மதிப்பெண்களால் மனஉளைச்சலுக்கு ஆளாகி, தற்கொலை செய்து கொள்ளும், பிளஸ் 2 மாணவர்கள் எண்ணிக்கை, நடப்பாண்டு அதிகரித்து உள்ளது.
நம் கல்விமுறை குறித்து, பல ஆண்டுகளாகவே அதிகம் விவாதிக்கப்பட்டு வருகிறது. 'மனப்பாடம் செய்பவன், தரமான மாணவனா, மதிப்பெண்கள் மூலம் மாணவனின் தகுதியை தீர்மானிக்கலாமா?' போன்ற கேள்விகள், கல்வி ஆர்வலர்களால் எழுப்பப்படுகிறது.
அச்சம்
ஒவ்வொரு ஆண்டும், பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகளில், அதிக தேர்ச்சி விகிதம் அதிகரித்து வருவதால், தமிழகத்தில் கல்வி வளர்ச்சியடைந்து வருவதாக கூறப்பட்டாலும், தற்கொலை அதிகரித்து வருகிறது. தமிழக வரலாற்றில், முதன்முறையாக, 90 சதவீதத்தை, பிளஸ் 2 தேர்ச்சி விகிதம் தாண்டியது என, பெருமிதப்படும் அதே வேளையில், எந்த ஆண்டும் இல்லாத அளவுக்கு, தமிழகத்தில், தேர்வு முடிவுகளால், தற்கொலை செய்து கொள்ளும் மாணவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து உள்ளது.முன், தேர்வில் தேர்ச்சி பெற தவறினால், பெற்றோரிடம் திட்டு வாங்க வேண்டி வருமே என்ற அச்சத்தில், மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டனர்.
ஆனால், தற்போதோ, 1,000க்கும் மேல் மதிப்பெண் பெற்றவர்கள் கூட, எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கவில்லை என, தற்கொலை செய்து கொள்ளும் சூழல் உருவாகி உள்ளது.கடந்த 2012 - 13ம் கல்வியாண்டு, தேர்வு முடிவு வெளியிட்ட பின், தமிழகத்தில், 18 மாணவ, மாணவியர் தற்கொலை செய்து கொண்டனர். ஆனால், 2013 - 14ம் ஆண்டில், பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியான, ஒரு வாரத்தில், 30 மாணவ, மாணவியர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இதில், தான் எதிர்பார்த்த, அதிக மதிப்பெண்ணை, தன் மகன் எடுக்கவில்லை என, தந்தை தற்கொலை செய்து கொண்டதும் நிகழ்ந்துள்ளது.
சுய சிந்தனை
மதிப்பெண்கள் தான், வாழ்க்கையை தீர்மானிக்கிறதா, இவை தான் கல்வியின் வளர்ச்சியா என்றும், சுய சிந்தனை, புதிய கண்டுபிடிப்புகளை, கல்வித் துறை ஊக்குவிக்கிறதா என, சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகின்றனர். கல்வித் துறை வணிக மயமாக்கலால், விளம்பரங்களுக்கு மாணவர்களின் மதிப்பெண் தேவைப்படுகிறது. பல பள்ளிகளில், பிளஸ் 1 வகுப்பிலேயே, பிளஸ் 2 பாடங்கள் திணிக்கப்படுகிறது. அவர்களுக்கு விடுமுறை என்பதே கிடையாது.
விளையாட்டு என்கிற வார்த்தை கூட, தீண்டதகாத வார்த்தை ஆக்கப்பட்டு விட்டது.பெற்றோர், சமூகம், ஆசிரியர்,பள்ளி, அரசு என, அனைத்து தரப்பு உருவாக்கி வரும், அழுத்தத்தில், பொதுத்தேர்வு எழுத போகும் மாணவர்கள், மன உளைச்சலில் சிக்கி தவிக்கின்றனர்.தனியார் பள்ளிகளுக்கு இணையாக, மாணவர்களை மதிப்பெண் இயந்திரமாக மாற்ற வேண்டும் என, அரசு பள்ளிகளும், 'கோதா'வில் குதித்துள்ளன. காரணம், கல்வித் துறை அலுவலர்கள், ஒவ்வொரு ஆண்டும், தேர்ச்சி விகிதத்தின் அடிப்படையில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் முதல், ஆசிரியர் வரை, 'டார்கெட்' வைப்பது தான்.
திணிப்பு
தேர்ச்சி விகிதத்தில் சரிவு ஏற்பட்டால், 'மெமோ' மற்றும் 'சஸ்பெண்ட்' என, நடவடிக்கைகளும் எடுக்கப்படுகின்றன.மாவட்ட, மாநில அளவில் அதிக மதிப்பெண் எடுப்பவர்களுக்கு, உயர்கல்வி செலவு, பரிசு என, பல விதங்களில், மதிப்பெண்களின் முக்கியத்துவத்தை, அரசும், மாணவர்கள் மீது திணிக்கிறது.அரசு முதல் பக்கத்து வீட்டுக்காரர் வரை, மாணவனை, 'மார்க் ஸ்கோரிங் மிஷினாக' மட்டுமே பார்க்கின்றனர். மதிப்பெண் குறைந்தால், 'உலகமே உன்னை ஒதுக்கிவிடும்' எனும் அளவுக்கு, மாணவர்கள் மிரட்டப்படுகின்றனர். இதில் ஏற்படும் எதிர்பார்ப்புகளும், ஏமாற்றங்களும், மாணவர்களை எளிதில் தற்கொலை முடிவுக்கு தள்ளிவிடுகிறது.
கல்வியாளர்கள் சிலர் கூறியதாவது:
அரசு மற்றும் சமூகத்தின் கவனம், மதிப்பெண் என்பதில் இருந்து மாற வேண்டும். மத்திய அரசு, 10ம் வகுப்பு வரை தேர்வு தேவையில்லைஎன, அறிவித்த பின்னும், 10ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்ய, தமிழக அரசு தயக்கம் காட்டுகிறது.
மாற்றம் தேவை
நடப்பாண்டில், தொடர் மதிப்பீட்டு முறை, 10ம் வகுப்பில் அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டும், பெற்றோரிடம் அதிருப்தி கிளம்பும் என, கருதி, அதை நிறுத்தி வைத்துள்ளனர். மதிப்பெண்ணையும், தேர்ச்சி விகிதத்தையும் காட்டி, கல்வி முறை வளர்ச்சி அடைந்து விட்டதாக, நம்பும் போக்கு மாற வேண்டும்.தேர்வுக்கு முன், ஒவ்வொரு பள்ளியிலும், மாணவ, மாணவியரை மனதளவில் தயார்படுத்தவும், உளவியல் ரீதியாக அவர்களை கையாளவும், 'கவுன்சிலிங்' நடத்துவதை, கட்டாயமாக்க வேண்டும். அப்படி செய்தால் தான், தற்கொலை முயற்சியை ஓரளவுக்காவது கட்டுப்படுத்த முடியும்.அதிகரித்து வரும் மாணவர்களின் தற்கொலை எண்ணிக்கை, நிச்சயமாக, ஆரோக்கியமான சமூக வளர்ச்சி இல்லை.இவ்வாறு, அவர்கள் கூறினர்.
No comments:
Post a Comment