Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Tuesday, 1 April 2014

சுறுசுறுப்பில் கல்வி துறை –பிளஸ் 1 வகுப்புகளை விரைவாக தொடங்க நடவடிக்கை

எஸ்எஸ்எல்சி தேர்வு முடிவை கடந்த ஆண்டை போல் இல்லாமல் இந்தாண்டு சீக்கிரமாக வெளியிட தேர்வு துறை விரைவாக நடவடிக்கை எடுத்து வருகிறது. தமிழகத்தில் பிளஸ்டூ தேர்வுகள் முடிந்து தற்போது விடைத்தாள்கள் வேகமாக திருத்தப்பட்டு வருகின்றன. வரும் 19 ஆம் தேதிக்குள் இந்த பணியை முடிக்க தேர்வு துறை முழு வீ்ச்சில் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் பத்தாம் வகுப்பு தேர்வு கடந்த 27 ஆம் தேதி தொடங்கியது. தமிழ்தாள் மட்டும் முடிந்துள்ளது. அனைத்து தேர்வுகளும் வரும் 9 ஆம் தேதிக்குள் முடிகிறது. இதனை தொடர்ந்து 10ம் வகுப்பு விடைத்தாளகளும் வெகு வேகமாக திருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் வரும் கல்வியாண்டில் பிளஸ் 1 வகுப்பு செல்லும் மாணவர்கள் நீண்ட நாள் கோடை விடுமுறையில் இருப்பர். அதனை இந்தாண்டு குறைத்து விரைவில் பள்ளியில் சேர்க்க சேர்க்கை நடத்தி அவர்களுக்கு வகுப்புகளை தொடங்க கல்வி துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. வரும் ஜூன் மாதம் 16ம் தேதி பிளஸ் 1 வகுப்புகளை தொடங்க தேர்வு துறை முடிவு செய்துள்ளது. அதற்கேற்ப தேர்வு முடிவுகள் கடந்த ஆண்டை விட இந்தாண்டு முன்னதாகவே வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு மே 31ம் தேதி 10ம் வகுப்பு ரிசல்ட் வெளியிடப்பட்டு ஜூன் 24ம் தேதி பிளஸ் 1 வகுப்புகள் தொடங்கப்பட்டன. இந்த ஆண்டு ஒரு வாரம் முன்னதாகவே வகுப்புகள் தொடங்கப்படும். மற்ற வகுப்புகளுக்கு கோடை விடுமுறைக்கு பின்னர் ஜூன் 2 ஆம் தேதி முதல் வகுப்புகள் தொடங்கப்பட உள்ளன. வெயில் காரணமாக தனியார் பள்ளிகள் சில ஜூன் மாதம் 4 ஆம் தேதி திறக்க உத்தேசிக்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு கோடை வெயில் காரணமாக ஜூன் 10 ஆம் தேதி தான் பள்ளிகள் திறக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாடு பள்ளிக்கல்விப் பணி - 4 முதன்மை கல்வி அலுவலர், 7 மாவட்ட கல்வி அலுவலர் மற்றும் ஒத்தநிலை அலுவலர்கள் இன்று 31.03.2014 பிற்பகலில் ஒய்வுபெறுவதையொட்டி, பொறுப்பு அலுவலர்களை நியமித்து இயக்குனர் உத்தரவு

தீருமா தேர்வுகால குழப்பங்கள்?

