நேர்மையான பணியாலும், பாரபட்சமில்லா நடவடிக்கையாலும், நிர்வாகத் திறமையாலும், திருச்சி கலெக்டர் ஜெயஸ்ரீக்கு, தொடர்ந்து மூன்று முறை, தமிழக அரசின் சிறந்த கலெக்டர் விருது வழங்கப்பட்டுள்ளது. அவருக்கு, திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த, பல சமூக நல அமைப்புகளும், விவசாய அமைப்புகளும், பாராட்டு தெரிவித்துள்ளன.
தமிழகத்தில், 2011ம் ஆண்டு, அ.தி.மு.க., ஆட்சி அமைந்தது. ஜூன் மாதம், திருச்சி மாவட்ட கலெக்டராக, ஜெயஸ்ரீ பொறுப்பேற்றார். பதவியேற்ற நாளிலிருந்து இன்று வரை, மாவட்ட நிர்வாகத்தில், பல வளர்ச்சி பணிகளைச் செய்துள்ளார்; மாற்றங்களை கொண்டு வந்துள்ளார். தமிழக முதல்வர் ஜெயலலிதா, மாநிலம் முழுவதும் மரக்கன்று நடும் திட்டத்தை தீவிரப்படுத்த, கலெக்டர்களுக்கு உத்தரவிட்டார். அதன்படி, கடந்த ஆண்டு, திருச்சி மாவட்டத்தில், 1.60 லட்சம் மரக்கன்றுகள் நட, இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இலக்கை விஞ்சி, 2.10 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டன. அதேபோல, நடப்பாண்டு, 2 லட்சம் என்ற இலக்கை விஞ்சி, 8.40 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டு உள்ளன. மத்திய, மாநில விருதுகள் முதல்வர் தனிப்பிரிவு மனு மீது, துரிதமாக நடவடிக்கை எடுத்ததற்காக, திருச்சி கலெக்டர் ஜெயஸ்ரீ, தமிழக முதல்வர் ஜெயலலிதாவிடம், மூன்று முறை தொடர்ந்து, 'ஹாட்ரிக்' விருது பெற்றுள்ளார். இதற்கிடையே, 100 நாள் வேலை திட்டத்தில், ஆவணங்களை முறையாக பராமரித்ததற்காக, பிரதமர் மன்மோகன் கையால், மத்திய அரசின் விருது கிடைத்தது.
மேடையை நிராகரித்த கலெக்டர்:
திங்கட்கிழமை தோறும் மக்கள் குறைதீர் கூட்டம் நடக்கும். இந்த கூட்டத்துக்கு வரும் மாற்றுத் திறனாளிகள், கஷ்டப்பட்டு, மேடை ஏறி வந்து தான், மனு அளிப்பர். மாற்றுத் திறனாளிகள் கஷ்டப்படுவதைக் கண்ட கலெக்டர், பதவியேற்ற சில நாட்களிலேயே, மாற்றுத் திறனாளிகளுக்காக, கீழே அமர்ந்து மனு பெறுவதாகக் கூறினார். அரசு அதிகாரிகள், ஊழியர்களில் தவறு செய்பவர்கள் இருப்பர் என்பதை நன்கு உணர்ந்த கலெக்டர் ஜெயஸ்ரீ, தனக்கு கீழ் பணியாற்றுபவர் எப்படி இருக்க வேண்டும் என்பதை, அவ்வப்போது அவர்களுக்கு அறிவுறுத்துவார். மீறி யாராவது தவறு செய்தால், அவர்களை பதவி, பணியிலிருந்து தூக்கியடிக்க, சிறிதும் தயங்கமாட்டார். யார் மீது புகார் வந்தாலும், கடும் எச்சரிக்கை விடும் கலெக்டர், புகாரில் உண்மைத்தன்மை இருப்பது தெரிய வந்தால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கத் தயங்கியது இல்லை. சாதாரண மக்கள், தங்கள் மாவட்ட கலெக்டரைச் சந்திப்பது, எளிதான காரியமில்லை. ஆனால், திருச்சி கலெக்டர் ஜெயஸ்ரீயை, எப்போதும் பொதுமக்கள் சந்திக்கலாம். பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியரை கண்டால், உற்சாகமாகும் கலெக்டர், நற்சிந்தனையை தூண்டும் வகையில், அவர்களுக்கு அறிவுரை வழங்குவார்; பல இடங்களில், பாடமும் நடத்தியுள்ளார். திருச்சி மத்திய மண்டலத் தில் உள்ள, எட்டு மாவட்டங்களில், இவருடன், கலெக்டர்களாக நியமிக்கப்பட்ட பலரும், மாற்றப்பட்ட நிலையில், இவர் மட்டுமே, தொடர்ந்து, திருச்சி கலெக்டராக பணியில் உள்ளார். இதற்கு திருச்சி மாவட்ட பல்வேறு சமூக அமைப்புகளும், விவசாய அமைப்புகளும், கலெக்டருக்கு பாராட்டு தெரிவித்துள்ளன.
No comments:
Post a Comment