"பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வுக்கு விண்ணப்பிக்கும் தனித்தேர்வர்களுக்கு இனி, தனி அறை கிடையாது. பள்ளி மாணவர்களுடன் அமர்ந்து தேர்வெழுத வேண்டும்" என தேர்வுத்துறை அறிவுறுத்தியுள்ளது.
பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 தோல்வி அடைந்தவர்கள், அவர்களுக்காக நடத்தப்படும் சிறப்பு தேர்வு எழுதுவது வழக்கம். அதிலும் தோல்வியடைந்தால், அடுத்தாண்டு நடைபெறும் பொதுத்தேர்வில் பங்கேற்பர். அவர்கள் சீருடை அணிந்திருக்க மாட்டார்கள். மேலும், வயது வித்தியாசம் இருக்கும் என்பதால், தனித்தேர்வர்களுக்கு தேர்வு மையத்தில் தனியறை ஒதுக்கப்பட்டது; ஒரு மையத்தில் ஓரிரு தனித்தேர்வர் மட்டுமே தேர்வு எழுதினாலும், அவர்களுக்கு தனியறை ஒதுக்கி, தனி ஆசிரியர், கண்காணிப்பாளர் நியமிக்க வேண்டியிருந்தது.
சில நேரங்களில் அவர்கள் தேர்வுக்கு வராமல் போனால், "டியூட்டி"யை மாற்ற வேண்டிய சிரமம், கடைசி நேரத்தில் ஏற்படுவது வழக்கம். இத்தகைய சிக்கல்களை தவிர்க்க, தனித்தேர்வர்களுக்கு தனியறை வழங்க வேண்டாம் என முதன்மை கல்வி அலுவலர்களுக்கு தேர்வுத்துறை அறிவுறுத்தியுள்ளது.
கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், "தனித் தேர்வர்கள் எண்ணிக்கை குறைவாக இருப்பதால், அவர்களை தனியே பிரிக்காமல், பள்ளி மாணவர்களுடன் இணைந்து, ஒரே அறையில் தேர்வு எழுத அனுமதியுங்கள். 20 பேருக்கு அதிகமாக மாணவர்களை அமர வைக்கும்போது, ஆசிரியர்களால் கவனம் செலுத்த முடியாது. எனவே, ஒரு அறையில் 20 பேர் மட்டுமே இருக்க வேண்டும். கூடுதலாக இருந்தால், வேறொரு அறை ஏற்படுத்திக் கொள்ளலாம் என உத்தரவிட்டுள்ளது" என்று கூறினர்.
No comments:
Post a Comment