"லோக்சபா தேர்தல் முடியும் வரை, துறை தொடர்பான தகவல்களை யாரிடமும் பகிர்ந்து கொள்ள வேண்டாம்' என, அரசு அதிகாரிகளுக்கு, ரகசிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் நிதித்துறை, உள்துறை, வேளாண்துறை, கால்நடைத்துறை, கூட்டுறவு, போக்கு வரத்து, மின்சாரம், பொதுப் பணித்துறை உட்பட, 27 முக்கிய துறைகளும், அதனை சார்ந்து, சில சிறிய துறைகளும் உள்ளன. இவற்றுக்கு துறை வாரியாக அமைச்சர்கள் உள்ளனர். நிர்வாக காரணங்களுக்காக, சில அமைச்சர்களிடம், கூடுதலாக துறைகள் ஒதுக்கீடு செய்யப் பட்டு உள்ளன. ஒவ்வொரு துறைக்கும், ஐ.ஏ.எஸ்., அந்தஸ்தில், செயலர்கள், கூடுதல் செயலர்கள், சிறப்பு செயலர்கள், கமிஷனர் உள்ளிட்ட அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
ஆட்சி மற்றும் தங்களின் பதவி நலன் கருதி, துறை தொடர்பான செய்திகளை அமைச்சர்கள் வெளியிடுவது இல்லை. அதனால், அதிகாரிகளிடம் இருந்து இத்தகவல்கள் வெளியிடப்படுகின்றன.
பத்திரிகைகள் மற்றும் மீடியாக்கள், அதிகாரிகளிடம் இருந்து, தகவல்களை பெற்று சிறப்பு செய்திகளை வெளியிடுவது வழக்கம். அரசின் திட்டங்கள் மக்களை சென்று சேரும் வகையில்,
அதிகாரிகள் கூறும் தகவல்கள் இடம் பெறும். மக்கள் பிரச்னைகள் குறித்து எழுப்பப்படும் கேள்வி களுக்கும், அவ்வப்போது அதிகாரிகள் பதிலளிப்பது வழக்கம். ஆனால், லோக்சபா தேர்தல் நேரம் என்பதால், தேர்தல் முடியும் வரை, துறை தொடர்பாக எதுவும் பேசக்கூடாது என, அதிகாரிகளுக்கு, வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளதாக தெரிகிறது. அதனால், பத்திரிகைகள், மீடியாக்களை பார்த்தாலே, ஒதுங்கும் அளவிற்கு அதிகாரிகள் அடக்கி வாசிக்க துவங்கி உள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன் வரை பட்ஜெட் தயாரிப்பு பணியில் இருப்பதாக, அதிகாரிகள் கூறி வந்தனர். பட்ஜெட் வெளியாகி விட்ட நிலையில், முகாம் வேலைகள் இருப்பதாக கூறி, ஒதுங்குகின்றனர். அலுவலகங்களுக்கு சென்றாலும், அவர்களை சந்திக்க முடிவதில்லை. "தேர்தல் நேரம் என்பதால், எதுவும் பேசக்கூடாது' என, சில அதிகாரிகள் வெளிப்படையாக கூறுகின்றனர்.
No comments:
Post a Comment