சேலம் பெரியார் பல்கலையில், துணைவேந்தர் பணியிடம், நான்கு மாதங்களுக்கு மேலாகியும், நிரப்பப்படாமல் உள்ளதால், ஏராளமான பணிகள் தேக்கம் அடைந்துள்ளன. பட்டமளிப்பு விழாவும் ஒன்றரை ஆண்டுகளாக நடத்தப்படாமல் உள்ளதால், மாணவ, மாணவியர் அவதிக்குள்ளாகின்றனர்.
சேலம் பெரியார் பல்கலையில், துணைவேந்தராக இருந்த முத்துச்செழியன் பதவிக்காலம், கடந்த செப்டம்பர், 7ம் தேதியுடன் நிறைவடைந்தது. அதன் பின் புதிய துணைவேந்தரை தேர்வு செய்ய கமிட்டி அமைக்கப்பட்டு, விண்ணப்பங்கள் பெறப்பட்டன. விண்ணப்பங்களை பரிசீலித்து, அதில் மூன்று பேர் கொண்ட முதல்கட்ட பட்டியல் தயாரிக்க, இக்கமிட்டி இதுவரை மூன்று முறை கூடியுள்ளது. ஆனாலும், இன்னமும் முதல்கட்ட பட்டியல் தயாரிக்கப்படவில்லை. அரசியல் ரீதியாக வரும் நெருக்கடி உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், துணைவேந்தர் நியமனம், தாமதமாகிக் கொண்டே செல்கிறது. இதனால் பெரியார் பல்கலையில், பல்வேறு பணிகள் முடங்கி போயுள்ளது. இதே போல், பல்கலை மானியக்குழு உள்ளிட்ட நிதி நல்கை அமைப்புகளிடம் இருந்து, நிதி ஒதுக்கீடு பெறுவது உள்ளிட்ட நிர்வாக ரீதியிலான பணிகளும் தேக்கம் அடைந்துள்ளது. செப்டம்பர், 17ம் தேதியன்று, பட்டமளிப்பு விழா நடந்து வந்தது. தற்போது பட்டமளிப்பு விழா நடந்து, ஒன்றரை ஆண்டு களாகி விட்டது. துணைவேந்தர் வந்தாலும், அவர் பட்டமளிப்பு விழாவை நடத்த குறைந்தது மூன்று மாதங்களாகிவிடும். இதனால், கடந்த ஆண்டில் தேர்ச்சி பெற்றவர்கள், பட்டச்சான்று பெற காத்துக்கொண்டிருக்கும் நிலை உருவாகியுள்ளது. அதுமட்டுமின்றி, பெரியார் பல்கலை தேர்வாணையர் பணியிடமும், தொலைநிலை கல்வி இயக்குனர் பணியிடமும் காலியாக இருப்பதால், அவற்றிலும் ஏராளமான பணிகள் தேக்கம் அடைந்து உள்ளன. இதனால், துணைவேந்தர் நியமனத்தில் தமிழக அரசு, தனி கவனம் செலுத்தி, உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். பணம் மற்றும் சிபாரிசுகளுக்கு முன்னுரிமை கொடுக்காமல், தகுதி அடிப்படையில் துணைவேந்தரை நியமிக்க வேண்டும் என, ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
No comments:
Post a Comment