:“ஏழை, எளிய மக்கள் பாதிக்கப்படாத வகையில், பெட்ரோலுக்கு, இரட்டை விலை நிர்ணயம் செய்வது குறித்து, மத்திய அரசு ஆலோசித்து வருகிறது,'' என, மத்திய தொழில் மற்றும் வர்த்தகத் துறை இணை அமைச்சர், சுதர்சன நாச்சியப்பன் தெரிவித்துள்ளார்.
பெட்ரோல் மற்றும் டீசல் விலை, அவ்வப்போது உயர்த்தப்பட்டு வருகிறது. இதில், டீசலுக்கு ஏற்கனவே, இரட்டை விலை நடைமுறை
உள்ளது. ஒட்டு மொத்த கொள்முதலில் டீசல் வாங்கும் போது, கூடுதல் விலை கொடுக்க வேண்டும்.
இதன் காரணமாக, தமிழக அரசு பஸ்களுக்கு, தனியார் பெட்ரோல் 'பங்க்'குகளில், டீசல் போடப்படுகிறது. இரட்டை விலை நடைமுறையால், ரயில்வே துறையும் கடும் சிக்கலை சந்தித்து வருகிறது.
இந்த சூழ்நிலையில், சென்னையில் இருந்து, நேற்று டில்லி செல்லும் முன், சுதர்சன நாச்சியப்பன், விமான நிலையத்தில் அளித்த பேட்டி:
சர்வதேச சந்தையில், கச்சா எண்ணெய் விலை நிலவரத்திற்கு ஏற்றவாறு, பெட்ரோல், டீசல் விலை மாற்றி அமைக்கப்படுகிறது. இந்த விலை
ஏற்றத்தினால், ஏழை, எளிய மக்கள் பாதிப்படைகின்றனர்.
இதை தடுக்க, புதிய திட்டம் கொண்டு வர, மத்திய அரசு ஆலோசனை நடத்தி வருகிறது. ஏழை, எளிய மக்கள், இருசக்கர வாகனங்களைத் தான் அதிகம் பயன்படுத்துகின்றனர்.
எனவே, இருசக்கர வாகனங்களுக்கு, ஒரு விலை; கார் உள்ளிட்ட நான்கு சக்கர வாகனங்களுக்கு ஒரு விலை, என, இரட்டை விலை நடைமுறையை அமல்படுத்துவது குறித்து, மத்திய அரசு ஆலோசித்து வருகிறது.
இந்திய இலங்கை மீனவர்
பிரச்னையை தீர்க்க, மத்திய அரசு
ஆர்வமாக உள்ளது. இந்திய மீனவர்கள், இலங்கை சிறையில் உள்ளது போல், இலங்கை மீனவர்கள், தமிழகம் மற்றும் ஆந்திர சிறைகளில் உள்ளனர்.
இரு நாட்டு மீனவர்களையும் பரஸ்பரம் விடுவிக்க, இரு மாநில அரசுகளின் கருத்துகளை கேட்டு முடிவு செய்யப்படும். இருநாட்டு மீனவ பிரதிநிதிகள் பங்கேற்கும் கூட்டத்தின் தேதி குறித்து, தமிழக அரசிடம், மத்திய அரசு
கேட்டுள்ளது. பொங்கலுக்கு முன், இந்த கூட்டத்தை நடத்த, மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இவ்வாறு, சுதர்சன நாச்சியப்பன் கூறினார்.
No comments:
Post a Comment