கோவை, அரசு கலைக் கல்லூரி, தமிழ்த்துறை சார்பில் நடக்கும், 'திருக்குறள் உரைவளம்' பயிலரங்க நிறைவு விழா செய்தி சேகரிக்க, பத்திரிகைகளுக்கு, எழுத்துப்பிழைகளுடன் அழைப்பிதழ் அனுப்பப்பட்டது.
அரசு கலைக்கல்லூரியில், 'திருக்குறள் உரைவளம்' என்ற தலைப்பில், பத்து நாள் பயிலரங்கம் கடந்த 3ம் தேதி துவங்கியது. திருக்குறள் உரைகள் குறித்து, தமிழ் பேராசிரியர்கள் 20 பேர் ஆய்வுரை, கட்டுரைகள் சமர்ப்பித்துள்ளனர். பயிலரங்க நிறைவு விழா, கல்லூரி வளாகத்தில் இன்று (12ம் தேதி) காலை 10:00 மணிக்கு நடக்கிறது. செய்தி சேகரிக்க, பத்திரிகை அலுவலகங்களுக்கு அழைப்புக் கடிதம் கொடுக்கப்பட்டது.அதில், திருக்குறள் என்பதற்கு பதிலாக, 'திருக்குறல்' எனவும்; விழா என்பதற்கு, 'வழா' எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது. கடிதத்தின் இறுதியில், பணிந்து என்பதற்கு பதிலாக, 'பணிந்தது' என இருந்தது. மேலும், விழா தேதி, 12.2.2014 என்பதற்கு பதிலாக, 12.2.1014 என, குறிப்பிடப்பட்டிருந்தது.
இதுபற்றி, கல்லூரி தமிழ்த்துறை இணை பேராசிரியர் துரையிடம் கேட்டபோது, ''நிறைவு விழாவுக்கு அழைப்பு கடிதம் தயாரிக்கும் பொறுப்பு மாணவி ஒருவரிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர் கொண்டு வந்த கடிதத்தில் கையெழுத்து மட்டும் போட்டேன். தவறு இடம் பெற்றிருந்ததை கவனிக்கவில்லை' என்றார். ஆறு வரி அழைப்பு கடிதத்திலேயே இவ்வளவு பிழைகள் என்றால், மாணவர்களிடம் தமிழ் வளம் எவ்வாறு மேம்படும் என்கின்றனர், விவரமறிந்த ஆசிரியர்கள்.
No comments:
Post a Comment