தேர்தலின் போது அரசு அலுவலர்களுக்கு மருத்துவ விடுப்புச் சான்று வழங்கியது தொடர்பாக திருவாரூர் அரசு மருத்துவர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
திருவாரூர் மாவட்ட ஆயுதப்படை மைதான காவலர் குடியிருப்புக் காவலர்களுக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவமனையில் மூத்த உறைவிட மருத்துவராக பணியாற்றி வந்தவர் மருத்துவர் சிவசுப்பிரமணியன்.
இவர் அண்மையில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் அரசு அலுவலர்கள் சிலருக்கு வாக்குச்சாவடியில் பணியாற்றுவதில் இருந்து விலக்கு பெறும் வகையில் மருத்துவ விடுப்புச் சான்றிதழ் வழங்கியதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து நாகப்பட்டினம் (தனி) மக்களவைத் தொகுதி உதவித் தேர்தல் நடத்தும் அலுவலர் மனோகரன், தேர்தல் நடத்தும் அலுவலரும், ஆட்சியருமான சி.நடராசனுக்கு புகார் அளித்தார்.
புகாரில், திருவாரூர் மாவட்டம் கோட்டூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் துணை வட்டார வளர்ச்சி அலுவலராக பணியாற்றும் வேதநாராயணன் என்பவருக்கு 25.3.2014 முதல் 24.4.2014 வரை மருத்துவ விடுப்புச் சான்றிதழ் கொடுத்ததாகதெரிவித்திருந்தார்.
இதுகுறித்து மாநிலத் தேர்தல் ஆணையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதையடுத்து, தேர்தல் ஆணையத்தின் அறிவுரைப்படி சென்னை மருத்துவப் பணிகள் இயக்குநர் சந்திரநாதன், சிவசுப்பிரமணியன் மீது துறைவாரியான நடவடிக்கை மேற்கொள்ளுமாறு திருவாரூர் மருத்துவப் பணிகள் இணை இயக்குநர் ஜெயக்குமாருக்கு 11.4.14லிஇல் உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து, சிவசுப்பிரமணியன் 21.4.2014 அன்று சீர்காழி அரசு மருத்துவமனைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.
No comments:
Post a Comment