Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Saturday, 3 May 2014

குற்றநோக்கம் இல்லாத போது தூண்டுதலா ? மாணவி தற்கொலையில் வாலிபருக்கு ஜாமின்

பள்ளி மாணவி தற்கொலை செய்த வழக்கில், கைது செய்யப்பட்ட வாலிபருக்கு, சென்னை உயர் நீதிமன்றம் ஜாமின் வழங்கியுள்ளது. சென்னை, கிண்டியில், 9ம் வகுப்பு படித்த மாணவி, 
மார்ச் 31ல், வீட்டில் பெற்றோர் இல்லாத போது, தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கு தூண்டியதாக, 20 வயது, வாலிபர் ஒருவரை, போலீசார் கைது செய்தனர்.
மாணவி எழுதியிருந்த கடிதத்தில், "என்னை, ஒருவன் காதலித்தான். ஆனால், நான் காதலிக்கவில்லை. என்அம்மாவுக்கு அவமானம் வந்து விடக்கூடாது என, இந்த முடிவுக்கு வந்தேன். என் சாவுக்கு காரணமானவனை விடக்கூடாது. என்னால், தினமும் படிக்க முடியவில்லை' என, குறிப்பிட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட வாலிபர், ஜாமின் கோரி, தாக்கல் செய்த மனுவில், "மாணவியின் முடிவுக்கு, நான் காரணம் அல்ல. ஏப்., 1ம் தேதி முதல் சிறையில் உள்ளேன். கூலித் தொழிலாளி. பெற்றோருடன் வசித்து வருகிறேன்' என, கூறியுள்ளார்.

மனுவை விசாரித்த, நீதிபதி தேவதாஸ் பிறப்பித்த உத்தரவு: தற்கொலை செய்யும் ஒருவர், அதற்கு காரணம் என சிலரை குறிப்பிட்டு, குறிப்பு எழுதி வைத்தார் என்பதற்காக, அவர்கள் தான் குற்றவாளி என, உடனடியாக முடிவுக்கு வரக் கூடாது.தற்கொலை குறிப்பில் உள்ள விவரங்கள், இதர சூழ்நிலைகளை ஆராய்ந்து, தற்கொலைக்கு தூண்டப்பட்டதா என, கண்டுபிடிக்க வேண்டும். சாதாரணமாக ஒருவர் கிண்டல் செய்வது, திட்டுவதை, தற்கொலைக்கு தூண்டியதாக கூற முடியாது. ஏனென்றால், அதில், குற்ற நோக்கம் 
கிடையாது. ஒருவன், கோழை போல் சாகலாம். தேர்வில் தோல்வியடைந்ததற்காக, மாணவர்கள், தற்கொலை செய்வது உண்டு. அவர்கள், மனதில் தெம்பில்லை. இவர்களின் முட்டாள்தனமான மனநிலைக்கு, முடிவுக்கு, மற்றொருவரை குற்றம் காண முடியாது. இந்த வழக்கைப் பொறுத்தவரை, மனுதாரருக்கு, வயது, 20; கூலித் தொழிலாளி. மாணவியை, இவர் காதலித்துள்ளார். ஆனால், மாணவி காதலிக்கவில்லை. ஒருதலை காதல்.
தன்னால் படிப்பில் கவனம் செலுத்த முடியவில்லை என்றும் தாயாருக்கு அவமானம் வந்து விடக்கூடாது என்றும் தற்கொலை குறிப்பில் கூறியுள்ளார். சிறுமிக்கு, திடமான மனம் இல்லை. முட்டாள்தனமான முடிவுக்காக, மனுதாரரை, குற்றம் காண முடியாது. அவர் சாக வேண்டும் என, மனுதாரர் விரும்பவில்லை.
மனசோர்வாலும், முடிவு எடுக்க முடியாததாலும், சிறுமி இறந்துள்ளார். சிறுமியின் இறப்பு, ஒவ்வொரு பெற்றோருக்கும் ஆசிரியருக்கும், இந்த சமூகத்துக்கும், ஒரு எச்சரிக்கை போன்றது.
மனுதாரர், பெற்றோருடன் வசிக்கிறார். ஏழை; கூலித் தொழிலாளி. கணிசமான நாட்கள் சிறையில் உள்ளார். புலன்விசாரணையில் குறுக்கிட முடியாது.
எனவே, மனுதாரருக்கு ஜாமின் வழங்கப்படுகிறது. இரண்டு வாரங்களுக்கு, திங்கள் மற்றும் வெள்ளி கிழமைகளில், சென்னை, கிண்டி, போலீசில் ஆஜராக வேண்டும். அதன்பின், தேவைப்படும் போது ஆஜராக வேண்டும்.
இவ்வாறு, நீதிபதி தேவதாஸ் உத்தரவிட்டுள்ளார்.

No comments:

Post a Comment