சக மாணவர்கள் எதிரில், முகத்தில் ஆசிரியை எச்சில் துப்பியதால், மனமுடைந்த மாணவி உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்தார். அவருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இச்சம்பவம் திருவொற்றியூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவொற்றியூர் அப்பர்சாமி கோயில் தெருவை சேர்ந்தவர் முனியாண்டி. தனியார் கம்பெனி ஊழியர். இவரது மனைவி ஷோபனா. அதே பகுதியில் உள்ள மாநகராட்சி அம்மா உணவகத்தில் வேலை பார்க்கிறார். இவர்களுக்கு பார்த்திபன் என்ற மகனும், பவித்ரா (14) என்ற மகளும் உள்ளனர். விம்கோ நகர் அருகே உள்ள ஜெயகோபால் கரோடியா அரசு மேல்நிலைப்பள்ளியில் பவித்ரா 9ம் வகுப்பு படித்து வருகிறார்.
நேற்று முன்தினம் மாலை வீட்டுக்கு பவித்ரா வந்ததும், சாப்பிட சொல்லிவிட்டு ஷோபனா வேலைக்கு சென்றுள்ளார். வீட்டில் யாரும் இல்லாத நிலையில், பவித்ரா திடீரென உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து கொண்டார். அவரது அலறல் கேட்டு அக்கம்பக்கத்தினர் வந்து தீயை அணைத்து பவித்ராவை மீட்டனர்.தகவலறிந்து திருவொற்றியூர் இன்ஸ்பெக்டர் பிரபு வந்து பலத்த தீக்காயம் அடைந்த பவித்ராவை மீட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.அதில், நேற்று முன்தினம் பள்ளியில் பவித்ராவுக்கு ரேங்க் கார்டு வழங்கப்பட்டது. அப்போது, யார் அதிக மதிப்பெண் பெற்றுள்ளனர் என கேட்டு, சக மாணவர்களுடன் பவித்ரா பேசியுள்ளார். அந்த நேரத்தில் வகுப்பில் இருந்த ஆசிரியை, பவித்ராவை அழைத்து திட்டியுள்ளார். மேலும், அவர் சாப்பிட்டு கொண்டிருந்த திராட்சையை, பவித்ராவின் முகத்தில் துப்பியுள்ளார்.
சக மாணவர்கள் முன்னிலையில் ஆசிரியை, தனது முகத்தில் எச்சில் துப்பியதால், வகுப்பறையில் பவித்ரா அழுது கொண்டிருந்தார். வீட்டுக்கு வந்தபோது தாயுடன் பேசாமல் இருந்துள்ளார். அதைப்பற்றி, ஷோபனா கேட்டபோது, எதுவும் கூறவிலை.இதைதொடர்ந்து தாய் வெளியே சென்றதும் தீக்குளித்துள்ளார் என தெரியவந்துள்ளது.இதுகுறித்து ஷோபனாவின் உறவினர்கள், சம்பந்தப்பட்ட ஆசிரியை மீது போலீசில் புகார் செய்துள்ளனர். புகாரின்பேரில் போலீசார் விசாரிக்கின்றனர்.பள்ளி மாணவர்களை மென்மையாக நடத்த வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது. ஆனால், இதுபோன்று சில ஆசிரியைகள் கடினமாக நடந்து கொள்வதால், ஆசிரியர்கள் அனைவருக்கும் கெட்ட பெயர் ஏற்படுகிறது. இந்த புகாரை போலீசார் பதிவு செய்ய மெத்தனம் காட்டுகின்றனர். மாணவி உயிருக்கு ஆபத்து நேர்ந்தால் மட்டுமே, ஆர்ப்பாட்டம், போராட்டம் நடத்திய பிறகு நடவடிக்கை எடுப்பார்கள் என அப்பகுதியினர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment