உங்கள் படைப்புகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல்:trstrichy@gmail.com, To Join facebook
Flash News
Flash News
Friday, 3 January 2014
பொதுத்தேர்வு மாணவர்களுக்கு சிற்றுண்டி: கோவை மாநகராட்சி பள்ளிகளில் துவக்கம்
கோவை மாநகராட்சி உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளி மாணவர்களுக்கு, மாலை நேர சிற்றுண்டி வழங்கும் திட்டம் நேற்று துவங்கப்பட்டது. கோவை மாநகராட்சியிலுள்ள உயர்நிலைப்பள்ளிகளில் 2,507 மாணவர்கள் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதுகின்றனர். மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் 2,427 பேர் பொதுத்தேர்வு எழுதுகின்றனர். பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு மாலை நேரத்தில் சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுகின்றன. மாணவர்களின் சோர்வு மற்றும் பசியை போக்கும் வகையில், மாலை நேர சிற்றுண்டி வழங்க, மாநகராட்சி பட்ஜெட்டில் ஒரு கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. அதையடுத்து, கல்வி, பூங்கா மற்றும் விளையாட்டு மைதானங்கள் குழுவில் மே மாதமும், மாமன்ற கூட்டத்தில் ஜூன் மாதமும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கோவை ராமநாதபுரம் "நளன் உணவகம்' மூலம், மாணவர்களுக்கு மாலை நேர சிற்றுண்டி வழங்க டெண்டர் விடப்பட்டது. டாக்டர் நஞ்சப்பா ரோட்டிலுள்ள, அனுப்பர்பாளையம் உயர்நிலைப்பள்ளியில், மாலை நேர சிற்றுண்டி வழங்கும் திட்டம் நேற்று துவங்கப்பட்டது. மேயர் வேலுசாமி, மாணவர்களுக்கு சிற்றுண்டி வழங்கினார். மேயர் பேசுகையில், ""பொதுத்தேர்வை எதிர்கொள்ளும் மாணவர்களுக்காக, மாலை நேர வகுப்புகள் துவங்கப்பட்டுள்ளன. காலை நேரத்தில் வீட்டில் இருந்து வரும் மாணவர்கள், மாலையில் தாமதமாக வீடு திரும்புகின்றனர். மாணவர்களின் சோர்வை போக்கி புத்துணர்வு ஏற்படுத்த சிற்றுண்டி வழங்கப்படுகிறது. தமிழகத்தில் கோவை மாநகராட்சியில் முன்மாதிரியாக இந்த திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது,'' என்றார். "மெனு' என்ன?சிற்றுண்டியாக சோயா சுண்டல் 100 கிராம், கருப்பு கொண்டை கடலை சுண்டல் 100 கிராம், பாசிப்பயறு சுண்டல் 85 கிராம்
(ஏதாவது ஒன்று); ராகி புட்டு 100 கிராம், மக்காச்சோளப்புட்டு 100 கிராம், அரிசி புட்டு 100 கிராம்(ஏதாவது ஒன்று); சுக்கு டீ 100 மி.லி., வல்லாரை சூப் 150 மி.லி., தூதுவளை சூப் 150 மி.லி.,
(ஏதாவது ஒன்று) வழங்கப்படுகிறது.சிற்றுண்டி பொருட்கள் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப பள்ளிகளுக்கு பிரித்து, மாலை 4:00 மணிக்கு வினியோகம் செய்யப்படுகிறது. ஒரு மாணவருக்கு ஒரு நாளுக்கு 25 ரூபாய் செலவிடப்படுகிறது. பள்ளி வேலை நாட்களில், மாலை நேர சிறப்பு வகுப்பு மாணவர்களுக்கு தினமும் ஒரு வகை சிற்றுண்டி சுழற்சி முறையில் வழங்கப்படும்.