தமிழகத்தில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வுகள் கடந்த வாரம் தொடங்கியுள்ளன. இந்த முறை காலை 9 மணிக்கு தேர்வுகள் தொடங்கும் என பள்ளிக் கல்வித் துறை அறிவிப்பு வெளியிட்டது. இதனால் மாணவர்கள் பெரும் சிரமத்தை எதிர்கொள்ள வேண்டியதாயிற்று.
காலை 9 மணிக்கு முன்னதாக மாணவர்கள் தேர்வு மையத்துக்கு வர வேண்டுமானால், வீட்டிலிருந்து அவர்கள் காலை 8 மணிக்கு முன்னதாகவே புறப்பட்டிருக்க வேண்டும். அரசுப் பள்ளிகளில் பயிலும் ஏழை, எளிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் அதற்கு முன்பாக எழுந்து 8 மணிக்குள் பள்ளிக்குச் செல்ல தயாராவது என்பது அத்தனை சுலபமானதல்ல.
கிராமப் பகுதிகளில் ஏற்கெனவே வழக்கமாக சென்று வந்த பேருந்து நேரமும், தேர்வு நேரமும் பல இடங்களில் மிக நெருக்கமானதாக இருந்தது. ஆனால் இப்போது மாற்றியமைக்கப்பட்ட நேரத்திற்கு பல இடங்களில் பேருந்து வசதி இல்லை. நகரப் பகுதிகளிலும்கூட இதேபோன்ற சிரமத்தை மாணவர்கள் எதிர்கொண்டனர்.
அதேபோல, பெரும்பாலான மாவட்டங்களில் சரிபாதி பள்ளிக் கூடங்களில் தேர்வு மையங்கள் இல்லை. அருகிலுள்ள பள்ளிகளில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இதனால், மாணவர்கள் இன்னும் முன்கூட்டியே எழுந்து தயாராக வேண்டிய நிலை ஏற்படுகிறது.
சில இடங்களில் அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் தேர்வுக்காக சிறப்புப் பேருந்து வசதி செய்யப்பட்டிருந்தது. ஆனால் வழக்கமாக இலவச பேருந்து பயண அட்டை மூலம் பள்ளிக்குச் சென்று வரும் மாணவர்கள், தேர்வு நேரத்தில் கட்டணம் செலுத்தி பயணச்சீட்டு பெற்றுச் சென்றனர்.
தமிழகத்தில் குறிப்பிட்ட சில பகுதி பேருந்துகளில் வழக்கத்தைவிடவும் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டபோது, மாணவர்கள் புகார் செய்ததின் பேரில் அதிகாரிகள் தலையிட்டதால் மாணவர்களுக்குக் கூடுதல் கட்டணம் திருப்பி வழங்கப்பட்டது.
பதற்றத்துடன் தேர்வுக்குச் செல்லும் மாணவர்களுக்கு இவ்வாறான காலை நேர சம்பவங்கள் எரிச்சலை ஏற்படுத்தியதாக பலரும் குறிப்பிட்டனர்.
இதற்கிடையில், 8ஆம் வகுப்பு வரையுள்ள இடைநிலை வகுப்புகள் தொடர்ந்து பள்ளியில் நடந்து வருகின்றன. ஆனால், எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வுக்கான தேர்வுக்கூட பணியாளர்களாக சம்பந்தப்பட்ட பள்ளிகளின் ஆசிரியர்களில் பெரும்பாலானோர் நியமிக்கப்பட்டிருப்பதால் வழக்கமான பள்ளிக்கூட பணிகளும் பாதிக்கப்பட்டிருக்கின்றன.
எழுத்துத் தேர்வுக்கு முன்பாக நடைபெற்ற செய்முறைத் தேர்வுகளின்போது, வேறு பள்ளிக்கூடங்களில் அமைக்கப்பட்டிருந்த தேர்வு மையங்களுக்கு மாணவர்கள் செல்லும்போது அவர்களுடன் உதவிக்குச் சென்ற ஆசிரியர்கள் இந்த முறை செல்ல முடியவில்லை.
மாணவர்கள் மனச்சிக்கல் இன்றி தேர்வை எதிர்கொள்ள வேண்டும் என்ற நோக்கில் தேர்வு மையங்களில் தண்ணீர், தேவைப்பட்டால் டீ, பிஸ்கட் போன்றவையும் தயாராக இருக்க வேண்டும் என்ற முயற்சியும் மேற்கொள்ளப்பட்டிருந்தது. ஆனால், அவை எதுவும் இதுபோன்ற குளறுபடியால் பலனளிக்கவில்லை. தனியார் பள்ளிகள் இதுபோன்ற சிரமங்களை எளிதில் சமாளிக்கும் திறன் பெற்றவை.
இருந்தபோதும், அவற்றிலும் இதுபோன்ற பிரச்னைகள் ஏற்பட்டன. அப்போது, "தேர்வுக் கூடம் மாற்றப்பட்ட இடங்களுக்கு அந்தந்த நிறுவனங்கள் பொறுப்பேற்று மாணவர்களை அழைத்துச் செல்ல வேண்டும்' என சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்பட்டது.
எனவே, இதில் பாதிக்கப்படுபவை அரசுப் பள்ளிகளே. இங்கு பயிலும் ஏழை, எளிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களே கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள். ஏற்கெனவே தேர்வு முறை மாணவர்களுக்கு மன அழுத்தத்தைக் கொடுக்கிறது என்ற விவாதம் நடைபெற்று வரும் நிலையில், இதுபோன்ற குழப்பங்களைக் களைய பள்ளிக் கல்வித் துறை உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
இதற்கு முதல் பணியாக காலை 9 மணிக்கு தொடங்கும் தேர்வு நேரத்தை மாற்றுவதற்கு பள்ளிக் கல்வித் துறை உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வழக்கமான பள்ளிக்கூட பணிகள் பாதிக்காதவாறு தேர்வுக்கூட பணிகளுக்கு கூடுதலான  மாற்று ஏற்பாட்டையும் பள்ளிக் கல்வித் துறை மேற்கொள்ள வேண்டும். அது மட்டுமல்லாது தேர்வு மைங்களுக்கு மாணவர்கள் எளிதில் சென்றுவர வசதியாக, தேர்வு நேரத்தில் தங்கு தடையற்ற போக்குவரத்துக்கு ஏற்பாடு செய்யப்படவும் வேண்டும்.

பொறியியல் மாணவர் சேர்க்கையில் ஆன்-லைன் விண்ணப்ப முறை அமல்படுத்தப்படுமா?


தமிழகத்தில் பிளஸ்2 தேர்வுகள் கடந்த மார்ச் மாதம் 3ம் தேதி தொடங்கி 25ம் தேதி முடிவுற்றது. இதில், 8.50 லட்சம் மாணவ-மாணவிகள் தேர்வு எழுதினர். தேர்வுதாள்கள் திருத்தும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தேர்வு முடிவுகள் மே மாதம் 2ம் வாரத்தில் வெளியாகும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில், இந்தாண்டிற்கான பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான பணிகளை அண்ணா பல்கலைக்கழகம் தொடங்கியுள்ளது. கடந்த ஆண்டு நடைபெற்ற பொறியியல் மாணவர் சேர்க்கைக்காக 2.50 லட்சம் விண்ணப்பங்கள் அச்சிடப்பட்டன. 

கடந்த ஆண்டு மே மாதம் 4ம் தேதி விண்ணப்ப விநியோகம் தொடங்கியது. ஜூன் 5ம் தேதி ரேண்டம் எண்ணும், 12ம் தேதி ரேங்க் பட்டியலும் வெளியிடப்பட்டது. இதனை தொடர்ந்து ஜூன் 21ம் தேதி கவுன்சிலிங் தொடங்கியது. கடந்த ஆண்டு நடைபெற்ற பொறியியல் கவுன்சிலிங்கில் 1 லட்சத்து 30 ஆயிரம் இடங்கள் நிரம்பின, சுமார் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்கள் காலியாக கிடந்தன என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் தற்போது 570 பொறியியல் கல்லூரிகள் உள்ளன. 

