இலவச மற்றும் கட்டாய கல்வி சட்டத்தின் (ஆர்.டி.இ.,), கீழ், மாணவர் சேர்க்கை நடத்துவதற்கான புதிய அட்டவணையை, மெட்ரிக் கல்வி இயக்குனரகம் வெளியிட்டு உள்ளது. மே, 29 தேதிக்குள், ஆர்.டி.இ., சேர்க்கை பணிகள் முடியும் வகையில், அட்டவணை தயாரிக்கப்பட்டு உள்ளது.
மே 20க்குள்...:
ஆர்.டி.இ., சட்டத்தின் படி, தனியார் பள்ளிகளில், சேர்க்கை நிலை வகுப்புகளில் உள்ள மொத்த இடங்களில், 25 சதவீதத்தை, ஏழை, எளிய, நலிந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு வழங்க வேண்டும். இதற்காக, ஏற்கனவே ஒரு அட்டவணையை, மெட்ரிக் பள்ளி இயக்குனரகம் வெளியிட்டு இருந்தது. அதில், 'ஆர்.டி.இ., இட ஒதுக்கீட்டு விண்ணப்பங்களை, மே, 3 முதல், 9 வரை வழங்க வேண்டும். ஒட்டுமொத்த மாணவர் சேர்க்கை பணிகளை, மே, 20க்குள் முடிக்க வேண்டும்' என, இயக்குனரகம் தெரிவித்து இருந்தது. இதில், 'விண்ணப்பம் வழங்குவதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும்' என, சென்னை, உயர் நீதிமன்றத்தில், பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து, விண்ணப்பம் வழங்கும் கால அவகாசத்தை, மே 18 வரை நீட்டித்து, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
குலுக்கல் முறை:
இதற்கு தகுந்தார்போல், புதிய அட்டவணையை, இயக்குனரகம் வெளியிட்டுள்ளது. 'வரும், 29ம் தேதிக்குள், இட ஒதுக்கீட்டின் கீழ் நடக்கும் மாணவர் சேர்க்கை பணிகளை முடிக்க வேண்டும்' என, புதிய அட்டவணையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அட்டவணை விவரம்:
* 25 சதவீத இட ஒதுக்கீட்டு இடங்கள் விவரம், இது தொடர்பான அறிக்கையை, மாவட்ட குழுவிடம் சமர்ப்பித்தல்; மொத்த இடங்களின் விவரங்களை, பள்ளி அறிவிப்பு பலகையில் வெளியிடுதல் ஆகிய பணிகளை, ஒவ்வொரு ஆண்டும், ஏப்ரல் 2ம் தேதி மேற்கொள்ள வேண்டும்.
* மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பை, மே 2ல் வெளியிட வேண்டும்.
* இட ஒதுக்கீட்டின் கீழ், மே 3 முதல், 18ம் தேதி வரை, விண்ணப்பம் வழங்க வேண்டும். விண்ணப்பங்களை, மே 18ம் தேதி, மாலை, 5:00 மணி வரை சமர்ப்பிக்கலாம்.
* இட ஒதுக்கீட்டின் கீழ் சேர தகுதி வாய்ந்த மாணவ, மாணவியரின் பெயர் பட்டியலையும், நிராகரிக்கப்பட்ட, தகுதி இல்லாத மாணவ, மாணவியரின் பெயர் பட்டியல், நிராகரித்ததற்கான காரணம் ஆகிய விவரங்களை, மே 20ம் தேதி, மாலை, 5:00 மணிக்குள், தனியார் பள்ளிகள் வெளியிட வேண்டும்.
* இட ஒதுக்கீட்டின் 25 சதவீத இடங்களுக்கு அதிகமாக விண்ணப்பங்கள் வந்தால், மே, 23ம் தேதி காலை, 10:30 மணிக்கு, குலுக்கல் முறையில், மாணவர் சேர்க்கையை நடத்த வேண்டும்.
* மே, 29ல், தேர்வு செய்யப்பட்ட மாணவ, மாணவியர் பட்டியலை ?வளியிடுவதுடன், அது குறித்த முழு விவரங்களையும், மாவட்ட குழுவிற்கு அளிக்க வேண்டும். இவ்வாறு, புதிய அட்டவணையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
No comments:
Post a Comment