அண்ணாமலை பல்கலையில்உதவி பேராசிரியர்களுக்கு சம்பளம் 'கட்'
அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் பணிபுரிந்தபடி, முனைவர் பட்டப்படிப்பு படித்து, அதற்கான கட்டண நிலுவையைச் செலுத்தாததால், 286 உதவி பேராசிரியர்களுக்கு சம்பளம் நிறுத்தப்பட்டு உள்ளது.கடலுார் மாவட்டம், சிதம்பரம், அண்ணாமலை பல்கலைக் கழகத்தில், 3,020 பேராசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
2008 - 09ம் ஆண்டில், பணியில் சேர்ந்த உதவி பேராசிரியர்கள், முனைவர் (பிஎச்.டி.,) பட்ட ஆய்வை, அதே பல்கலைக் கழகத்தில் செய்து வருகின்றனர். இவர்களுக்கு, முனைவர் பட்ட கல்விக் கட்டணத்தில் சலுகை வழங்கப்பட்டுள்ளது.இவர்கள், முதலாம் ஆண்டு கல்விக் கட்டணம் மட்டும் செலுத்தி விட்டு, அடுத்த ஆண்டுக்கான கட்டணம் செலுத்துவது இல்லை.முனைவர் பட்டத்திற்கான, ஆய்வுக் கட்டுரை சமர்ப்பிக்கும் போது, முழு கட்டணத்தையும் செலுத்தி, பட்டத்தை பெற்றுக் கொள்வது என, ஏற்கனவே இருந்த நிர்வாகம் கடைபிடித்து வந்தது.
இதனால், முனைவர் பட்ட ஆய்வு செய்யும் உதவி பேராசிரியர்கள் செலுத்த வேண்டிய கட்டணத் தொகையில், 4.5 கோடி ரூபாய், பாக்கி நிலுவையில் உள்ளது. இந்தக் கட்டண பாக்கியை வசூலிக்க, தற்போதைய நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.2008 - 09 கல்வி ஆண்டில்...: முதல் கட்டமாக, 2008 - 09ல், பேராசிரியராக சேர்ந்து, முனைவர் பட்டத்திற்கு விண்ணப்பித்தவர்கள், நீண்ட காலமாக, கட்டணம் செலுத்தாமல் உள்ளனர். இவர்கள், 19 ஆயிரம் - 57 ஆயிரம் ரூபாய் வரை கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது.
இந்நிலையில், இந்த உதவி பேராசிரியர்கள், 286 பேருக்கு, பல்கலைக் கழக நிர்வாகம், எந்த முன்னறிவிப்பும் தெரிவிக்காமல், மாத சம்பளத்தை நிறுத்திஉள்ளது.குறிப்பாக, 2008 - 09ம் ஆண்டில், உதவி பேராசிரியராக சேர்ந்தவர்களுக்கு மட்டும், மாத சம்பளம் நிறுத்தப்பட்டுள்ளது.சம்பளம் நிறுத்தம் குறித்து, உதவி பேராசிரியர்கள், பல்கலைக் கழக நிர்வாகத்திடம் முறையிட்ட போது, முனைவர் பட்ட கட்டணம் செலுத்தினால் மட்டுமே ஊதியம் வழங்கப்படும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொது தேர்வில் தேர்ச்சி பெற வினா விடை கையேடு
பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களில், தேர்ச்சியில் பின் தங்கிய மாணவர்களுக்கு, பாட வல்லுனர் குழுவினர் 'சிறப்பு வினா விடை கையேடு' தயாரித்துள்ளனர். இதைகொண்டு, காலை, மாலை வேளைகளில், மாணவர்களுக்கு படம் நடத்தி, அரசு பொது தேர்வில், 100 சதவீதம் தேர்ச்சி அடைய செய்யும் முயற்சியில், ஆசிரியர்கள் ஈடுபட உள்ளனர்.பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச்., 26, பிளஸ் 2 மாணவர்களுக்கு மார்ச் 3 ல் அரசு பொது தேர்வு துவங்க உள்ளது. அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற, வினா விடை கையேடு தயாரிக்க, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு, பள்ளி கல்வி இயக்குனர் ராமேஸ்வர முருகன் உத்தரவிட்டுள்ளார்.
