ஜப்பான் அரசின் அழைப்பின் பேரில் ஜப்பான் சென்ற உத்திரமேரூர் ஊராட்சி ஒன்றியப் பள்ளி ஆசிரியர் அன்பழகன், அங்கு மாணவர்களுக்கு அறிவியல் பாடம் நடத்திவிட்டு வந்திருக்கிறார். இந்தியாவிலிருந்து தேர்வு செய்யப்பட்ட ஒரே ஆசிரியர் இவர்தான்
ஜப்பானில் உள்ள தொடக்கப் பள்ளிக் குழந்தைகளுக்கு அறிவியல், கணிதம் ஆகிய பாடங்களைக் கற்றுத் தருவதை மேம்படுத்துவதற்காக பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சிறந்த பள்ளி ஆசிரியர்களை ஜப்பான் இன்டர்நேஷனல் கோ-ஆபரேஷன் ஏஜென்சி அழைத்தது. இந்தியா, பிஜு தீவுகள், குக் தீவு, எத்தியோப்பியா, சாலமன் தீவு, மார்ஷல் தீவு, பலூ உள்பட 11 நாடுகளைச் சேர்ந்த 12 ஆசிரியர்கள் இந்தத் திட்டத்தின்கீழ் ஜப்பான் சென்று வருவதற்காகத் தேர்வு செய்யப்பட்டனர். இந்தியாவிலிருந்து தேர்வு செய்யப்பட்ட ஒரே ஆசிரியர் என்.அன்பழகன் (வயது 39). அவர் தமிழகத்தைச் சேர்ந்தவர். அவர் உத்திரமேரூர் (1-3 வார்டு) ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி ஆசிரியர் என்பது அரசுப் பள்ளிகளுக்குப் பெருமை தரக்கூடியது.
பஞ்சாயத்துப் பள்ளி ஆசிரியரான இவர் எப்படித் தேர்வு செய்யப்பட்டார்? 2004-ஆம் ஆண்டில் மைக்ரோசாப்ட் நடத்திய ஆசிரியர்களுக்கான புராஜக்ட் சிக்ஷா பயிற்சி முகாமில் கலந்து கொண்டேன். அதன் மூலம் கம்ப்யூட்டரைப் பயன்படுத்தி மாணவர்களுக்குப் பாடங்களை நடத்துவது குறித்து அறிந்து கொண்டேன். அதனை மாணவர்களுக்கு செயல்படுத்திக் காட்டும் முயற்சியிலும் ஈடுபட்டேன். அத்துடன் பாடத்தை அனிமேஷன் மூலம் நடத்துவதற்கான பணிகளிலும் ஈடுபட்டுள்ளேன்.
மாணவர்களுக்கு அறிவியல் பாடங்களை செயல்வழிக் கற்றல் மூலம் கற்பிப்பதற்கான அட்டைகளைத் தயாரிப்பதிலும் ஈடுபட்டேன். அதற்கு பள்ளிக் கல்வித் துறையின் பாராட்டு கிடைத்தது. பள்ளி மாணவர்களுக்கான அறிவியல் கண்காட்சிகளை நடத்தியதிலும் எனது பங்கு இருக்கிறது. எனது ஊக்கத்தினால், எனது பள்ளியைச் சேர்ந்த மாணவி கலைஅரசி, வாரணாசியில் நடைபெற்ற குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் சாண எரிவாயு குறித்த ஆய்வுக் கட்டுரையை சமர்ப்பித்து விருது பெற்றார். அத்துடன் இன்ஸ்பயர் விருதும் அவருக்குக் கிடைத்தது. அத்துடன் 2011-இல் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் இனவேஷன் டீச்சர் லீடர்ஷிப் விருதும் கிடைத்தது. இதுபோன்ற காரணங்களால், இந்தியாவின் சார்பில் ஜப்பான் செல்லும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது" என்கிறார் அன்பழகன்.
