தேர்தல் நெருங்குவதையொட்டியும், மத்தியில் ஆளும், ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் பதவிக் காலம், அடுத்த இரு மாதங்களில், முடிவடைய உள்ளதாலும், மத்திய அரசு ஊழியர்களுக்கான பல்வேறு சலுகை அறிவிப்புகளை, அரசு வெளியிட்டுள்ளது. அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி, 10 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளதுடன், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி திட்டத்தில், மாத ஓய்வூதியத்தை, குறைந்தபட்சம், 1,000 ரூபாய் வழங்கவும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
பல திட்டங்களுக்கு ஒப்புதல்:
இன்னும் ஒரு சில வாரங்களில், லோக்சபா தேர்தலுக்கான அறிவிப்புகள் வெளிவரவுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டால், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்து விடும். அதன் பின், மத்திய அரசு ஊழியர்களுக்கோ, பொதுமக்களுக்கோ, எந்தவிதமான சலுகை அறிவிப்புகளையும் வெளியிட முடியாது. இத்தகைய நிலையில், மத்திய அமைச்சரவை கூட்டம், பிரதமர், மன்மோகன் சிங் தலைமையில், நேற்று கூடியது. இதில், மத்திய அரசு ஊழியர்களையும், பொதுமக்களையும் கவரும் வகையிலான, பல திட்டங்களுக்கு, ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
மத்திய அமைச்சரவையில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகளாவன:
மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி, தற்போதுள்ள, 90 சதவீதத்திலிருந்து, 10 புள்ளிகள் அதிகரிக்கப்பட்டு, 100 சதவீதமாக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு பணிகளிலிலிருந்து ஓய்வு பெற்றவர்களுக்கும், இந்த அகவிலைப்படி உயர்வு பொருந்தும். இந்த உயர்வு, இந்தாண்டு ஜனவரி முதல் தேதியிலிருந்து, முன் தேதியிட்டு, அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம், மத்திய அரசின் பல்வேறு துறைகளில் பணியாற்றும் ஊழியர்கள், 50 லட்சம் பேரின் சம்பளமும், ஓய்வு பெற்றுள்ள, 30 லட்சம் பேரின் ஓய்வூதியமும், கணிசமாக அதிகரிக்கும். ஏற்கனவே, கடந்தாண்டு செப்டம்பரில், மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி, 10 சதவீதம் அதிகரிக்கப்பட்டது, குறிப்பிடத்தக்கது. இதே போல், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் (இ.பி.எப்.,) மாத ஓய்வூதியத்தை குறைந்தபட்சம், 1,000 ரூபாயாக வழங்கவும், அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்த திட்டத்தால், 20 லட்சம் ஓய்வூதியதாரர்கள், உடனடியாக பயன் பெறுவர். குறைந்தபட்ச ஓய்வூதியம் உயர்த்தப்பட்டுள்ளதால், இதற்காக, அரசுக்கு கூடுதலாக, 1,217 கோடி ரூபாய் செலவாகும். இந்த திட்டம், வரும் ஏப்ரல் முதல் தேதியிலிருந்து அமல்படுத்தப்படுகிறது.
இவை தவிர, மத்திய அமைச்சரவை, மேலும், சில திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. அவை:
* உர உற்பத்தி விலையை, டன்னுக்கு, 350 ரூபாய் உயர்த்துதல்.
* நறுமணப் பொருள் ஏற்றுமதியை ஊக்குவிக்கும் விதமாக அறிவிக்கப்பட்ட, 670 கோடி ரூபாய் திட்டம், 12வது ஐந்தாண்டு திட்டம் வரை தொடரும்.
* அரியானா, உ.பி., ஆகிய மாநிலங்களிலிருந்து, தலைநகர் டில்லிக்கான போக்குவரத்தை எளிதாக்கும் விதமாக, 6,284 கோடி ரூபாய் அளவில், ஆறு வழித் தடங்கள் உடைய, விரைவு நெடுஞ்சாலை திட்டம் அமைத்தல்.