இந்த கல்லூரிகள் மூலம் சுமார் 1 லட்சத்து 75 ஆயிரம் பொறியியல் இடங்கள் நிரப்பப்படவுள்ளன. இந்த ஆண்டு பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான பணிகளில் அண்ணா பல்கலைக்கழகம் தீவிரமாக இறங்கியுள்ளது. முதல்கட்டமான விண்ணப்பங்கள் அச்சடிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றனர். இதனை தொடர்ந்து மே முதல் வாரம் விண்ணப்ப விநியோகமும், ஜூன் முதல் வாரத்தில் ரேண்டம் எண் வெளியீடும், ஜூன் 3வது வாரத்தில பொறியியல் கவுன்சிலிங்கும் தொடங் கும் என்று அண்ணா பல்கலைக்கழக வட்டாரங்கள் தெரிவித்தன. இது குறித்து கல்வியாளர் ஒருவர் கூறியதாவது: 

அண்ணா பல்கலைக்கழகம் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்களை, சென்னை பல்கலைக்கழகம், மாவட்டங்களில் உள்ள உறுப்பு கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகளில் மையங்கள் அமைத்து விநியோகிக்கிறது. இதில் பொதுபிரிவினருக்கு விண்ணப்ப கட்டணமாக ரூ.500ம், எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு ரூ.250ம் வசூலிக்கப்படுகிறது. எனினும், தற்போது அனைத்து துறைகளிலும் ஆன்-லைன் விண்ணப்பங்கள் வந்துவிட்டன. இதன்படி, பொறியியல் மாணவர் சேர்க்கைக்கு ஆன்-லைன் மூலம் விண்ணப்பங்களை பூர்த்தி செய்வதுடன் ஆன்-லைன் மூலமே விண்ணப்பத்திற்கான கட்டணங்களையும் கட்டலாம் என்ற முறையை பல்கலைக்கழகம் நடைமுறைபடுத்த வேண்டும்.

இதனால் மாணவர்களுக்கு ஏற்படும், செலவும் அலைச்சலும் மிச்சமாகும். கடந்த சில ஆண்டுகளாக இந்த கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் மத்தியிலும், இந்த முறை அமல்படுத்தப்படுமா என்ற கனவும், ஏக்கமும் ஏற்பட்டுள்ளது. எனவே, ஆன்- லைன் விண்ணப்ப முறையை அமல் படுத்த அண்ணா பல்கலைக்கழகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணியில் 40 ஆயிரம் ஆசிரியர்கள்


பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி இன்று முதல் முழுவீச்சில் தொடங்குகிறது. 12ம் தேதிக்குள் திருத்தி முடிக்க தேர்வுத் துறை உத்தரவிட்டுள்ளது. பிளஸ் 2 தேர்வு மார்ச் 3ம் தேதி தொடங்கி 25ம் தேதி முடிந்தன. இதற்கிடையே 21ம் தேதியே தமிழகம் முழுவதும் 66 மையங்களில் விடைத்தாள் திருத்தும் பணியை முதன்மை தேர்வு அதிகாரிகள் தொடங்கினர். 24ம் தேதி துணைத் தேர்வர்கள் திருத்த தொடங்கினர். அதில் தமிழ், ஆங்கிலப் பாடங்களுக்கான தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. மற்ற பாடங்களுக்கான தாள் திருத்தும் பணி இன்று தொடங்குகிறது. 

இன்றும் நாளையும் முதன்மை தேர்வர்கள், சிறப்பு ஆய்வாளர்கள் திருத்துகின்றனர். 3ம் தேதி துணைத் தேர்வர்கள் திருத்த தொடங்குகின்றனர். வணிகவியல் பாடத்துக்கான விடைத்தாள்கள் அதிகம் இருப்பதால் முன்கூட்டியே அவற்றை திருத்தும் பணிகள் தொடங்கிவிட்டன. தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட அனைத்து பாட விடைத்தாள்களும் 10ம் தேதிக்குள் திருத்தி முடிக்கவேண்டும். திருத்திய விடைத்தாள்களுக்கான மதிப்பெண்களை டம்மி எண்களின்படி பட்டியல் தயாரித்து 12ம் தேதிக்குள் தேர்வுத் துறையிடம் ஒப்படைக்க வேண்டும். 

12ம் தேதியுடன் திருத்தும் மையங் களையும் மூட வேண்டும் என்றும் தேர்வுத் துறை உத்தரவிட்டுள்ளது. இதற்காக 40 ஆயிரம் ஆசிரியர்கள் முழு வீச்சில் விடைத்தாள் திருத்தும் பணியில் இன்று முதல் இறங்குகின்றனர்.

மாணவர்களுக்கு பின்னறிவு தேர்வு

ஆர்.எம்.எஸ்.ஏ., (அனை வருக்கும் இடைநிலை கல்வி திட்டம்) சார்பில், பத்தாம் வகுப்புக்கு செல்லும் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களின் கல்வித்தரத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. "ஆல் பாஸ்' முறையில், ஒன்பதாம் வகுப்பு வரை வரும் மாணவர்களில் சிலர், படிப்பில் மிகவும் பின்தங்கியவர்களாக உள்ளனர். தமிழ் மொழியில் எழுதுவதும், படிப்பதும், அவர்களுக்கு சிரமமாக உள்ளது. ஒன்பதாம் வகுப்பில் தேர்ச்சி பெறும் அவர்கள், பத்தாம் வகுப்பில் பொதுத்தேர்வை சந்திக்க பயந்து, படிப்பை பாதியில் நிறுத்தி விடுகின்றனர். இதை தவிர்க்க, ஒன்பதாம் வகுப்பிலேயே, படிப்பில் மிக பின்தங்கிய மாணவர்களை கண்டறிந்து, அவர்கள் மீது தனி கவனம் செலுத்தி, சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது. திருப்பூர் மாவட்டத்தில், 151 மையங்களில், 4,048 மாணவ, மாணவியர் பயிற்சி பெற்றனர். அவர்களுக்கு, இரண்டு மாதங்களுக்கு முன் முன்னறி தேர்வு நடத் தப்பட்டது. இன்னும் ஒரு வாரத்தில் அம்மாணவர்களுக்கு பின்னறிவு தேர்வு நடத்தப்பட உள்ளது. விடைத்தாள் மதிப்பீட்டை கொண்டு, கல்வித்தரம் அறியப்படும். பத்தாம் வகுப்பில், எளிதில் அவர்கள் தேர்ச்சி பெற, இத்தேர்வு ஊக்குவிப்பதாய் அமையும், என, ஆர்.எம்.எஸ்.ஏ., திட்ட ஒருங்கிணைப்பாளர் ஜோதியப்பன் தெரிவித்தார்.