இதை தொடர்ந்து, விருதுநகர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவுரைப்படி, பள்ளிகளில் 20 ஆண்டுகளுக்கு மேல் பணி புரிந்து, 100 சதவீத தேர்ச்சி பெற செய்த ஆசிரியர்கள், ஒவ்வொரு பாடத்திற்கும் வினா விடை கையேடு தயார் செய்யும் பணியில் ஈடுபட்டனர். இதை, தமிழ், ஆங்கிலம் என,இரண்டு மொழிகளில் தயாரித்து, புத்தகமாக வெளியிட்டுள்ளனர். இதன் மூலம், தேர்ச்சியில் பின் தங்கிய மாணவர்களுக்கு, காலை, மாலை வேளைகளில், சிறப்பு வகுப்பு எடுக்க உள்ளனர். 'இதன்படி மாணவர்கள், அரசு பொது தேர்வில், 100 சதவீத தேர்ச்சி அடைய முடியும்,' என, கல்வி அதிகாரிகள் தெரிவித்தனர்.
Thursday, 2 January 2014
மனப்பாடம் செய்து படிப்பதை தவிர்க்க சி.பி.எஸ்.இ. புதிய முயற்சி
மனப்பாடம் மூலம் படிப்பதில் சிரமப்படும் சி.பி.எஸ்.இ., மாணவர்களுக்கு, இந்த 2014ம் ஆண்டில் ஒரு மகிழ்ச்சியான செய்தி கிடைத்துள்ளது.
அனைத்துக் கேள்விகளுக்கும் பதிலளிக்கும் விதமாக, பார்முலாக்களைக் கொண்ட load papers -ஐ கொண்டுவர CBSE திட்டமிட்டு வருகிறது. மாணவர்கள் வெறுமனே மனப்பாடம் செய்து படித்து தேர்வெழுதும் பழக்கத்தை தகர்க்கும் ஒரு முயற்சியாக, மேற்கண்ட கேள்வித்தாள் சீர்திருத்தத்தை CBSE கொண்டு வந்துள்ளது.
தனது கேள்வித்தாள் சீர்திருத்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக, கடந்த கல்வியாண்டில், 9 மற்றும் 11ம் வகுப்புகளுக்கு Open Text - based Assessment -ஐ சி.பி.எஸ்.இ., அறிமுகப்படுத்தியது. தற்போது இந்த 2014 - 15ம் கல்வியாண்டில் அத்திட்டத்தை 10 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கும் அறிமுகப்படுத்துகிறது.
இத்திட்டத்திற்காக, ஒரு குழுவிற்கு 2 முதல் 3 நிபுணர்களைக் கொண்ட, பாடங்களுக்கான கமிட்டிகளை CBSE அமைத்துள்ளது. கேள்வித்தாள்கள் அப்ளிகேஷன்(பயன்பாட்டு) அடிப்படையில் இருக்கும். இதன்மூலம் மாணவர்கள், பார்முலாக்களை விளக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட மாட்டார்கள்.
நிபுணர் கமிட்டிகள் தமது ஆலோசனைகளை வரும் 2014ம் ஆண்டு பிப்ரவரி மாதம் வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனையடுத்து, வரும் கல்வியாண்டில் புதிய முறையை CBSE அறிமுகப்படுத்தும்.
தனித்தேர்வர்களுக்கு தனி அறை இல்லை: தேர்வுத்துறை
"பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வுக்கு விண்ணப்பிக்கும் தனித்தேர்வர்களுக்கு இனி, தனி அறை கிடையாது. பள்ளி மாணவர்களுடன் அமர்ந்து தேர்வெழுத வேண்டும்" என தேர்வுத்துறை அறிவுறுத்தியுள்ளது.
பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 தோல்வி அடைந்தவர்கள், அவர்களுக்காக நடத்தப்படும் சிறப்பு தேர்வு எழுதுவது வழக்கம். அதிலும் தோல்வியடைந்தால், அடுத்தாண்டு நடைபெறும் பொதுத்தேர்வில் பங்கேற்பர். அவர்கள் சீருடை அணிந்திருக்க மாட்டார்கள். மேலும், வயது வித்தியாசம் இருக்கும் என்பதால், தனித்தேர்வர்களுக்கு தேர்வு மையத்தில் தனியறை ஒதுக்கப்பட்டது; ஒரு மையத்தில் ஓரிரு தனித்தேர்வர் மட்டுமே தேர்வு எழுதினாலும், அவர்களுக்கு தனியறை ஒதுக்கி, தனி ஆசிரியர், கண்காணிப்பாளர் நியமிக்க வேண்டியிருந்தது.
சில நேரங்களில் அவர்கள் தேர்வுக்கு வராமல் போனால், "டியூட்டி"யை மாற்ற வேண்டிய சிரமம், கடைசி நேரத்தில் ஏற்படுவது வழக்கம். இத்தகைய சிக்கல்களை தவிர்க்க, தனித்தேர்வர்களுக்கு தனியறை வழங்க வேண்டாம் என முதன்மை கல்வி அலுவலர்களுக்கு தேர்வுத்துறை அறிவுறுத்தியுள்ளது.
கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், "தனித் தேர்வர்கள் எண்ணிக்கை குறைவாக இருப்பதால், அவர்களை தனியே பிரிக்காமல், பள்ளி மாணவர்களுடன் இணைந்து, ஒரே அறையில் தேர்வு எழுத அனுமதியுங்கள். 20 பேருக்கு அதிகமாக மாணவர்களை அமர வைக்கும்போது, ஆசிரியர்களால் கவனம் செலுத்த முடியாது. எனவே, ஒரு அறையில் 20 பேர் மட்டுமே இருக்க வேண்டும். கூடுதலாக இருந்தால், வேறொரு அறை ஏற்படுத்திக் கொள்ளலாம் என உத்தரவிட்டுள்ளது" என்று கூறினர்.
இரட்டைப்பட்டம் சார்பான வழக்கு மீண்டும் இன்று (2.1.2014 ) விசாரணைக்கு வருகிறது
இரட்டைப்பட்டம் சார்பான வழக்கு இன்று (2.1.2014 ) சென்னை உயர்நீதிமன்றத்தில் முதன்மை அமர்வு முன், வரிசை எண் 50 ல் வழக்கு விசாரணைக்கு வருகிறது. மேலும் ஏற்கனவே தமிழக அரசு சார்பில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
பிளஸ் 2 தேர்வர்கள் பட்டியல் : தலைமை ஆசிரியர்களுக்கு 12 கட்டளைகள்
பிளஸ் 2 பொதுத்தேர்வு தொடர்பாக மாணவர்கள் பெயர் பட்டியலை சரிபார்த்து, ஆன்லைனில் திருத்தம் செய்வதற்கு நாளை (ஜன.3ம் தேதி) வரை வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளதாக தேர்வுத்துறை தெரிவித்துள்ளது. பிளஸ் 2 பொதுத்தேர்வு வரும் மார்ச் மாதம் நடைபெற உள்ளது. இதற்காக, சம்பந்தப்பட்ட பள்ளிகள் சார்பில் மாணவர்களின் பெயர் பட்டியல் தயாரித்து தேர்வுத்துறைக்கு அனுப்பப்பட்டு வருகின்றன. இந்நிலையில், மாணவர்கள் பெயர் பட்டியலில் முக்கிய திருத்தங்கள் செய்வதற்கு அனைத்து பள்ளிகளுக்கும் ஜன.3ம் தேதி மாலை 5 மணி வரை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. பட்டியலை சரிபார்ப்பதில் முக்கிய வழிமுறைகளை பின்பற்றுமாறு தலைமை ஆசிரியர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அதன் விபரம் வருமாறு:
*பள்ளியின் செக் லிஸ்டில் அனைத்து தேர்வர்களின் பெயர்களும், அச்செழுத்தம் செய்யப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும்.
*பெயர் விடுபட்டிருந்தால் கடைசி பக்கத்தில் சிவப்புநிற மையால் தெளிவாக எழுத வேண்டும்.