ஜப்பானில் உள்ள ஹோஹைடு பல்கலைக்கழகத்துடன் இணைந்து தொடக்கப்பள்ளியில் பத்து நாட்கள் தங்கி இருந்து, அங்குள்ள மாணவர்களுடனும் ஆசிரியர்களுடனும் கற்பித்தல் முறைகள் குறித்து பரஸ்பரம் கருத்துகளைப் பரிமாறிக் கொண்டோம். பள்ளியில் இருக்கும் போது, மதிய உணவு அங்குள்ள குழந்தைகளுடன்தான். நமது உணவுகள் பற்றிய விவரங்களை ஆர்வத்துடன் கேட்ட மாணவர்கள், தாங்கள் சாப்பிடும் ஜப்பான் உணவுகள் குறித்தும் எங்களிடம் விளக்கினார்கள். தங்களது அன்பின் வெளிப்பாடாக ஒரிகாமி மூலம் காகிதத்தில் தயாரித்த பல்வேறு வேலைப்பாடுகளை என்னிடம் பரிசாகக் கொடுத்து மகிழ்ந்தார்கள். குறைந்த செலவில் பாடம் கற்பிக்கும் பொருள்களைத் தயாரித்து மாணவர்களுக்கு அறிவியல் பாடங்களை நான் விளக்கினேன். அதை அவர்கள் ஆச்சரியத்துடன் பார்த்தார்கள். அதைத் தொடர்ந்து பக்கத்தில் உள்ள ஐந்து பள்ளிகளைப் பார்வையிட்டோம்" என்ற அவர், அங்குள்ள கோளரங்கத்தையும் அருங்காட்சியகத்தையும் பார்க்கக் கிடைத்தது ஒரு நல்ல வாய்ப்பு என்று மகிழ்கிறார்.
பல்வேறு நாடுகளில் இருந்து வந்திருந்த ஆசிரியர்கள் தங்களது நாட்டுக் கல்வி முறை குறித்தும் தங்களது கற்பித்தல் முறைகள் குறித்தும் பரஸ்பரம் கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார்கள். ஜப்பானியக் கல்வி முறை உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து விளக்கப்பட்டன. ஜப்பானியர்கள் ஜப்பானிய மொழியில் பேசும் வழக்கம் கொண்டவர்கள். அதனால் அவர்கள் சொல்வதை எங்களுக்கும் நாங்கள் சொல்வதை அவர்களுக்கும் மொழிபெயர்க்க மொழிபெயர்ப்பாளர்கள் இருந்தனர். ஜப்பானில் இருந்தபோது ஸ்கைப் மூலம் தமிழகத்தில் உள்ள பல்வேறு அரசு மற்றும் ஊராட்சி ஒன்றியப் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுடன் தொடர்புகொண்டு பேசினேன். ஜப்பானிலிருந்து தமிழக ஆசிரியர் ஒருவர் பேசுவதைப் பார்த்து மாணவர்கள் ஆச்சரியப்பட்டுப் போனார்கள். ஆசிரியர்கள் ஆர்வத்துடன் உரையாடலில் பங்கேற்றனர்.
சர்வதேச ஆசிரியர்களுடன் இணைந்து ஜப்பானிய தொடக்கப் பள்ளிகளில் பாடம் கற்பிக்கும் முறையை அறிந்துகொண்டு அங்குள்ள பள்ளி மாணவர்களுக்கு பாடங்களை நடத்தும் அனுபவம் ஊராட்சி ஒன்றிய ஆசிரியரான எனக்குக் கிடைத்த அரிய வாய்ப்பு. எனது முதல் வெளிநாட்டுப் பயணமும் இதுதான். பொறுமை, நிதானம், நேர மேலாண்மை போன்றவற்றை அவர்களிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும். எனது ஜப்பான் அனுபவங்களை எனது மாணவர்களுடனும் சக ஆசிரியர்களுடனும் பகிர்ந்து வருகிறேன்" என்கிறார் ஆசிரியர் அன்பழகன்.
No comments:
Post a Comment