந்த செலவில் (ரூ.56 ஆயிரம்) உருவாக்கி இருக்கிறோம். பள்ளி மற்றும் பெற்றோர் தரப்பில் இருந்து எந்தவித எதிர்ப்பும் எழாததால் இதை வெற்றிகரமாக உருவாக்க முடிந்தது.
படத்தை பார்த்துவிட்டு திரைப்பட துறை வல்லுநர்கள் பாராட்டியது மகிழ்ச்சியாக உள்ளது என்றார் அஜித்.

தமிழகம் முழுவதும் '104' முதலுதவி சேவை விரைவில் அறிமுகம்


தமிழகம் முழுவதும் 104 அவசரகால முதலுதவி சேவை திட்டம் விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. தமிழகத்தில் அவசரகால ஆம்புலன்ஸ் சேவை 108 என்ற ஹெல்ப் லைன் எண்ணுடன் இயங்கி வருகிறது.  இந்நிலையில், அவசரகாலங்களில் முதலுதவி செய்ய முடியாமல் பலர் உயிரிழப்பை சந்தித்து வருகின்றனர். ஆம்புலன்ஸ் வந்து மருத்துவமனைக்கு அழைத்து செல்வதற்குள் முதலுதவி கிடைக்காதவர்கள் உயிரிழப்பை சந்திக்கின்றனர். இதனை தவிர்க்க 104 என்ற ஹெல்ப் லைன் சேவை எண்ணுடன் முதலுதவி ஆலோசனை கூறும் மையம் ஒன்று தமிழகத்தில் விரைவில் தொடங்கப்படுகிறது. 

இதற்காக அமைக்கப்படும் மையத்தில் டாக்டர்கள் கொண்ட குழு தயார் நிலையில் இருக்கும். 104 ஹெல்ப் லைன் எண் மூலம் தொடர்பு கொள்ளும்போது, மையத்தில் உள்ள டாக்டர்கள், இருக்கும் இடத்தில் உள்ள வசதிகளை கொண்டே பாதிக்கப்பட்டவர்களுக்கு முதலுதவி அளிக்கும் வழிமுறைகளை கூறுவர். இதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஓரிரு நிமிடங்களில் முதலுதவி சிகிச்சை கிடைக்கும். அதன்பிறகு ஆம்புலன்ஸ் அல்லது வேறு வகையிலோ மருத்துவமனைகளுக்கு பாதிக்கப்பட்டவர்களை கொண்டு சென்று காப்பாற்ற முடியும். 

இதன் மூலம் முதலுதவி கிடைக்காமல் இறப்பவர்களின் விகிதத்தையும் குறைக்க முடியும். இந்த சேவையை முதல்வர் ஜெயலலிதா நேற்று தொடங்கி வைக்க இருந்ததாகவும், ஆனால், பல மாவட்டங்களில் அதற்கான தயாரிப்புகள் முடிவடையாததால் தடை ஏற்பட்டுள்ளதாகவும், விரைவில் இந்த சேவை அனைத்து மாவட்டங்களிலும் கிடைக்கும் என்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

பூம்புகார் கடலில் தத்தளித்த மாணவர்களை காப்பாற்றிய ஆசிரியர் நீரில் மூழ்கி சாவு

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் ராகவேந்திரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த மாணவர்கள், அரையாண்டு தேர்வு முடிந்து சுற்றுலா சென்றனர். 6, 7, 8ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் 28 பேர், பிளஸ் 2 கம்ப்யூட்டர் ஆசிரியர் பிரசாந்த் (25) உட்பட 3 ஆசிரியர்கள் என 31 பேர் ஒரு வேனில் பயணம் செய்தனர். நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே உள்ள பூம்புகாருக்கு சென்று அங்கே உள்ள கலைக்கூடத்தை நேற்று கண்டு ரசித்தனர். அதன்பிறகு ஒரு சில மாணவர்கள் கடலில் இறங்கி குளித்தனர். அவர்களை ஆசிரியர் பிரசாந்த் கண்காணித்து கொண்டிருந்தார். அப்போது திடீரென்று 4 மாணவர்களை கடல் அலை இழுத்து சென்றது. இதை பார்த்த பிரசாந்த், உடனடியாக கடலில் குதித்து போராடி 4 மாணவர்களையும் மீட்டார். அப்போது எதிர்பாராதவிதமாக ராட்சத அலை பிரசாந்தை கடலுக்குள் இழுத்து சென் றது. அங்கிருந்த மீனவர்கள் காப்பாற்றி மருத்துவ மனையில் சேர்த்தனர். அங்கு அவர் இறந்தார்.

தேர்வு எழுதுவோர் விவரம் அடுத்த வாரம் வெளியாகிறது


பொது தேர்வு எழுதுவோர் விவரங்களை, அடுத்த வாரம் வெளியிட, தேர்வுத் துறை திட்டமிட்டு உள்ளது. பிளஸ் 2 தேர்வு, மார்ச், 3ல் துவங்கி, 26 வரையிலும், 10ம் வகுப்பு தேர்வு, மார்ச், 26ல் துவங்கி, ஏப்ரல், 9 வரையிலும் நடக்கிறது. இதில் பங்கேற்கும் மாணவ, மாணவியர் விவரங்களை, மாவட்ட வாரியாக, தேர்வுத் துறை பெற்றுள்ளது. பெற்ற விவரங்கள் சரியானவையா என்பதை, மீண்டும் ஒரு முறை சரிபார்த்து, தவறு இருந்தால், அதை சரிசெய்து, 5ம் தேதிக்குள், மீண்டும் சமர்ப்பிக்க, தேர்வுத் துறை உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, தற்போது, தேர்வு எழுதும் மாணவர் பட்டியல், பள்ளிகளில், சரிபார்க்கப்பட்டு வருகின்றன. இந்த பணி முடிந்ததும், அடுத்த வாரத்தில், தேர்வெழுதும் மாணவர் எண்ணிக்கை குறித்த விவரங்களை வெளியிட, தேர்வுத் துறை, முடிவு செய்துள்ளது. பிளஸ் 2 தேர்வை, 8.5 லட்சம் பேரும், 10ம் வகுப்பு தேர்வை, 10.5 லட்சம் பேரும் எழுதலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது