Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Wednesday, 5 February 2014

புகைப்பழக்கம்: இந்தியாவில் நுரையீரல் புற்றுநோய் பாதிப்பு அதிகரிப்பு

இந்தியாவில் புகைப்பிடிப்போரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் நுரையீரல் புற்றுநோயாளிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது என அடையாறு புற்றுநோய் மருத்துவமனையின் இயக்குநர் டாக்டர் சாந்தா தெரிவித்தார்.
வாய் புற்றுநோயைத் தடுப்பது குறித்த ஒருநாள் கருத்தரங்கம் அடையாறு புற்றுநோய் மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை (பிப்.4) நடைபெற்றது. இந்திய பல் மருத்துவர்கள் சங்கத்துடன் இணைந்து இந்தக் கருத்தரங்கம் நடத்தப்பட்டது. இதில், சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களைச் சேர்ந்த 13 மருத்துவக் கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் டாக்டர் சாந்தா பேசியது:
புற்றுநோய் குறிப்பிட்ட வயதினரைத்தான் தாக்கும் என்பது இல்லை. சத்தமின்றி எல்லா வயதினரையும் புற்றுநோய் தாக்குகிறது. எனவே, உடலில் வழக்கத்துக்கு மாறாக எந்த அறிகுறிகள் தென்பட்டாலும் உடனே அதனைப் பரிசோதிக்க வேண்டும். அலட்சியமாக இருக்கக்கூடாது. ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்தால் 90 சதவிதம் வாய்ப்புற்றுநோயை குணப்படுத்தலாம்.
தமிழகத்தில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டோரில் 60 சதவிதத்தினர் வாய் புற்றுநோய், மார்பகப் புற்றுநோய், கர்ப்பப்பை வாய் புற்றுநோய் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு முயற்சியால் தொற்று நோய்களின் பாதிப்பு வெகுவாக குறைந்துவிட்டது. ஆனால் தொற்றா நோய்களான இதயநோய், சர்க்கரை நோய், புற்றுநோய் ஆகியவற்றின் பாதிப்பு அதிகரித்துள்ளது. வாழ்க்கை முறை மாற்றமே இதற்கு முக்கியக் காரணமாகும்.
புகைப்பிடிக்கும் பழக்கம் அதிகரித்து உள்ளதால் வாய் புற்றுநோயைக் காட்டிலும் நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்தியாவில் நான்காவது இடத்தில் இருந்த நுரையீரல் புற்றுநோயாளின் எண்ணிக்கை இன்று முதல் இடத்திற்கு வந்துள்ளது என்று அவர் தெரிவித்தார். இந்திய பல் மருத்துவர் சங்கத்தின் தலைவர் டாக்டர் ரங்கராஜன் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment