எட்டு லட்சம் மாணவ, மாணவியர் ஆவலுடன் எதிர்பார்த்த, பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள், நேற்று காலை வெளியானது. பிளஸ் 1, பிளஸ் 2 கல்வி முறை அமல்படுத்தப்பட்ட, 36 ஆண்டுகளில், முதல் முறையாக, இந்த ஆண்டு, தேர்ச்சி, 90 சதவீதத்தைத் தாண்டி, தமிழகம், அபார சாதனை படைத்தது. முதல் முறையாக, அதிகம் பேர் தேர்வாகி, புதிய சாதனைபடைத்துள்ளனர்.
தமிழகத்தில், மேல்நிலை கல்வி பாடத் திட்டம், 1978ல் அறிமுகப்படுத்தப்பட்டது. முதல் பொதுத் தேர்வு, 1980ல் நடந்தது. அதில் இருந்து, 2013 வரை நடந்த, 33 ஆண்டு பொதுத் தேர்வுகளில், ஒருமுறை கூட, பிளஸ் 2 தேர்ச்சி, 90 சதவீதத்தை எட்டியதில்லை.கடந்த மார்ச், 3 முதல், 25 வரை நடந்த பிளஸ் 2 தேர்வை, 8.21 லட்சம் மாணவ, மாணவியர் எழுதினர். இதன் முடிவை, தேர்வுத்துறை இயக்குனர், தேவராஜன், நேற்று காலை, 10:00 மணிக்கு சென்னையில் வெளியிட்டார். தேர்வெழுதிய, 8.21 லட்சம் மாணவ, மாணவியரில், 90.6 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்று, சாதனை படைத்தனர். கடந்த ஆண்டு, 88.1 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்ற நிலையில், இந்த ஆண்டு, 2.5 சதவீத மாணவர்கள் கூடுதலாக தேர்ச்சி பெற்றனர். முதல் முறையாக, இந்த ஆண்டு, 90.6 சதவீத தேர்ச்சியை தொட்டு, தமிழகம், சாதனை படைத்துள்ளது. 'இந்த ஆண்டு, பொதுத் தேர்வில், பெரிய அளவிற்கு, எந்த குளறுபடியும் நடக்காததால், தேர்ச்சி சதவீதம் அதிகரிக்கும்' என, 'தினமலர்' நாளிதழில், சமீபத்தில் செய்தி வெளியானது. 90 சதவீதம் முதல், 95 சதவீதம் வரை, தேர்ச்சி அதிகரிக்கலாம் என, தெரிவிக்கப்பட்டது. அதன்படி, முதல் முறையாக, தேர்ச்சி சதவீதம், 90ஐ தாண்டியுள்ளது.
மாணவியர் அசத்தல்
தேர்வெழுதிய, 3.78 லட்சம் மாணவர்களில், 3.30 லட்சம் பேர் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி சதவீதம், 87.4. அதே நேரத்தில், 4.43 லட்சம் மாணவியர் தேர்வெழுதியதில், 4.14 லட்சம் மாணவியர் தேர்ச்சி பெற்றனர். இவர்களின் தேர்ச்சி சதவீதம், 93.4.
சாதனையில் சரிவு:
தமிழை முதற்பாடமாக எடுத்து, மாநில அளவில்,முதல் மூன்று இடங்களைப் பிடிக்கும் மாணவ, மாணவியர் எண்ணிக்கை, பெரும்பாலும், 10க்கும் அதிகமாக இருக்கும். கடந்த ஆண்டு, 13 மாணவர்கள், முதல், மூன்று இடங்களைப் பிடித்தனர்.ஆனால், இந்த ஆண்டு, நான்கு மாணவர்கள் மட்டுமே, மூன்று இடங்களைப் பிடித்தனர்
.* கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை, வித்யா மந்திர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி, சுஷாந்தி, 1,193 மதிப்பெண் எடுத்து, முதலிடத்தைப் பிடித்தார்.
* தர்மபுரி மாவட்டம், ஸ்ரீ விஜய் வித்யாலயா மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவி, அலமேலு, 1,192 மதிப்பெண் எடுத்து, இரண்டாம் இடம் பிடித்தார்.
* நாமக்கல், கிரீன்பார்க் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர், துளசிராஜன், காஞ்சிபுரம் மாவட்டம், சென்னை அருகில் உள்ள மடிப்பாக்கம், பிரின்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி, நித்யா ஆகியோர், 1,191 மதிப்பெண் எடுத்து, மூன்றாம் இடத்தைப் பெற்றனர்.
முதல், மூன்று இடங்களில், அரசு பள்ளி, ஒன்றுகூட இடம்பெறவில்லை. இந்த ஆண்டு, அரசு பள்ளிகளில், கூடுதல் கவனம் செலுத்தப்பட்டும், அப்பள்ளி மாணவர்கள், மாநில அளவில், 'ரேங்க்' பெறாதது, கல்வித் துறையை, கவலை அடையச் செய்துள்ளது.
No comments:
Post a Comment