Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Friday, 21 March 2014

ப்ளஸ் 2 தேர்வில் காப்பியடித்தவர்களின் எண்ணிக்கை பாதியாக குறைந்தது


பிளஸ் 2 தேர்வில் கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது காப்பியடித்த மாணவர்களின் எண்ணிக்கை பாதிக்கும் மேல் குறைந்துள்ளது.
கடந்த ஆண்டு காப்பியடித்ததாக மொத்தம் 397 மாணவர்கள் பிடிபட்டனர். ஆனால், இந்த ஆண்டு முக்கியப் பாடங்களுக்கான தேர்வுகள் முடிந்துள்ள நிலையில், இதுவரை 176 பேர் மட்டுமே பிடிபட்டுள்ளனர்.
அனைத்து தேர்வு மையங்களிலும் தலைமை கண்காணிப்பாளர் (தலைமை ஆசிரியர்) முதல் காவலாளி வரை வேறு பள்ளிகளிலிருந்து நியமிக்கப்பட்டனர். தேர்வு கண்காணிப்பாளர்கள் அறிமுகம் இல்லாதவர்கள் என்பதால் மாணவர்கள் தவறு செய்ய அச்சப்படுவதாக ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

இந்த ஆண்டு தேர்வு நடைமுறைகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பல்வேறு புதிய மாற்றங்களால் முதன்மைக் கண்காணிப்பாளர், தேர்வறை கண்காணிப்பாளர் என அனைவரும் மாணவர்களைக் கண்காணிப்பதில் முழுமையாக ஈடுபடுவதால் தேர்வறைகளில் மாணவர்கள் தவறு செய்வது குறைந்துவிட்டதாக அரசுத் தேர்வுகள் இயக்குநர் கே.தேவராஜன் கூறினார்.
தேர்வுகளைக் கண்காணிப்பதற்கான பறக்கும் படையினரோடு, பெரும்பாலான பள்ளிகளில் தேர்வு முடியும் வரை இருந்து கண்காணிக்கவும் தனியாக ஆசிரியர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.
முக்கியப் பாடத் தேர்வுகளைக் கண்காணிக்கும் பணியில் ஈடுபட்ட அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர் ஒருவர் கூறும்போது, விடைத்தாள் பக்கங்களின் எண்ணிக்கையை அதிகரித்திருப்பது நல்ல மாறுதல். அதன்காரணமாகவே, தேர்வறை முறைகேடுகள் இந்த ஆண்டு பெருமளவு குறைந்துள்ளதாகக் கூறினார்.
அடுத்ததாக, திங்கள்கிழமை (மார்ச் 24) பொலிடிக்கல் சயின்ஸ், நர்சிங் பாடங்களுக்கும், செவ்வாய்க்கிழமை (மார்ச் 25) கம்ப்யூட்டர் சயின்ஸ், பயோ-கெமிஸ்ட்ரி ஆகிய பாடங்களுக்கும் தேர்வுகள் நடைபெற உள்ளன. செவ்வாய்க்கிழமையோடு பிளஸ் 2 தேர்வு நிறைவடைகிறது.
12 பேர் மட்டுமே: பிளஸ் 2 முக்கியப் பாடங்களுக்கான தேர்வுகள் உயிரியல் பாடத்துடன் வியாழக்கிழமை நிறைவடைந்தன. உயிரியல் வினாத்தாள் எளிமையாக இருந்ததாக மாணவர்கள் தெரிவித்தனர். உயிரியல், வரலாறு உள்ளிட்ட 4 பாடங்களுக்கான தேர்வுகள் வியாழக்கிழமை நடைபெற்றன. இவற்றில் காப்பியடித்ததாக 12 பேர் மட்டுமே பிடிபட்டனர்.
உயிரியல் பாடத்தில் காப்பியடித்ததாக 6 மாணவர்களும், வரலாறு பாடத்தில் காப்பியடித்ததாக 5 மாணவர்களும், தாவரவியல் பாடத்தில் காப்பியடித்ததாக 1 மாணவரும் பிடிபட்டனர். வணிகக் கணிதம் பாடத்தில் காப்பியடித்ததாக யாரும் சிக்கவில்லை.

No comments:

Post a Comment