பின்தங்கிய மாணவர்களுக்கு மதிப்பீட்டு தேர்வு; இன்று துவக்கம்


மாநில அளவில் கற்றலில் பின்தங்கிய ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு, மதிப்பீட்டு தேர்வு இன்றும், நாளையும் நடக்கிறது. கோவை மாவட்டத்தில், இத்தேர்வில் 3000 மாணவர்கள் பங்கேற்கவுள்ளனர்.
ஒன்பது மற்றும், 10ம் வகுப்பு மாணவர்களின் கல்வித்தரத்தை மேம்படுத்தும் நோக்கில் தமிழகத்தில், 'அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டம்' செயல்பட்டு வருகிறது. 'ஆல் பாஸ் ' திட்டத்தின் காரணமாக, ஒன்பதாம் வகுப்பிலிருந்து, 10ம் வகுப்பு செல்லும் மாணவர்கள் பெரும்பாலும், அடிப்படை கல்வித்திறன், வாசிப்புத்திறன் இல்லாததால், 10ம் வகுப்பு பொதுத்தேர்வை எதிர்கொள்ள முடியாத காரணத்தால், இடைநிற்றல் அதிகரிப்பதும், 10ம் வகுப்பில் தோல்வி விகிதம் அதிகரிப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதை சரிசெய்யும் விதத்தில், ஒன்பதாம் வகுப்பில் கற்றலில் பின்தங்கிய மாணவர்களை, முன்னறித்தேர்வின் வாயிலாக கண்டறிந்து, நவ., 15 முதல், மூன்று மாதங்களுக்கு சிறப்பு பயிற்சிகள் வழங்கப்பட்டன. மாநிலத்தில் முதல் முறையாக, இம்மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க 2500 ரூபாய் ஊதியத்தில், தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். சிறப்பு பயிற்சி முடிந்துள்ள மாணவர்களின் கற்றல் திறனை மீண்டும் மதிப்பிடுமாறு, 'அனைவருக்கும் இடைநிலைக்கல்வி இயக்ககம்' உத்தரவிட்டுள்ளது. இத்தேர்வுக்காக, ஒரே மாதிரியான வினாத்தாள் அச்சிடப்பட்டு, பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. மதிப்பெண் பட்டியலை மாவட்ட திட்ட அலுவலகத்துக்கு அனுப்பி வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி, மாநில அளவில் இத்தேர்வுகள் இன்றும், நாளையும் அந்தந்த பள்ளிகளிலேயே நடக்க உள்ளது. மாணவர்களின் கற்றல் திறன் மதிப்பீடு செய்யப்பட்டு, பத்தாம் வகுப்பில், ஆரம்பம் முழுவதும் தனி கவனம் செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது. 'அனைவருக்கும் இடைநிலைக்க கல்வி திட்ட' மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முத்துமாணிக்கம் கூறுகையில், ''தேர்வுக்கான வினாத்தாள்கள் பள்ளிகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில், 3000 மாணவர்களுக்கு சிறப்புப் பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன. இம்மாணவர்கள், ஏப்., 1, 2 தேதிகளில் தேர்வில் பங்கேற்பர். மாணவர்களின் விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யப்பட்டு, அறிக்கை தலைமை அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப்படும்,'' என்றார்.

அங்கீகாரம் ரத்தாகும் பள்ளிகளில் 'அட்மிஷன்?'; ஆய்வு செய்ய ஏ.இ.ஓ.,க்களுக்கு உத்தரவு

நடப்புக் கல்வியாண்டில், அங்கீகாரம் ரத்தாகும் நிலையில் உள்ள பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை நடப்பதாக எழுந்த புகாரின் அடிப்படையில், அந்தந்த பள்ளிகளில் ஆய்வு மேற்கொள்ள, உதவி தொடக்க கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
தனியார் பள்ளிகளின் அங்கீகாரம் சார்ந்த விஷயத்தில், பள்ளிக்கல்வித்துறை பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கடந்த கல்வியாண்டின் இறுதியில், மாநில அளவில் 900 பள்ளிகள் மூடப்பட்டன. இக்கல்வியாண்டில், 1000 பள்ளிகள் மூடப்படலாம் என, வட்டாரங்கள் தெரிவித்துள்ளது. இந்நிலையில், மூன்று கட்ட எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பப்பட்டும், அங்கீகாரம் பெறாமல் விதிமுறைகளை மீறி, சில தனியார் பள்ளிகள் மாணவர் சேர்க்கை நடத்துவதாக புகார் எழுந்துள்ளது. பொதுமக்களும், பள்ளிகளின் நிலை அறியாமல், மாணவர்களை சேர்த்து செல்கின்றனர். இப்பள்ளிகளுக்கு, ஏப்., 22 வரை மட்டுமே கால அவகாசம் வழங்கப்பட்டுள்ள நிலையில், இனிமேலும் பள்ளி அங்கீகாரம் கிடைப்பதற்கு வாய்ப்புகள் குறைவு.
கோவை மாவட்டத்தில், தற்போது 70 நர்சரி, பிரைமரி, மெட்ரிக் பள்ளிகள் அங்கீகாரம் ரத்து செய்யும் பட்டியலில் உள்ளன. இப்பள்ளிகளின், பெயர்கள் மற்றும் விபரங்கள் கால அவகாசம் முடிந்த பின் முறைப்படி கல்வித்துறையால் வெளியிடப்படும். இதற்கு முன், மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டால், கல்வியாண்டு துவக்கத்தில் பிரச்னைகள் ஏற்படும்.இதனால், அங்கீகாரம் ரத்து செய்யப்படவுள்ள பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடக்கிறதா, என்பதை கண்காணிக்க அந்தந்த பகுதிகளை சேர்ந்த உதவி தொடக்க கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், விதிமுறைகளை மதிக்காமல், மாணவர்கள் சேர்க்கை நடத்தும் பள்ளி நிர்வாகத்தின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. பெற்றோர்கள், விழிப்புணர்வுடன் செயல்பட மாவட்ட கல்வி அலுவலர் கன்னிகா அறிவுறுத்தியுள்ளார்.


