கடலூர் மாவட்டத்தில், பெண் கல்வியில், பின்தங்கிய மூன்று ஒன்றியங்களில், கல்வித் தரத்தை மேம்படுத்தும் பொருட்டு, புதிதாக விடுதி அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டத்தில், கடலூர், அண்ணாகிராமம், பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி, காட்டுமன்னார்கோவில், குமராட்சி உட்பட 13 ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன. எந்தெந்த ஒன்றியங்களில் அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில், பயிலும் மாணவிகள், கல்வியில் பின் தங்கியுள்ளனர் என்பது குறித்து கல்வித்துறை அதிகாரிகள் கணக்கெடுப்பு நடத்தினர்.
அதில், மங்களூர், நல்லூர், பண்ருட்டி உள்ளிட்ட மூன்று ஒன்றியங்களில், பெண்கள், கல்வியில் மிகவும் பின் தங்கியிருப்பது கணக்கெடுப்பில் தெரியவந்தது. இதையடுத்து, இந்த மூன்று ஒன்றியங்களிலும் பெண்களின் கல்வித் தரத்தை மேம்படுத்தும் பொருட்டு, அனைவருக்கும் இடை நிலைக் கல்வித் திட்டத்தின் கீழ், மாணவிகள் மட்டும் தங்கி படிக்க வசதியாக புதிதாக விடுதி ஏற்படுத்துவது என முடிவு செய்யப்பட்டது.
இதற்கான நிதியை மத்திய, மாநில அரசுகள் ஒதுக்கீடு செய்துள்ளது. இதுகுறித்து அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்ட அதிகாரி ஒருவர் கூறுகையில்," பெண் கல்வியில் மிகவும் பின் தங்கிய இந்த மூன்று ஒன்றியங்களிலும் புதிதாக விடுதி வசதி ஏற்படுத்துவது என, முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்காக மூன்று அரசு பள்ளி வளாகங்களில் இடம் தேர்வாகியுள்ளது. ஒவ்வொரு விடுதிக்கும் தேவையான கட்டுமானப் பணிகளுக்காக தலா இரண்டரை கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில், முதல் கட்டமாக, இரண்டு கோடியே 2 லட்சம் ரூபாய் நிதி வந்துள்ளது. கட்டுமானப் பணிகள் விரைவில் துவங்க உள்ளது.
இப்பணிகள் முடியும் வரை மாணவிகள் தற்காலிகமாக தங்க இடம் தேர்வு செய்யும் பணியும் நடந்து வருகிறது. அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் 9ம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை, பயிலும் பெற்றோரை இழந்த மாணவிகளுக்கும், கஸ்தூர்பா காந்தி பால வித்யாலயா பள்ளி மாணவிகளுக்கும் விடுதியில் தங்கி படிக்க முன்னுரிமை அளிக்கப்படும்.
இதேப் போன்று, தந்தை அல்லது தாயை இழந்த, புலம் பெயர்ந்த, பள்ளியில் இடைநின்ற மாணவிகளும் சேர்ந்து படிக்கலாம். ஒரு விடுதியில் 100 பேர், மட்டுமே தங்க அனுமதி உண்டு' என்றார்.
No comments:
Post a Comment