
புதுவண்ணாரப்பேட்டையில் மாணவி இறந்த விவகாரத்தில் பள்ளி மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என உறவினர்கள், பொதுமக்கள் நேற்று சாலைமறியலில் ஈடுபட்டனர்.புதுவண்ணாரப்பேட்டை செரியன் நகரை சேர்ந்தவர் ரவி. இவரது மனைவி புவனேஸ்வரி. இவர்களது மூத்த மகள் நிவேதா (16). அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வந்தார்.கடந்த 8ம் தேதி மாலை, நிவேதா பள்ளியில் இருந்து வீட்டுக்கு வந்தார். வீட்டில் யாரும் இல்லை. இந்நிலையில், புவனேஸ்வரி கடைக்கு சென்று வீட்டிற்கு திரும்பிய போது, நிவேதா உடலில் தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தார். அருகில் இருந்த வாஷிங் மெஷினும் எரிந்தது.அவரை, புவனேஸ்வரி மற்றும் அக்கம்பக்கத்தினர் காப்பாற்ற முயன்றனர். ஆனால், அதற்குள் நிவேதா தீயில் கருகி இறந்தார். நிவேதா, வாஷிங் மெஷினில் துணிகளை போட்டு சுவிட்ச் ஆன் செய்தபோது, தீப்பிடித்து இறந்திருக்கலாம் என அனைவரும் கருதினர்.
இதுகுறித்து, புதுவண்ணாரப்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர்.இதற்கிடையே நிவேதாவின் இறுதி சடங்கில் சக மாணவிகள் பங்கேற்க பள்ளி நிர்வாகம் அனுமதி மறுத்ததால், மாலையில் மாணவிகள் அங்கு வந்தனர். அப்போது, நிவேதா சரியாக படிக்கவில்லை என ஆசிரியை ஒருவர் கடுமையாக திட்டியதாகவும், நாளை பள்ளிக்கு வரும்போது, பெற்றோரை அழைத்து வரவேண்டும் என்று கூறியதாகவும் மாணவிகள் தெரிவித்தனர்.இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் நேற்று முன்தினம் மாலை, ஆசிரியையை கண்டித்து பள்ளியை முற்றுகையிட்டனர். அவர்களை புதுவண்ணாரப்பேட்டை போலீசார் சமரசம் செய்தனர்.பின்னர், நிவேதாவின் தாய் புவனேஸ்வரி, புதுவண்ணாரப்பேட்டை போலீசில் அளித்த புகாரில், எனது மகளை பள்ளி ஆசிரியை அவதூறாக திட்டியதால் அவமானம் அடைந்து தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டாள். எனவே, பள்ளி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தார்.
போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.இந்நிலையில், நேற்று காலை நிவேதாவின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் 100க்கும் மேற்பட்டோர், பள்ளி நிர்வாகம் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க கோரியும், முறையான விசாரணை நடத்த கோரியும் வலியுறுத்தி பள்ளி அருகே திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.புதுவண்ணாரப்பேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் சமரசம் செய்தனர். ஆனால், நீதி கிடைக்கும் வரை போராடுவோம் என அவர்கள் கூறினர். இதனால், இரு தரப்புக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. சுமார் ஒரு மணி நேரத்துக்கு பிறகு போலீசார் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததால் அனைவரும் கலைந்து சென்றனர். இதனால், அப்பகுதியில் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.போலீசார், விபத்து என பதிவு செய்யப்பட்ட வழக்கை, தற்கொலை வழக்காக மாற்றி விசாரிக்கின்றனர்.
இதற்கிடையில் மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் நேற்று மதியம் 2 மணி அளவில் டிபிஐயின் பிரதான வாயிலின் அருகே கல்லூரி சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.தகவலறிந்து நுங்கம்பாக்கம் போலீசார் வந்து சாலைமறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பள்ளி கல்வித்துறை அதிகாரிகளிடம் புகார் தெரிவிக்க வேண்டும் என்று பெற்றோரும் உறவினரும் தெரிவித்தனர். ஆனால், நேற்று பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் வெளியூர் சென்றிருந்ததால், மாணவி இறந்தது தொடர்பாக அப்பகுதி உதவி கமிஷனரிடம் புகார் தெரிவிக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர். பின்னர் மறியலில் ஈடுபட்டவர்கள், நுங்கம்பாக்கம் உதவி கமிஷனர் அலுவலகம் சென்றனர். இந்த சம்பவத்தால் கல்லூரி சாலையில் நேற்று மதியம் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
No comments:
Post a Comment