*தேர்வர்களின் பெயர், பிறந்த தேதி, இனம், மொழி, இதர பாடங்களில் தேர்வு எழுத உள்ள மொழி ஆகியவற்றை சரிபார்த்து உறுதி செய்ய வேண்டும்.
*தவறு இருந்தால் சிவப்பு நிற மையால் சுழித்து சரியான விபரத்தை குறிப்பிட வேண்டும்.
*தேர்வர்களின் குரூப் கோடு மற்றும் சப்ஜெக்ட் கோடு வரிசையாக உள்ளதா? என்பதை சரிபார்த்து தவறு இருந்தால் சிவப்பு நிற மையால் சுழித்து சரியான விபரத்தை அருகில் எழுத வேண்டும்.
*பள்ளியின் எண், பெயர் ஆகியவை சரியாக அச்செழுத்தம் செய்யப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்து தவறு இருந்தால் திருத்தம் செய்யப்பட வேண்டும்.
*டைப்ரைட்டிங் பாடத்தேர்வு எழுதும் தேர்வர்களுக்கு மொழி, தமிழ் அல்லது ஆங்கிலம் என்று சரியாக குறிப்பிட வேண்டும். தவறு இருந்தால் உரிய திருத்தம் மேற்கொள்ளவேண்டும்.
*இயற்பியல், வேதியியல், உயிரியல், தாவரவியல், விலங்கியல், கணிதம், வரலாறு, பொருளாதாரம், வணிகவியல், கணக்கியல் ஆகிய பாடங்களுக்கு மட்டுமே மலையாளம், கன்னடம், தெலுங்கு, உருது ஆகிய மொழிகளில் வினாத்தாள்கள் வழங்கப்படும் என்பதையும், இதர பாடங்களுக்கு கிடையாது என்பதைக் கருத்தில் கொண்டு செக் லிஸ்டை கவனத்துடன் ஆய்வு செய்ய வேண்டும்.
*இந்த பணிகளை தலைமை ஆசிரியர்கள் தங்களது நேரடி கவனத்தில் மேற்கொள்ளப்பட வேண்டும்.
*தலைமை ஆசிரியர்கள் நேரடியாக சரிபார்க்காமல் கையெழுத்து போடக்கூடாது. அவ்வாறு கையெழுத்திட்டால் அதன்பின் விளைவுகளையும் முழு பொறுப்பையும் தலைமை ஆசிரியர்களே சந்திக்க நேரிடும்.
*ஒரே பெயர் மற்றும் தலைப்பு எழுத்து கொண்ட மாணவ, மாணவிகள் ஒன்றுக்கு மேற்பட்டு இருந்தால் அந்தந்த மாணவ, மாணவிகளின் பிறந்த தேதியை மிக கவனத்துடன் சரிபார்க்க வேண்டும்.
*இந்த திருத்தங்களை ஜன.3ம் தேதி (நாளை) மாலை 5 மணிக்குள் ஆன் லைனில் செய்து, தேர்வர்களின் நலன் பாதிக்காத வகையில் தேர்வு பணிகளை செம்மையாகவும், சிறப்பாகவும் மேற்கொண்டு தேர்வு முடிவுகளை நல்ல முறையில் வெளியிட முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
10, பிளஸ் 2 தேர்வு எழுதும் மாணவர்கள் பட்டியலில் திருத்தம் நாளைக்குள் முடிக்க வேண்டும்
பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வை பள்ளிகள் மூலம் எழுத உள்ள மாணவர்களின் சரியான விவரங்கள் சேகரித்து தேர்வுத் துறைக்கு அனுப்ப வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது. அனைத்து மாவட்டங்களிலும் பட்டியல்கள் தயாரிக்கப்பட்டு அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களில் கணினியில் பதிவு செய்யப்பட்டன. இந்த பட்டியல்கள் அடங்கிய சிடிக்கள் 30ம் தேதி நேரடியாக தேர்வுத்துறைக்கு வந்து சேர்ந்தன. 32 மாவட்டங்களில் இருந்து வந்த பட்டியல்களை தேர்வுத்துறை அதிகாரிகள் பெற்று தேர்வுத் துறை கணினியில் பதிவு செய்தனர்.