விடுதி மாணவருக்கு போட்டி தேர்வுக்கு பயிற்சி நடத்தப்படுமா?


அரசு விடுதிகளில், தங்கி பயிலும் மாணவர்களை, போட்டித்தேர்வுகளுக்கு தயார்படுத்தும் விதமாக, சிறப்பு வகுப்புகளை ஏற்பாடு செய்ய வேண்டும்' என, கோரிக்கை எழுந்துள்ளது. தமிழகத்தில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் கீழ், மாணவர்கள் தங்கும் விடுதிகள் செயல்படுகின்றன; இவற்றில், ஆயிரக்கணக்கான மாணவர்கள் தங்கி உள்ளனர். 

மாணவர்களின் எதிர்காலம் பாதிப்பு : பெரும்பாலான விடுதி மாணவர்களால், படித்து முடித்தவுடன், போட்டித் தேர்வுகள், வேலைகளுக்கான நேர்காணலில் சிறப்பாக செயல்பட முடிவதில்லை. இதனால், அவர்களின் எதிர்காலம், பாதிக்கப்படுகிறது. எனவே, விடுதிகளில் தங்கியுள்ள, கல்லூரி மாணவர்களுக்கு, போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் நடத்த வேண்டும் என, அவர்கள் தரப்பிலிருந்து கோரிக்கை எழுந்துள்ளது. 

இதுகுறித்து, நலத்துறை அதிகாரிகள் கூறியதாவது: இப்பிரச்னையை தவிர்ப்பதற்காகவே, நல விடுதிகளில் ஆங்கில பயிற்சி முகாம் நடத்தப்படுகிறது. இதன் மூலம், ஓரளவுக்கு ஆங்கிலத்தில் பேசவும், எழுதவும் கற்றுக் கொடுக்கப்படுகிறது. மேலும், போட்டி தேர்வுகளுக்கு தயாராக தேவைய ான பல நூல்கள் விடுதிகளில் உள்ளன. அதில், சந்தேகம் இருந்தால், விடுதி காப்பாளரிடம் கேட்டு, சந்தேகத்தை பூர்த்தி செய்ய, உத்தரவிடப்பட்டுள்ளது. இது, மாணவர்களின் பயத்தை போக்கி, போட்டித்தேர்வுகளுக்கு, தயார்படுத்தும்.
இவ்வாறு, அவர்கள் கூறினர். அதிகாரிகள் இவ்வாறு கூறினாலும், நூலகங்களில் போட்டித் தேர்வுகளுக்கு தயார்படுத்தும், நூல்கள் இருப்பதில்லை. அவ்வாறு இருந்தாலும், விடுதி மாணவர்கள், எளிதில் பயன்படுத்த 
முடியாத இடத்தில் உள்ளன. மேலும், பெரும்பாலான நேரங்களில், விடுதி காப்பாளரை காண்பதே அரிது எனவும் கூறப்படுகிறது. எனவே, சிறப்பு பயிற்சி வகுப்பு அளித்தால் மட்டுமே, மாணவர்களின் எதிர்காலம், சிறப்பாக அமையும் என, மாணவர்கள் தரப்பில் கூறப்படுகிறது.

பிளஸ் 2 தொழிற்கல்வி பாட விடைத்தாள்கள் திருத்தும் பணி: 66 மையங்களுக்கும் விரிவாக்கம்


கடந்த ஆண்டு வரை, பிளஸ் 2, தொழிற்கல்வி பாட விடைத்தாள்கள், ஒரு சில மையங்களில் மட்டும் திருத்தப்பட்டன. இந்த ஆண்டு, 66 மையங்களிலும் திருத்துவதற்கு, தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது. இதற்கு, மேல்நிலைப்பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் கழகம், வரவேற்பு தெரிவித்துள்ளது.
சங்கத்தின் பொதுச் செயலர், ஜனார்த்தனன் வெளியிட்ட அறிவிப்பு: ஒரு சில மையங்களில் மட்டும், தொழிற்கல்வி பாட விடைத்தாள்கள் திருத்தப்பட்டதால், மாநிலத்தின் பல பகுதிகளில் இருந்து, குறிப்பிட்ட மையங்களுக்கு, ஆசிரியர்கள் செல்லும் நிலை இருந்தது. மற்ற பாடங்களைப் போல், தொழிற்கல்வி பாட விடைத்தாள்களை, அனைத்து மையங்களிலும் திருத்த வேண்டும் எ ன, பல ஆண்டுகளாக போராடி வருகிறோம். முதல்முறையாக, இந்த ஆண்டு, கணக்குப் பதிவியல், தணிக்கையியல், அலுவலக மேலாண்மை, வணிகவியல், கணக்குப் பதிவியல் ஆகிய விடைத்தாள்களை, 66 மையங்களிலும் திருத்துவதற்கு, தேர்வுத் துறை உத்தரவிட்டு உள்ளது. விவசாயம், பொறியியல், சுகாதாரம், தட்டச்சு போன்ற பாட தேர்வுகள், இரு மையங்களில் மட்டும் திருத்தப்பட்டு வந்தன. தற்போது, எட்டு மையங்களாக விரிவுபடுத்தப்பட்டு உள்ளன.
பல ஆண்டு கோரிக்கையை, இந்த ஆண்டு நிறைவேற்றிய தேர்வுத் துறையின் செயலை வரவேற்கிறோம்.
இவ்வாறு, அவர் கூறி உள்ளார். தமிழகத்தில், பிளஸ் 2 தேர்வு, கடந்த மாதம் 3ல் துவங்கி, 25ல் முடிவடைந்துள்ளது.

சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 தேர்வு தள்ளி வைப்பு


சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 தேர்வில், 30 பாட தேர்வுகள், லோக்சபா தேர்தல் காரணமாக, இம்மாதம் இறுதிக்கு, தள்ளிவைக்கப்பட்டு உள்ளன. இந்த தகவலை, மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ.,), அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது. நாடு முழுவதும், சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு, மார்ச் 1ல் துவங்கியது. 10ம் வகுப்பு தேர்வு மட்டும், ஏற்கனவே திட்டமிட்டபடி, கடந்த மாதம், 19ம் தேதியுடன் முடிந்துவிட்டது. பிளஸ் 2 தேர்வு, ஏப்., 17ம் தேதி வரை நடப்பதாக, ஏற்கனவே அட்டவணை வெளியிடப்பட்டு இருந்தது. இந்நிலையில், தேர்தல் காரணமாக, 30 பாடங்களுக்கான தேர்வுகள், இம்மாதம், 19, 21, 22, 25 ஆகிய தேதிகளுக்கு, தள்ளிவைக்கப்பட்டு உள்ளதாக, சி.பி.எஸ்.இ., தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர், ஷர்மா அறிவித்து உள்ளார். உருது விருப்பப்பாடம் உள்ளிட்ட, எட்டு தேர்வுகள், ஏப்., 9க்குப் பதில், 25ம் தேதி நடக்கிறது; ஏப்., 10ம் தேதி நடக்க இருந்த, சமூக அறிவியல் உள்ளிட்ட, நான்கு தேர்வுகள், 21ம் தேதிக்கு, தள்ளிவைக்கப்பட்டு உள்ளது; 12ம் தேதி நடக்க இருந்த, தத்துவவியல் உள்ளிட்ட தேர்வுகள், 19ம் தேதிக்கும்; 17ம் தேதி நடக்க இருந்த, வேளாண்மை, ஓவியம், "கிராபிக்ஸ்' உள்ளிட்ட தேர்வுகள், 22ம் தேதிக்கும், தள்ளிவைக்கப்பட்டு உள்ளன.

பொது தேர்வு முடிவை வெளியிடுவதற்கு தேர்தல் தடையாக இருக்காது: தேர்வுத் துறை


பொதுத்தேர்வு முடிவுகளை வெளியிடுவதற்கு, தேர்தல் தடையாக இருக்காது. தேர்வு முடிவு வெளியானதும், முடிவை வெளியிடுவோம்' என, தேர்வுத் துறை வட்டாரம் தெரிவித்தது. பிளஸ் 2 மொழிப்பாட விடைத்தாள்கள் திருத்தி முடிக்கப்பட்டு, ஆங்கில விடைத்தாள்கள் திருத்தும் பணி, நடந்து வருகிறது. இதைத் தொடர்ந்து, இதர விடைத்தாள்கள் திருத்தப்பட உள்ளன. தமிழகத்தில், ஏப்., 24ல், லோக்சபா தேர்தல் நடக்கிறது. இதன் முடிவு, மே 16ல் வருகிறது. ஓட்டு எண்ணிக்கை முடிவு வெளிவரும் வரை, தேர்தல் நன்னடத்தை விதிகள், அமலில் இருக்கின்றன. இதனால், அரசு துறைகளில் மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு பணிகளும், தேர்தல் விதிமீறல்களில் வந்துவிடுமா என, பலமுறை விசாரித்த பிறகே, நடவடிக்கை எடுக்கப்படுகிறது. பிளஸ் 2 தேர்வு முடிவு, ஏப்ரல் இறுதியிலோ அல்லது மே, முதல் வாரத்திலோ வந்துவிடும். அதேபோல், 10ம் வகுப்பு தேர்வு முடிவும், மே, 16க்குள் வெளிவர வாய்ப்பு உள்ளது.
இந்த இரு தேர்வு முடிவுகளும், தேர்தல் காரணமாக, தள்ளிப்போக வாய்ப்பு இருக்கிறதா என, தேர்வுத்துறை அதிகாரிகளிடம் விசாரித்தபோது, அவர்கள் கூறியதாவது: பள்ளி பொதுத் தேர்வு முடிவை வெளியிடுவதில், தேர்தல் விதிமீறல் இருக்காது. ஒவ்வொரு ஆண்டும், மே, முதல் வாரத்தில் தான், பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியாகிறது. சட்டசபை தேர்தலாக இருந்தாலும் சரி, லோக்சபா தேர்தலாக இருந்தாலும் சரி, பெரும்பாலும், ஏப்ரல், மே மாதங்களில் தான் நடக்கின்றன. ஆனாலும், இதற்கு முன், குறிப்பிட்ட தேதியில், தேர்வு முடிவு வெளியிடப்பட்டு உள்ளன. அரசு துறைகளில், புதிய பணி நியமனங்கள் தான் நடக்கக் கூடாது. மற்றபடி, தேர்வு முடிவை வெளியிட தடை இல்லை. இதற்கு எல்லாம் தடை என்றால், மே, இறுதியில் தான், தேர்வு முடிவை வெளியிட முடியும். பின், பொறியியல் சேர்க்கை கலந்தாய்வு உட்பட, உயர்கல்வி சேர்க்கை பணிகள் முழுவதும், ஸ்தம்பித்து விடும். எனவே, பணிகள் முடிந்ததும், பொது தேர்வு முடிவை வெளியிடுவோம். இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.