* கர்நாடக மாநிலம், கோலாரில், 1,460 கோடி ரூபாய் மதிப்பீட்டில், புதிய ரயில் பெட்டி தொழிற்சாலை அமைத்தல்.
* நாடு முழுவதும், 54 புதிய கேந்திரிய வித்யாலயா பள்ளி அமைத்தல்; 3,500 மாதிரி பள்ளிகள் அமைத்தல்.
* நாளந்தா பல்கலை நிர்வாகத்தை ஒழுங்குபடுத்துதல்
* நஷ்டத்தில் இயங்கும் இந்துஸ்தான் டெலிபோன் இன்டஸ்ட்ரீஸ் நிறுவன தொழிலாளர்களுக்கு, ஊதியம் வழங்க, 200 கோடி ரூபாய் கடன் அளித்தல்.
* சுகாதார ஆய்வு திட்டத்துக்கு, 597 கோடி ரூபாய் ஒதுக்குதல்
* பார்வை திறன் குறைபாடு உள்ளவர்களுக்கான, மொபைல் போன் மற்றும் லேப்டாப் வழங்கும் திட்டத்தை செயல்படுத்துதல்.
* மாற்றுத் திறனாளிகள், மேலும் பல சலுகைகளை பெறும் வகையில், அவர்களின் வருமான வரம்பை உயர்த்துதல்.
* கிராமப்புற வேலை உறுதியளிப்பு திட்டத்தின் படி, பழங்குடியின மக்களுக்கான வேலைநாட்கள், 100லிருந்து, 150 ஆக அதிகரிப்பு.
ஒத்திவைப்பு:
'லஞ்சம் மற்றும் ஊழலை தடுக்கும் வகையில், சில சட்ட மசோதாக்களையும், சட்ட திருத்த மசோதாக்களையும், பார்லிமென்டில் நிறைவேற்ற வேண்டும்' என, காங்., துணை தலைவர் ராகுல், வலியுறுத்தி வந்தார். ஆனால், பார்லிமென்டில், அந்த மசோதக்களை நிறைவேற்ற முடியவில்லை. இதையடுத்து, ராகுலை திருப்தி படுத்தும் விதமாக, அவசர சட்டம் பிறப்பித்து, அந்த சட்டங்களை நிறைவேற்ற, மத்திய அரசும், காங்., மேலிடமும் திட்டமிட்டன. இதற்கு, நேற்றைய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்படும் என, எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இதுதொடர்பாக, முடிவெடுப்பது ஒத்தி வைக்கப்பட்டது. 'அடுத்த வாரம் நடக்கும் அமைச்சரவை கூட்டத்தில், இதற்கான முடிவெடுக்கப்படும்' என, மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
கடல் நீர் சுத்திகரிப்பு:
சென்னை மக்கள் மற்றும் தொழில் துறையினரின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், நெம்மேலி என்ற இடத்தில், கடல் நீரை குடிநீராக மாற்றும் திட்டம், கடந்தாண்டு பிப்ரவரியில் துவங்கியது. நேற்று நடந்த, பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை குழு கூட்டத்தில், இந்த திட்டத்துக்கு, 871 கோடி ரூபாய் நிதி ஒதுக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
21 நாளில் அடுத்த சிலிண்டர்!
மானிய விலையில் பெறப்படும் சமையல் காஸ் சிலிண்டர்கள், ஆண்டுக்கு, 12 சிலிண்டர்கள் பெற்றுக் கொள்ளலாம் என, கடந்த, ஜனவரி, 30ல் அனுமதி அளித்த மத்திய அரசு, பெண்களுக்கு நேற்று, கூடுதலாக ஒரு சலுகையாக, ஒரே மாதத்தில், தேவைப்பட்டால், கூடுதலாக மற்றொரு சிலிண்டர் பெற்றுக் கொள்ளலாம். அதாவது, இப்போதைய நிலையில், மாதம் ஒரு முறை தான், அதாவது, 30 நாட்களுக்கு ஒருமுறை தான், சிலிண்டர்களை பெற முடியும். அதில் சற்றே தளர்த்தி, 21 நாட்கள் முடிவடைந்த பிறகு, அடுத்த சிலிண்டருக்கு பதிவு செய்து கொள்ளலாம். இதனால், ஒரு மாதத்திற்கு, ஒரு சிலிண்டர் தான் என்ற கட்டுப்பாடு இல்லை. 21 நாட்கள் முடிவடைந்ததும், அடுத்த சிலிண்டருக்கு பதிவு செய்து கொள்ளலாம். இதற்கான அனுமதியை, மத்திய அமைச்சரவை நேற்று வழங்கியுள்ளது. எனினும், ஆண்டுக்கு, 12 சிலிண்டர்கள் தான் கிடைக்கும்; அதில், எந்த மாற்றமும் இல்லை.