பின்னர் நேற்று அனைத்து மாவட்டங்களுக்கும் செக் லிஸ்ட், ஆன்லைன் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த செக்லிஸ்ட்டில் திருத்தங்கள் ஏதாவது செய்ய வேண்டியது இருந்தால் இன்று தொடங்கி நாளைக்குள் www.tndge.in என்ற இணைய தளத்தில் நேரடியாக திருத்தங்களை செய்யலாம். செக்லிஸ்ட்கள் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களில் இருந்து பெறலாம் என்றும் தேர்வுத் துறை அறிவித்துள்ளது. இதையடுத்து 10ம் தேதிக்கு பிறகே பட்டியல்கள் இறுதி செய்யப்படும் என்று தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.
எக்ஸ்ட்ரா தகவல்
இந்த ஆண்டு பத்தாம் வகுப்பு தேர்வில் சுமார் 10 லட்சத்து 50 ஆயிரம் மாணவர்களும், பிளஸ் 2 தேர்வில் 8 லட்சம் மாணவர்களும் எழுதுவார்கள் என்று கணக்கிடப்பட்டுள்ளது.
ஒன்பது நாள் விடுமுறைக்குப்பின், பள்ளிகள், இன்று திறப்பு
ஒன்பது நாள் விடுமுறைக்குப்பின், மாநிலம் முழுவதும், பள்ளிகள், இன்று திறக்கப்படுகின்றன. அரையாண்டு தேர்வுக்குப்பின், பள்ளிகளுக்கு, கடந்த, 24ம் தேதி முதல், நேற்று வரை, ஒன்பது நாள், விடுமுறை அளிக்கப்பட்டது. இதையடுத்து, இன்று, அனைத்து வகை பள்ளிகளும் திறக்கப்படுகின்றன. பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்பில், செய்முறை தேர்வு குரூப் கொண்ட மாணவர்களுக்கு, இம்மாத இறுதிக்குள், தேர்வு பதிவு எண் வழங்கப்பட உள்ளது. பிப்ரவரி, முதல் வாரத்தில் இருந்து, செய்முறைத் தேர்வு துவங்கிவிடும் என்பதால், இந்த ஒரு மாதம் வரை மட்டுமே, பள்ளிகள், முழுமையான அளவில் செயல்படும்.
அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள், இணையதளங்களில், ஐந்து வகை தமிழ் எழுத்துருக்களை மட்டுமே, பயன்படுத்த வேண்டும்' - அரசு உத்தரவு
'அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள், இணையதளங்களில், ஐந்து வகை தமிழ் எழுத்துருக்களை மட்டுமே, பயன்படுத்த வேண்டும்' என, அரசு உத்தரவிட்டுள்ளது. தற்போது, அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில், 30க்கும் மேற்பட்ட எழுத்துருக்கள் பயன்படுத்தப்படுகின்றன. இவற்றில், 5 வகை எழுத்துக்களை மட்டும் பயன்படுத்த வேண்டும் என, தகவல் தொழில்நுட்பத் துறை உத்தரவிட்டுள்ளது. தமிழ் பாரதி, தமிழ் கபிலர், தமிழ் கம்பர், தமிழ் வள்ளுவர், தமிழ் காவேரி ஆகியவை இந்த எழுத்துருக்கள் ஆகும். இவ் எழுத்துருக்களை, http://tamilvu.orgல், 'டவுன்லோடு' செய்து பயன்படுத்தலாம். நிதித்துறை செயலர் உதயச்சந்திரன், இதுகுறித்த சுற்றறிக்கையை அனுப்பியுள்ளார்.
