தமிழகத்தில் தேர்தல் பணியின் போது இறந்த, மூன்று பேரின் குடும்பத்திற்கு, தலா 10 லட்சம் ரூபாய், நிவாரண உதவி வழங்கப்படும்,'' என, தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி, பிரவீன்குமார் தெரிவித்துள்ளார்.
இது குறித்து, அவர் கூறியதாவது: கடந்த தேர்தல் வரை, தேர்தல் பணியில் ஈடுபடும் ஊழியர்கள், பணியின் போது இறந்தால், அவர்களின் குடும்பத்திற்கு, 5 லட்சம் ரூபாய், நிவாரணம் வழங்கப்பட்டது. தற்போதைய லோக்சபா தேர்தலுக்கு முன், நிவாரணத் தொகை, 10 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டது. தமிழகத்தில், லோக்சபா தேர்தல் பணியின் போது, மூன்று ஊழியர்கள் இறந்துள்ளனர். தர்மபுரி மாவட்டத்தில், சிறப்பு இளைஞர் காவல் படையை சேர்ந்த வினோத்குமார், ஓட்டுக்கு பணம் கொடுத்தவர்களை பிடிக்க, விரட்டி சென்றபோது, தரைக் கிணற்றில், தவறி விழுந்து இறந்தார். சேலம் மாவட்டத்தில், ஓட்டுப் பதிவு முடிந்த பிறகு, தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த, பள்ளித் தலைமை ஆசிரியர் தங்கராசு, மாரடைப்பால் இறந்தார். வேலூர் மாவட்டத்தில், தேர்தல் பணி முடிந்து, வீடு திரும்பிய, ஆசிரியை பூங்கொடி, ரயில் மோதி இறந்தார். இந்த மூன்று சம்பவங்களும் துரதிருஷ்டவசமானவை. அவர்களின் குடும்பத்திற்கு, தலா, 10 லட்சம் ரூபாய், நிவாரண உதவி வழங்கப்படும், என்றார்.
No comments:
Post a Comment