"கீ - ஆன்சர்' தயாரிக்க நான்கு குழுக்கள் : விடைத்தாள்களை திருத்துவதற்கு, பாட வல்லுனர் குழு, சரியான விடைகளை (கீ - ஆன்சர்) தயாரிக்கும். இந்த விடைகளின் அடிப்படையில் தான், ஆசிரியர், விடைத்தாள்களை திருத்துவர். வழக்கமாக, ஒவ்வொரு பாடத்திலும், ஒரு குழு தான், "கீ - ஆன்சரை' தயாரிக்கும். ஆனால், இந்த முறை, ஒவ்வொரு பாடத்திற்கும், நான்கு குழுக்களை அமைத்து, ஒவ்வொரு குழுக்களிடமும், தனித்தனியாக, "கீ - ஆன்சரை' பெற்று, நான்கையும் ஒப்பிட்டு, அதில், ஒரே விடைகளைக் கொண்டவை மட்டும் தேர்வு செய்யப்படுகின்றன. வேறுபாடு வந்தால், அதற்கான காரணங்கள் குறித்து ஆய்வு செய்து, இறுதி முடிவு எடுத்தபின், "கீ - ஆன்சர்' இறுதி செய்யப்படுகிறது.
இதனால், தேர்வு முடிவிற்குப்பின் வரக்கூடிய பிரச்னைகள் குறையும் என்றும், குறிப்பாக, மறுமதிப்பீடு கோரி, அதிக மாணவர், விண்ணப்பிக்க மாட்டர்கள் என்றும், தேர்வுத்துறை வட்டாரம் தெரிவிக்கிறது.

ஓட்டு போட்ட சின்னம் அச்சாவதை பார்க்கும் வசதி : மத்திய சென்னை தொகுதியில் அறிமுகப்படுத்த திட்டம்

தமிழகத்தில், முதன் முறையாக, சோதனை அடிப்படையில், மத்திய சென்னை தொகுதியில் மட்டும், வாக்காளர்கள் எந்த சின்னத்திற்கு ஓட்டு போட்டோம் என்பதை அறிந்து கொள்ளும் வசதி, ஏற்படுத்தப்பட உள்ளது. இது குறித்து, தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி, பிரவீண்குமார் விடுத்துள்ள அறிக்கை: தேர்தல் கமிஷன், ஓட்டுப்பதிவு இயந்திரங்களில், வாக்காளர்கள் எந்த சின்னத்திற்கு, ஓட்டு போட்டோம் என்பதை அறிந்து கொள்ளும், வசதியை (voters verifiable paper audit trial system) ஏற்படுத்த முடிவு செய்துள்ளது. தமிழகத்தில், முதன் முறையாக, நடைபெற உள்ள, லோக்சபா தேர்தலில், மதுரை, சென்னை தொகுதியில், சோதனை அடிப்படையில், இவ்வசதி ஏற்படுத்தப்பட உள்ளது. இத்தொகுதியில் உள்ள, 1,153 ஓட்டுச் சாவடிகளிலும், இவ்வசதி ஏற்படுத்தப்படும். இங்குள்ள ஓட்டுப்பதிவு இயந்திரங்களில், வாக்காளர்கள் எந்த சின்னத்திற்கு, ஓட்டு போடுகின்றனரோ, அந்த சின்னம், அருகில் உள்ள கண்ணாடியில், சில வினாடிகள் தெரியும். அதன்பின் அந்த சின்னம் அச்சாகி, இயந்திரத்திலே இருக்கும்; கையில் ஒப்புகை சீட்டு எதுவும் வராது. இதன் மூலம், ஒவ்வொரு வாக்காளரும், சரியான சின்னத்திற்கு, ஓட்டு போட்டோமோ என்பதை அறிந்து கொள்ள முடியும். இவ்வசதி ஏற்படுத்தப்பட்ட, ஓட்டுப்பதிவு இயந்திரங்களை, எவ்வாறு இயக்க வேண்டும் என, அங்குள்ள ஓட்டுச்சாவடியில் பணிபுரிய உள்ள அலுவலர்களுக்கு, சிறப்பு பயிற்சி அளிக்கப்படும். இவ்வாறு, அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய சென்னை தொகுதியில், தி.மு.க., சார்பில் தயாநிதி, அ.தி.மு.க., சார்பில், விஜயகுமார், தே.மு.தி.க., சார்பில் ரவீந்திரன், ஆம் ஆத்மி சார்பில், பிரபாகர், காங்கிரஸ் சார்பில், மெய்யப்பன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

புதிய இயந்திரங்கள் வருகை : வாக்காளர்கள் எந்த கட்சிக்கு ஓட்டு போட்டுள்ளோம் என்பதை, அறிந்து கொள்ளும் வசதியுடன் கூடிய இயந்திரம், முதன் முறையாக, நாகாலாந்து மாநில தேர்தலில், கடந்த செப்டம்பரில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதற்கு மக்களிடம் நல்ல வரவேற்பு இருந்தது. அதைத் தொடர்ந்து, பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில், 20 ஆயிரம் புதிய இயந்திரங்கள் தயாரிக்கப்பட்டன. இவை, சோதனை அடிப்படையில், பல்வேறு மாநிலங்களில், பயன்படுத்தப்படுகின்றன. தமிழகத்தில், மத்திய சென்னை தொகுதியில், இந்த இயந்திரம் அறிமுகப்படுத்தப்படுகிறது. இதற்காக, புதிய இயந்திரங்கள், நேற்று, சென்னை கொண்டு வரப்பட்டு, புளியந்தோப்பு மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில், பாதுகாப்பாக 
வைக்கப்பட்டுள்ளன.

தேர்தல் பணிக்கு வராவிட்டால் ஒழுங்கு நடவடிக்கை : அரசு ஊழியர்களுக்கு எச்சரிக்கை


தேர்தல் பணிக்கு, தேர்வு செய்யப்பட்டுள்ள ஊழியர்கள், பணிக்கு வராவிட்டால், அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி, பிரவீண்குமார் தெரிவித்தார்.