ஆந்திராவில் ஜனாதிபதி ஆட்சி:
ஆந்திராவை பிரித்து, தெலுங்கானா தனி மாநிலம் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்ததை அடுத்து, இதற்கான மசோதாவும், பார்லிமென்டில், சமீபத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதையடுத்து, ஆந்திர முதல்வராக இருந்த கிரண் குமார் ரெட்டி, தன் பதவியை ராஜினாமா செய்தார். இந்நிலையில், ஆந்திராவில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த, நேற்று நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. ஆந்திர சட்டசபையின் பதவிக் காலம், வரும், ஜூன் மாதத்துடன் முடிவடைகிறது. ஆனால், தெலுங்கானா மாநில விவகாரத்தால் எழுந்துள்ள சர்ச்சையால், நான்கு மாதங்களுக்கு முன்னதாகவே, அங்கு, ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்த, அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இதை ஏற்ற, ஜனாதிபதி, பிரணாப் முகர்ஜி, ஆந்திராவில், ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்துவார்.
ஏழாவது சம்பள கமிஷனுக்கு 'ஓகே':
மத்திய அரசு ஊழியர்களின் சம்பளத்தை உயர்த்துவது குறித்து, ஏழாவது சம்பள கமிஷனுக்கு, மத்திய அமைச்சரவை, நேற்று ஒப்புதல் அளித்துள்ளது. இதனால், 50 லட்சம், மத்திய அரசு ஊழியர்கள் மற்றும், 30 லட்சம் பென்ஷன்தாரர்களின் சம்பளம் மற்றும் இதர படிகள், இன்னும், ஓராண்டிற்குள் மாற்றியமைக்க, கமிஷன் பரிந்துரை செய்யும். மத்திய அரசு ஊழியர்கள், அனைத்திந்திய பணியில் உள்ள அதிகாரிகள், யூனியன் பிரதேசங்களில் பணியாற்றும் ஊழியர்கள், இந்திய தணிக்கை மற்றும் கணக்குத்துறை அதிகாரிகள், ஊழியர்கள், ஒழுங்குமுறை அமைப்புகளின் உறுப்பினர்கள், சுப்ரீம் கோர்ட் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள், ராணுவத்தின் அனைத்து படைப்பிரிவில் பணியாற்றும் வீரர்கள், அதிகாரிகள் ஆகியோரின் சம்பளம், குறிப்பிட்ட கால இடைவெளியில் மாற்றிஅமைக்கப்படுகிறது. இதற்காக, மத்திய சம்பள கமிஷன் அமைக்கப்பட்டு, அதன் பரிந்துரையின் அடிப்படையில், சம்பளங்கள் மாற்றப்படுகின்றன. அந்த வகையில், ஏழாவது சம்பள கமிஷனை, பிரதமர், மன்மோகன் சிங், கடந்த ஆண்டு, செப்டம்பர் மாதம் அமைத்தார். சுப்ரீம் கோர்ட் ஓய்வுபெற்ற நீதிபதி, அசோக்குமார் மாத்தூர் தலைமையிலான அந்த கமிஷன், அமைக்கப்பட்ட நாளிலிருந்து, 18 மாதங்களுக்குள் அறிக்கை அளிக்கும். அதற்கான ஒப்புதலை, நேற்றைய, மத்திய அமைச்சரவை வழங்கியது. அதில், சம்பள கமிஷன் செயல்பட வேண்டியது கட்டாயமே என, வலியுறுத்தப்பட்டது.
No comments:
Post a Comment