தலைமை ஆசிரியைக்கு காதலர் தின "மெசேஜ்' அனுப்பிய அதே பள்ளி ஆசிரியரை, ஆய்வுக்கு சென்ற உதவி தொடக்க கல்வி அலுவலர் முன், தலைமை ஆசிரியை மகன் அடித்து உதைத்தார்.
சிவகங்கை, திருப்புவனம் அருகே தவத்தாரேந்தல் துவக்க பள்ளி தலைமை ஆசிரியை நித்யகல்யாணி. இங்கு 2 ஆசிரியை,2 ஆசிரியர்கள் உள்ளனர். இதில், ஆசிரியர் வேதமுத்து, காதலர் தினத்தன்று, தலைமை ஆசிரியை மொபைல் எண்ணிற்கு காதலர் தின "மெசேஜ்' அனுப்பியுள்ளார். இதற்கு, எதிர்ப்பு தெரிவித்த நித்யகல்யாணி, உதவி தொடக்க கல்வி அலுவலர் கவிதாவிடம் புகார் தெரிவித்தார்.இது குறித்து துறை ரீதியான விசாரணை நடந்து வருகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம்உதவி தொடக்க கல்வி அலுவலர் கவிதா, தவத்தாரேந்தல் பள்ளிக்கு விசாரணைக்கு சென்றார். அப்போது, தலைமை ஆசிரியை மகன், ஆசிரியர் வேதமுத்துவை தாக்கினார். ஆத்திரத்தில் அருகே கிடந்த இரும்பு கம்பியை கொண்டு தாக்க முற்பட்டதில், சக ஆசிரியர்கள் தடுத்தனர்.ஆசிரியைக்கு காதல் "மெசேஜ்' என்பதால், அடி உதை வாங்கிய ஆசிரியர் தரப்பில் போலீசில் புகார் செய்யவில்லை.
ஆசிரியர் வேதமுத்து கூறுகையில், "காதலர் தின "மெசேஜ்' தவறுதலாக, தலைமை ஆசிரியைக்கு சென்றுவிட்டது. மன்னிப்பு கேட்ட பின்பும், புகார் தெரிவித்ததால், துறை ரீதியான விசாரணை நடக்கிறது. அவரது மகன் வந்து தாக்கியது குறித்து புகார் தெரிவிக்கவில்லை, என்றார்.
தலைமை ஆசிரியை நித்யகல்யாணி கூறுகையில், "எங்கடா செய்தி கிடைக்கும்னு அலையாதீங்க. கல்வித்துறைக்குள்ளான பிரச்னை நாங்க தீர்த்து கொள்வோம். தவத்தாரேந்தல் ஊருக்கு பஸ் வசதி கேட்டு செய்தி வெளியிடுங்கள், என்றார்.
உதவி தொடக்க கல்வி அலுவலர் கவிதா கூறுகையில், "காதலர் தின "மெசேஜ்' அனுப்பியது உண்மை. பள்ளியில் விசாரித்த போது, தலைமை ஆசிரியை மகன், அந்த ஆசிரியரை தாக்கியது குறித்து உயர் அதிகாரியிடம் புகார் தெரிவித்துள்ளேன், என்றார்.
மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் சுப்பிரமணியன் கூறுகையில், "மேலவெள்ளூர் பள்ளி பிரச்னை மட்டும் கவனத்திற்கு வந்தது. அந்த ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க மேலிட அதிகாரிக்கு அனுப்பியுள்ளேன், என்றார்.
மேலும், இதே போன்று கழுகேர்கடை பள்ளியில், ஆசிரியர் மீது, சக ஆசிரியைகள், பாலியல் தொந்தரவு; வக்கிர பார்வை,வார்த்தையால் தீ(சீ)ண்டுகிறார் என தெரிவித்த புகாருக்கு, துறை ரீதியான விசாரணை நடக்கிறது.
No comments:
Post a Comment