மாநிலம் முழுவதும் ஒரே துறை: சத்துணவு பணியாளர் ஆசை
'அனைத்து, சத்துணவு பிரிவுகளையும் ஒருங்கிணைத்து, ஒரே துறையாக மாநில, மாவட்ட, ஒன்றிய அளவில் செயல்படுத்த வேண்டும்' என, தமிழ்நாடு எம்.ஜி.ஆர்., சத்துணவு பணியாளர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
சங்கத்தின் கோரிக்கை:
பள்ளி சத்துணவு, குழந்தைகள் நலன், அங்கன்வாடி உள்ளிட்ட, அனைத்து சத்துணவு அமைப்பாளர் களையும், முழுநேர ஊழியராக்க வேண்டும். பணிமூப்பு அடிப்படையில், அரசின் பிற துறைகளில் ஏற்படும் காலி பணியிடங்களில், பதவி உயர்வு வழங்க வேண்டும். அனைத்து, சத்துணவு பிரிவுகளையும் ஒருங்கிணைத்து, ஒரே துறையாக, மாநில, மாவட்ட, ஒன்றிய அளவில் செயல்படுத்த வேண்டும். பணியில் ஓய்வு பெறும் போது, வழங்கப்படும் ஒட்டுமொத்த ஓய்வு ஊதியத்தை, 1 லட்சம் ரூபாயாக உயர்த்த வேண்டும். பத்தாண்டுகளுக்கு ஒருமுறை, அடிப்படை ஊதியத்துடன், 1,000 ரூபாய் உயர்த்தி வழங்க வேண்டும்.
'கவுன்சிலிங்கில்' மறைக்கப்பட்ட காலியிடங்கள்: கோர்ட்டுக்கு செல்ல ஆசிரியர் பயிற்றுனர்கள் முடிவு
தமிழகத்தில் நடந்த ஆசிரியர்கள் கவுன்சிலிங்கில் பல்வேறு காலிப் பணியிடங்கள் மறைக்கப்பட்டதால் விரக்தியுற்ற ஆசிரியர் பயிற்றுனர்கள், கோர்ட்டில் வழக்குத் தொடர முடிவு செய்துள்ளனர்.
அனைவருக்கும் கல்வித் திட்டத்தில் 115 ஆசிரியர் பயிற்றுனர்களை, பட்டதாரி ஆசிரியர்களாக மாற்றி, அரசு உத்தரவிட்டது. இவர்களுக்கு, டிச.,31ல், மாநிலம் முழுவதும் மாறுதல் கலந்தாய்வு நடந்தது. இதில் பல இடங்கள் மறைக்கப்பட்டதால், சொந்த மாவட்டங்களில் 90 சதவிகிதம் வரையான காலிப் பணியிடங்கள் மறைக்கப்பட்டதாக புகார் எழுந்தது. இதனால், பலர் தொலைதூர மாவட்டங்களில் பணியேற்கும் கட்டாயத்திற்கு தள்ளப்பட்டனர். ஆசிரியர் பயிற்றுனர் சங்க நிர்வாகிகள் கூறியதாவது: எந்த முன்னறிவிப்பும் இன்றி மேற்பார்வையாளர், ஆசிரியர் பயிற்றுனர்களை அரசு பள்ளிகளுக்கு மாற்றியதால் மன உளைச்சலில் உள்ளோம். இதற்கிடையில் பட்டதாரி ஆசிரியர் மாறுதலுக்கான நடந்த கவுன்சிலிங்கில் மேலிட உத்தரவுப்படி காலிப் பணியிடங்கள் மறைக்கப்பட்டுள்ளது. டிச., 28ல், 961 பட்டதாரி ஆசிரியர்கள், மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்களாக பதவி உயர்வு பெற்றனர். ஆனால், டிச.,31ல் நடந்த கவுன்சிலிங்கில் அந்த பணியிடங்கள் காண்பிக்கப்படவில்லை. மறைக்கப்பட்ட பணியிடங்களுக்கு தற்போது பேரம் நடப்பதாக எங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது. இதுகுறித்து நியாயம் கேட்டு கோர்ட்டில் வழக்குத் தொடர உள்ளோம், என்றனர்.
Subscribe to:
Posts (Atom)