இதுகுறித்து, அவர் கூறியதாவது: தமிழகத்தில், வரும், 24ம் தேதி, 39 லோக்சபா தொகுதிகளுக்கும், ஆலந்தூர் சட்டசபை தொகுதிக்கும், ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 60,418 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. 

மின்சாரம், குடிநீர் : இனி, புதிதாக ஓட்டுச்சாவடி அமைக்கப்படாது. ஒரு ஓட்டுச் சாவடியில், அதிகபட்சம், 1,500 வாக்காளர்கள் இருப்பர். புதிதாக வாக்காளர் சேர்க்கப்படும் போது, அந்த எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது. "ஓட்டுச் சாவடிகளில், மின்சாரம், குடிநீர், கழிப்பறை வசதி இருக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோருக்காக, படிக்கட்டு அருகே சாய்தளம் அமைக்க வேண்டும்' என, அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. நிரந்தரமாக, சாய்தளம் அமைக்க முடியாத ஓட்டுச் சாவடிகளில், தற்காலிக சாய்தள வசதி ஏற்படுத்த வேண்டும். தேர்தலுக்காக, 70 ஆயிரம் கன்ட்ரோல் யூனிட்கள், 1.25 லட்சம் ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் தயார் நிலையில் உள்ளன. ஒரு தொகுதியில், அதிகபட்சமாக, 63 வேட்பாளர்கள் போட்டியிட்டால், நான்கு ஓட்டுப்பதிவு இயந்திரங்களை பயன்படுத்த முடியும். அதற்கு மேல், வேட்பாளர்கள் போட்டியிட்டால், ஓட்டுச்சீட்டு பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்படும். கூடுதல் ஓட்டுப்பதிவு இயந்திரம் தேவைப்பட்டால், கேரளா, கர்நாடகம் என, அருகில் உள்ள மாநிலங்களில் இருந்து வரவழைக்கப்படும். தேர்தல் பணியில், 3 லட்சம் அரசு ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். அவர்களுக்கு, முதல் கட்ட பயிற்சி முடிக்கப்பட்டுள்ளது. இரண்டாம் கட்ட பயிற்சி, வேட்பாளர்களுக்கு சின்னம் ஒதுக்கப்பட்டதும் நடத்தப்படும்.

ஒழுங்கு நடவடிக்கை : மூன்றாவது கட்ட பயிற்சி, ஓட்டுப்பதிவுக்கு முந்தைய நாள் நடைபெறும். தேர்தல் பணிக்கு தேர்வு செய்யப்பட்ட ஊழியர், பணிக்கு வராமல் இருந்தால், அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். அவர் மீது, குற்ற வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கவும், மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் விதிகள் உள்ளன. இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

ஆசிரியர் குடும்பங்களின் ஒரு லட்சம் ஓட்டுகள் கட்சிகளுக்கா, நோட்டோவுக்கா?

சம்பள முரண்பாட்டிற்கு தீர்வு காண வலியுறுத்தி, பல்வேறு போராட்டங்களை நடத்தி வரும், இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர் இயக்கத்தினரின், குடும்பத்தினர் ஒரு லட்சம் பேர், லோக்சபா தேர்தலில், 'நோட்டா'விற்கு ஓட்டு போட முடிவு செய்துள்ளனர்.

தமிழகத்தில், ஐந்தாவது சம்பள கமிஷன் அடிப்படையில், இடைநிலை ஆசிரியர்களின் அடிப்படை சம்பளம் 6,750 ரூபாய் என, நிர்ணயிக்கப்பட்டது. பட்டதாரி ஆசிரியர்களுக்கு 9,000 ரூபாயாகவும், முதுகலை ஆசிரியர்களுக்கு 10,500 ரூபாயாகவும் இருந்தது.இதன்பின் அமல்படுத்தப்பட்ட ஆறாவது சம்பள கமிஷனில், இடைநிலை ஆசிரியர்கள் அடிப்படை சம்பளம், 5,200 ரூபாயாகக் குறைக்கப்பட்டது. பட்டதாரி மற்றும் முதுகலை ஆசிரியர்கள் சம்பளம், உரிய விகிதத்தில் அதிகரிக்கப்பட்டது. இதற்கு, இடைநிலை ஆசிரியர்கள் எண்ணிக்கை அதிகம் இருந்ததாக, அப்போது காரணம் கூறப்பட்டது.

ஆனால், தி.மு.க., ஆட்சியின் போது, மாநில அரசை எதிர்த்து, கோர்ட்டிற்கு சென்ற இடைநிலை ஆசிரியர்கள், 'மாநில மூப்பு அடிப்படையில் பணி நியமனம் செய்ய வேண்டும்' என்ற கோர்ட் உத்தரவு பெற்றதற்காக, பழிவாங்கும் நோக்கில் சம்பளத்தில், 'கை' வைக்கப்பட்டதாக புகார் எழுந்தது.இதில், 7,000 ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டனர். பல்வேறு போராட்டங்கள் நடத்தியும், இதுவரை அவர்கள் கோரிக்கைகள் கண்டுகொள்ளப்படவில்லை. பின், அ.தி.மு.க., ஆட்சியின் போது, ஆசிரியர் தகுதி தேர்வு தேர்ச்சி பெற்ற, 9,564 இடைநிலை ஆசிரியர்கள், 2012ல் நியமனம் செய்யப்பட்டனர். அவர்களுக்கும், 5,200 என்று தான் அடிப்படை சம்பளம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இப்பிரச்னையில், தமிழகம் முழுவதும் மொத்தம், 17 ஆயிரம் ஆசிரியர்கள் வரை பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தான் வரும் தேர்தலில், 'நோட்டோ'விற்கு (யாருக்கும் ஓட்டளிக்கவில்லை) ஓட்டளிக்க முடிவு செய்துள்ளனர்.